உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிணையில் வெளிவந்த முன்னாள் எம்பி திலீபன் இந்தியாவில் கைது !

பிணையில் வெளிவந்த முன்னாள் எம்பி திலீபன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இந்தியாவில் கைதானார்.

முன்னாள் ஈபிடிபி வன்னி மாவட்ட எம்பி குலசிங்கம் திலீபன் காசோலை மோசடி முறைப்பாடொன்றை அடுத்து டிசம்பர் 19 ஆம் திகதி கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் வவுனியா மாவட்ட நீதிவானால் 15 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் போலிக் கடவுச்சீட்டில் இந்தியாவினூடாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குலசிங்கம் திலீபன் மதுரை விமானநிலையத்திற்கு இலங்கையிலிருந்து தனது சொந்தப் பெயரில் வந்ததாகவும் பின்னர் முகவர் ஊடாக போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. கைதான திலீபன் தமிழ்நாட்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் வழக்கு நடவடிக்கைகளுக்காக இவர் இலங்கை கொண்டு வரப்படலாம். சமீபங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் இருக்கும் போது வெளிநாடு தப்பிச் சென்றவர்கள் இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறார்கள்.

 

2.4: திலீபன் மட்டுமல்ல கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் கூட போலி கடவுச்சீட்டிடனூடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அகதி தஞ்சம் எடுத்து வாழ்கின்றனர். இவ்வாறு இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட தண்டனையிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதித் தஞ்சம் கோருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலங்களில் யாழில் கள்ள மணல் கடத்தி பிடிபட்டவர்களும், வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களும் வழக்கிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

‘தங்கம் ஐ லவ் யூ’ என்று வம்பிழுத்தவர் தலைக் காயத்துடன் மருத்துவமனையில் ! வலம்புரி ஹோட்டலில் எம்பி அர்ச்சுனாவுடன் தகராறு !

‘தங்கம் ஐ லவ் யூ’ என்று வம்பிழுத்தவர் தலைக் காயத்துடன் மருத்துவமனையில் ! வலம்புரி ஹோட்டலில் எம்பி அர்ச்சுனாவுடன் தகராறு !

 

பெப்ரவரி 11 ஆம் திகதி “ நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு காத்திருந்த வேளை தங்கை கவுசல்யா என்னிடம் சொன்னாள் எங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள்” என்று தனது முகநூலில் என்ன நடந்தது என்பதை பா உ அரச்சுனா தனது முகநூலில் விளக்கியுள்ளார்.

“சரி எடுத்துவிட்டுப் போகட்டும். வெளிநாட்டுக்காரர்களின் பணத்தில் உல்லாசமாக உணவு உண்கிறோம் என்று நான்கு போஸ்ட்களை போட்டுக் கொள்வார்கள் விடுங்கோ என்று சொல்லிவிட்டு நான் நிதானமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை முதன்முதலாக நிமிர்ந்து பார்த்த போது தங்கம் என்றும் ஐ லவ் யூ என்றும் கத்தியபடி இருவர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தேன். எதுவும் அறியாதவாறு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டது ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று” சுட்டிக்காட்டிய அர்ச்சுனா தொடர்ந்தும் என்ன நடந்தது என்பதை விபரித்தார்.

“தலையை குனிந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் மீண்டும் அமைதியானோம். எலக்சன் நேரம் பிச்சை எடுப்பாய் இப்போது என்ன சீன் ஓட்டுகிறாய் என சொல்லிக் கொண்டது அந்தக் கருத்த தாடி கொண்ட உருவம். மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். என்ன நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா என்று அதட்டி கேட்டார் அந்த பெரியவர். தலையை நிமிர்ந்து சொன்னேன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் தயவு செய்து குழப்ப வேண்டாம் சாப்பிட்டு முடிய கதைக்கின்றேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியான போது அந்த இரண்டாவது வில்லன் என் பின்னால் வந்து என் தோளில் கை வைத்து அமத்தியபடி உனக்கு நாங்கள் கதைப்பது கேட்கவில்லை என்று கேட்டார்.

