உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் ! 

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் இலங்கை தேசியகீதம் !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் எனவும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதிஒதுக்கப்பட்டள்ளது. சுதந்திர தின நிகழ்வில் வாகன அணிவகுப்பு இல்லை. தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரம் பயன்படுத்தப்படும் எனவும் நிர்வாக அமைச்சர், மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலங்களில் சுதந்திர தின விழாவுக்கான செலவுகள் 250 மில்லியன் தொடங்கி 375 மில்லியன் வரை செலவிடப்பட்டிருந்தது. மேலும் 2018ஆம் ஆண்டு முதல் சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாத சூழல் நீடித்து வந்ததுடன் கடந்த ஆண்டு, நிகழ்வுகளின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை !

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவுக்கு மதுபானம் விற்பனை

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்க்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கு 83% மதுபானம் மற்றும் புகையிலை பாவனை காரணமாக இருப்பதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாவை மதுபாவனைக்காக செலவழித்து வந்ததாகவும் இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்த மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர், சம்பத் டி சேரம் , மதுப்பழக்கத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆண்டொன்றுக்கு 214 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருட்கள் தற்போது எங்கிருந்து வருகின்றன ..? – ரவிகரன் எம்.பி கேள்வி

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர் .

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசிடம் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழக மீனவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பேச்சுவார்த்தை மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடற்றொழிலாளர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார். உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு என தெரிவித்த அமைச்சர், நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம்.அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என்றார்.

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடாத்திய விவகாரம் பாரிய பேசுபொருளாகியுள்ள நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு

பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உட்பட மூவர் யாழில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று ரகசியமாக இந்த செயற்பாடு தொடர்பில் யாழ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களும் அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்குள், வடக்கு மாகாணத்தில் பதிவாகிய மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த 6ஆம் திகதி கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 15 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் கைதாகியிருந்தனர். கடந்த 12ம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் 12ம் திகதி கைதாகினர். இந்த நிலையிலேயே யாழில் குறித்த 3ஆவது சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 213 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 சிறுமிகள் கருத்தரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

வேலையற்ற பட்டதாரிகள் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்களை பெற முன்வர வேண்டுமென, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்> வேலையற்ற பட்டதாரிகளென தங்களை அடையாளப்படுத்தும் இவர்கள், முதலில் தனியார் துறையில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும். அரச துறையில் மாத்திரம் வேலைவாய்ப்பு வேண்டுமென இளைஞர், யுவதிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. அனைவருக்கும் அரச துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை. தனியார் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. எனவே, இன்றைய இளையோர் தனியார் துறையிலும் வேலை செய்ய முன்வர வேண்டும். அதைவிடுத்து வீதிகளில் இறங்கிப் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?. படித்தவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச பணிகள் கிடைத்தால் வேலை செய்யாமலேயே சம்பளம் எடுக்கலாம் என்ற எண்ணம் இளைஞர், யுவதிகளிலே காணப்படுவதை வெளிப்படுத்தும் நகைச்சுவை காணொலிகள் பலவும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டங்கள் தொடர்பில் வெளிவந்துள்ளது.

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

“இலங்கைக் கடல் எல்லையை அத்துமீற வேண்டாம் !” இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பதில் !

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் காயப்பட்டதற்கு, இந்திய வெளிவவாகார அமைச்சு, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரித்திருந்தது. அதன் பின் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாது. இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு நாட்டின் படகாக இருந்தாலும் சரி அவை கட்டாயம் கண்காணிக்கப்படும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்றனர். இந்திய மீனவர்களை கைது செய்ய முனைந்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் கடந்த ஆண்டு இந்திய மீனவர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்ததே. தென்பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் யாழில் சில ஆயிரம் மீனவர்கள் கடற்படை வீரரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

காயப்பட்ட மீனவர்களை பார்வையிடச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம் என்றார்.