கௌசல்யா சற்று பதட்டத்துடன் அண்ணா நாங்கள் போவோம் என்றாள். இரு என, கைகளை பற்றிய படி சொன்னேன்” என்று அடுத்தது என்ன நடந்தது என்பதை விலாவாரியாக விபரித்தார். பா உ அர்சுனாவின் விபரணம் வலம்புரியினால் வெளியிடப்பட்ட சிசிரிவியிலும் பதிவாகியுள்ளது.

அதன்பிறகு “எனது தொலைபேசியை எடுத்து அவர்கள் உரையாடுவதை வீடியோ பண்ணினேன். அப்போது பின்னால் இருந்தவர் என் முதுகில் குத்தி என்னுடைய போனை பறித்தார். மௌனமாக எழும்பி நின்றபடி தயவுசெய்து எனது போனை தரவும் என்று கேட்டேன். தர முடியாது என்று ஒருவர் சொல்ல மற்றையவர் அந்த போனை உடை மச்சான் என சொல்லிக் கொண்டார். வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னம் என்னுடைய போனை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தார். அதனை எடுத்துப் பார்த்தேன் எந்த உடைசலும் இருக்கவில்லை” நடந்ததை சுவாரஸ்யமாக விபரித்தார் அர்ச்சுனா. எதையும் கூட்டிக் குறைக்காமல் நடந்ததை விபரித்துள்ளார்.

“மௌனமாக அதனை எடுத்து காற் சட்டை பைக்குள் வைத்தபடி ஓடர் பண்ணிய சாப்பாட்டை டேக் எவே பண்ணித் தருமாறு கேட்டேன். அதற்குள் பின்னால் இருந்தவர் மறுபடியும் என் முதுகில் குத்தி பின்னாலிருந்து என்னை தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்தவை சம்பவம் “. என ‘யாழ்ப்பாணமும் வாழ்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும் ‘ என்ற தலைப்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அர்ச்சுனா.

மேற்படி சம்பவமானது யாழ்ப்பாணத்தில் வலம்புரி ஹோட்டல் கிறீன் கிறாஸ் எனும் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியிலிருந்து வந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் தனது நண்பர்களுடன் இணைந்து வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது அதேநேரத்தில் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா நரேன் இருவரையும் அவதூறாக பேசி தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

வலம்புரி ஹோட்டல் சிசிரிவி காணொலியும் அதையே காட்டுகின்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் வேறெங்கோ இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்த மேசைக்கு சென்று பேச்சுக் கொடுப்பதும், அவருடைய கையிலிருந்த ரெலிபோனை பிடுங்குவதும் கூட தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த அத்துமீறலை சகித்துக் கொண்ட அர்ச்சுனா ஒரு கட்டத்தில் திருப்பி தாக்கியதில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கும் பொறுப்பற்ற தன்மையும் கண்டிக்கப்பட வேண்டும். வலம்புரி ஹோட்டல் நிர்வாகம் தமது விடுதியின் உணவகத்திற்கு உணவருந்த வருபவர்களாக இருந்தாலும் சரி விடுதியில் தங்க வருபவர்களாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நடந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளின்படி அநாவசியமாக அடுத்தவர் மேசைக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாத போது சம்பாஷனையில் ஈடுபடுவது அவர்களை தொந்தரவு செய்வது என்பது கண்டிக்கப்பட வேண்டியது. குறிப்பாக கௌசல்யா நரேனை வம்புக்கு இழுத்தது ஆண்களின் பொதுப்புத்தியில் உள்ள கோளாறு. இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரத்தினம் சிறிகரனுக்கு கௌசல்யாவின் வயத்தில் ஒரு மகளும் உள்ளார். அப்படியிருந்தும் அவருக்கு தாயகத்தில் ஒரு இளம்பெண்ணோடு காதல் கேட்கின்றது. பொது வெளியில் அது என்ன நேரமாக இருந்தாலும் பெண்களிடம் அத்துமீறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

அதேநேரம் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்த அநாகரீகத்தை தடுக்காது இவற்றை வேடிக்கை பார்த்ததும் தவறு. வலம்புரி நிர்வாகம் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக இருந்தால் காவலாளர்கள் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு சிலரைப் பொறுத்தவரை இலங்கைக்கு சுற்றுலா வருபவர்கள் பல்வேறு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது நாளாந்த செய்தியாகிவிட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜேர்மனில் அகதியாக வாழும் இரத்தினம் ஶ்ரீஹரன் வலம்புரி விடுதியில் நடந்து கொண்ட மாதிரி ஜேர்மனியில் அடுத்தவர் உணவு உண்ணும் மேசைக்கு சென்று தொந்தரவு செய்திருந்தால் இப்போது அவர் ஜேர்மனியில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்.

சட்டத்தரணி கௌசல்யா நரேனிடம் அத்துமீறிய மாதிரியே பல பாலியல் ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் தமிழர்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றனர்.

ஒருபக்கம் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் மற்றும் உதவி செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும் மறுபுறம் பல சமூக சீரழிவுகளுக்கும் காரணமாகவுள்ளார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரான்ஸ்சில் இருந்து வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரிக்ரொக் ராசன் வீடு புகுந்து நபர் ஒருவரை கடத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து, பொலிஸார் முன்னிலையில் அந்நபரை தாக்கியதோடு அதனை வீடியோ பிடித்து ரிக்ரொக்கிலும் வெளியிட்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட கோபதாபங்களுக்கு பழிவாங்க ஆவா குழு போன்ற வாள்வெட்டுக்குழுக்களுக்கு பணம் அனுப்பி கூலிப்படையை வைத்து எதிரிகளை பழிவாங்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலே பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு அக்குடும்பங்களில் வாழும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் பாலியல் இலஞ்சம் என பல சீரழிவுகளில் ஈடுபடுகின்றனர்.

பணம் இருப்பதாலும் வெளிநாட்டில் வாழ்வதாலும் தாங்கள் இலங்கையில் உள்ளவர்களை விட மேலானவர்கள் என்ற மனப்பாங்கு அவர்களை இவ்வாறான வேண்டத்தகாத வேலைகளில் ஈடுபட வைக்கின்றது.

வெளிநாட்டுக் குடியுரிமையுடன் இலங்கையில் குற்றவியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின் இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும். மீண்டும் இலங்கை வர முடியாத மாதிரி விசா கட்டுப்பாடு போட வேண்டும். இவ்வாறான சில இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஒரு பெண்ணுடன் உணவருந்த செல்லும் போது கிண்டல் கேலிக்கும் ஆளாக வேண்டியிருந்தால், சமானியர்களின் நிலமை என்னவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விடயத்தில் யாழ் மையவாத ஊடகங்கள் வழமைபோலவே நடுநலை தவறியே செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதளங்களிலும் தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டிருந்தன. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன – சர்வதேச அரச உச்சிமாநாட்டில் ஜனாதிபதி அனுர !

 

துப்பாக்கிகளின் தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அச்சமளிக்கின்றன. சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கரையும் அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும்.  எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள்.  உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால், இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும்.

வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன.  சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் உலகுக்கு ஏற்ற வகையில், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி நாம்  பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.  எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

,துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது. இதனால், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

போதையில் பொலிஸார் – 17 பேர் பணி நீக்கம் !

ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களை உட்கொண்டதற்காக கடந்த நான்கு மாதங்களில் 17 அதிகாரிகளை இலங்கை பொலிஸ் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளின் பட்டியலை புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தொகுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகள் பரிசோதிக்கப்பட்டு பொலிஸ் திணைக்களத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அதிகாரிகள் மீது விசாரணைகள் நடந்து வருவதாகவும், அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் பல நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை மிகத் தீவிரமாக போதைப்பொருள் பாவனை பரவி வருவது தொடர்பிலும் இவற்றை கட்டுப்படுத்த வடக்கு மாகாண பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாகவும் பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

மீள வடக்கு நோக்கி அபிவிருத்தி திட்டங்கள் – புனரமைக்கப்படவுள்ள வடக்கு கிழக்கின் 2000 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகள் ! 