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராமின் பதவி விலகல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. தேசம்நெற்றில் குறிப்பிட்டது போலவேஇ மீண்டும் ரகுராம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக தொடரவுள்ளார். கலைத்துறையின் காமுகப் பேராசிரியர்களுக்கு இருந்த பதட்டங்கள் தணிந்தது. பீடாதிபதி ரகுராம் இருக்கும் வரை அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் எடுபடவில்லை. பல லட்சம் சம்பளத்தோடு அதிகார மையங்களாக இவர்கள் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரி முகர்ந்து எறிந்துவிடுகின்றார்கள். பல பெண்கள் தற்போதைய நிலையால் அச்சமடைந்து போயுள்ளனர். முத்தையா யோகேஸ்வரி வலிந்து காணாமலாக்கப்பட்டது போல் தங்களுக்கும் நிகழுமோ என அஞ்சுகின்றன.
மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை பேரவை நீக்கியதையடுத்து பேரவையின் முடிவில் தாம் அதிருப்தியுறுவதாக தெரிவித்து ரகுராம் பதவி விலகியிருந்தார். கலைப்பீடாதிபதி ரகுராமுக்கும் கலைப்பீடத்தில்லிருந்த எஸ் சிவகஜன் அணிக்கும் இருந்த முரண்பாடு போதைவஸ்து எதிரான ரகுராமின் முயற்சிகளுக்கான தடையாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக காமுகர்களின் செல்வாக்கினால் ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ரகுராமுக்கு சார்பான கலைப்பீட மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளை சிதைக்க வேண்டாம் எனச் சுட்டிக்காட்டி வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அறிவித்திருந்தது. சம்பவம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் கல்வி அமைச்சு கோரியிருந்தது.
சம்பவம் தொடர்பான அறிக்கை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவால் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் காமுகர்களுக்கு எதிராகச் செயற்பட முடியவில்லை.
ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாகவும் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக மாணவர் ஒன்றியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த சிவகஜன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளை நோக்கி நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்திலிருந்து அதன் செயலாளர் ச. ரிசிவரன் மற்றும் பொருளாளர் ச. கிருத்திகன் விலகியுள்ளனர். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ம.சோமபாலன் ரகுராமுக்கு ஆதரவாக நடத்திய ஊடகசந்திப்பில் வெளியிட்டுள்ள கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தகவல்களை மறுப்பதாகவும், அதற்கு எதிர்ப்பினையும் கண்டனங்களையும் வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் போடும் குழாயடிச் சண்டையில் அவர்களது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரகுராமுக்கு ஆதரவு தெரிவித்த சோமபாலன் சக மாணவர்களுக்கு போதைப்பாக்கு வாங்கி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும் சோமபாலன் கலைப்பீடாதிபதி ரகுராமிடம் மதுப் போத்தல்களுடன் கையும்களவுமாக பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிவிவருகின்ற தகவல்கள் எல்லாம் கலைப்பீடம் எந்தளவு தூரம் சீரழிந்துபோயுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன. மாணவர்களை வழிப்படுத்த வேண்டியவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் பாலியல் குற்றவாளிகளாகவும், ஊழல்வாதிகளாகவும், சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் இருந்தமையால் மாணவர்களின் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
என்.பி.பி அரசாங்கம் கிளீன் சிறிலங்காவின் ஒரு அங்கமாக கிளீன் யப்னா (Clean Jaffna) யுனிவெசிற்றி என்ற திட்டத்தை அமுல்படுத்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் திருத்தி எடுக்க வேண்டும். ஒரு பெண் ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் உயர் கல்வி அமைச்சராகவும் உள்ள இந்த சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்கள் எவ்வித ஆபத்தும் இல்லாமல பாலியல் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தப்படாமல் போதைப் பொருள் பயமற்ற ஒரு கல்வி மையமாக யாழ் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கேட்ட விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். வாய்மையைப் பொய்மை என்றென்றும் வெல்லலமோ ? பாதிக்கப்பட்ட பெண்களின் பாவம் பீடாதிபதி ரகுராமை விடாது துரத்தும்

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’

ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.