மீள வடக்கு நோக்கி அபிவிருத்தி திட்டங்கள் – புனரமைக்கப்படவுள்ள வடக்கு கிழக்கின் 2000 கிலோமீட்டர் கிராமப்புற வீதிகள் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,000 கி.மீ கிராமப்புற வீதிகளை புனரமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தில் 1,500 கி.மீ மற்றும் கிழக்கு மாகாணத்தில் 500 கி.மீ வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இது அனைத்து பிரதேச செயலகங்களிலும் மோசமான நிலையில் உள்ள வீதிகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு, சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உள்ளீடுகளுடன் சேர்ந்து, வளர்ச்சிக்கான முன்னுரிமை அடிப்படையில் சாலைகளை புனரமைக்க உதவும். இந்த திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இலங்கையில் 35 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் – இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி ! 

இலங்கையில் 35 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் – இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி !

 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார், வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக தெரியவருகின்றது.

இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தனர்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்துள்ளனர் எனவும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் மனோஜ் ரணகல.

மிகக்குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இலங்கையில் அதிகப்படியான விபத்து உயிரிழப்புகள் இடம்பெறுவது அபத்தமானது எனவும் மனித உயிர்களின் பெறுமதி தொடர்பில் மக்களிடையே அக்கறையீனம் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு மக்களுக்கு வழங்கிய உரையில் தெரிவித்திருந்தார்.

உலக வங்கியின் அறிக்கையின்படி, நாட்டில் வருடாந்தம் சுமார் 38,000 விபத்துகள் இடம்பெறுகின்றன. இதனால் சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் அதிக சனத்தொகையான 140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதி விபத்து மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது போலவே 2 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையிலும் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதிவிபத்து மரணங்கள் நிகழ்வது தீவிரமான தன்மை என்கின்றன ஆய்வுகள்

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

 

“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அம்பேக்கார் வழியில் யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உள்ளது ! விகாரையும் உள்ளது !

டாக்டர் அம்பேக்கார் வழியில் யாழில் 5 கிராமங்களில் பௌத்த பாடசாலைகள் உள்ளது ! விகாரையும் உள்ளது !

தமிழ் தேசியவாதிகளால் நூற்றாண்டு காலங்களாக ஒடுக்கப்படும் தமிழ் சமூகங்களுக்கும் உரிமைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதும் பௌத்தம் அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அம்மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர் எனத் தெரிவிக்கின்றார் டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தர்மு தர்மகுலசிங்கம். இவர் நேற்று தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் கரவெட்டி கன்பொல்ல, புத்தூர் உட்பட 5 கிராமங்களில் பௌத்த மதப் பாடசாலைகள் அமைக்கப்பட்டதாகவும் கரவெட்டி கன்பொல்ல கிராமத்தில் பௌத்த விகாரைக்கான இடம் தேசிய பௌத்த சங்கத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டொனால் ட்ரமின் பாணியில் அதிதீவிர வலதுசாரித்துவம் பேசும் தமிழ் தேசியவாதிகள் சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்து மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்ய முனைவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒடுக்கி வாழ்பவர்கள், இவர்கள் யாருக்கும் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு எவ்வித தகுதியும் இல்லை எனத் தெரிவித்தார் தர்மு தர்மகுலசிங்கம்

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

கலாச்சார அழிப்புக்கும் மக்கள் தொகையை குறைக்கும் திட்டங்களுக்கும் யு.எஸ் எய்ட் நிதியளிப்பு – விமல் வீரவன்ச

இலங்கையில் நாட்டின் கலாச்சாரத்தை அழித்து மக்கள் தொகையைக் குறைக்கும் திட்டங்களுக்கு USAID 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச,

“யு.எஸ் எய்ட்டினர் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர், குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகப் பிரச்சாரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பில் பெரும் ஊக்குவிப்புகளில் ஈடுபட்டனர். 7.9 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது ஒரு பெரிய தொகை. இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் இந்த நாட்டு மக்கள் விலைக்கு வாங்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களும் நிதியளிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியதுடன் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ USAID இலங்கையின் உள்ளூர் அரசியல் விடயங்களில் தலையீடு செய்ததாகவும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும் அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பெயரில் உள்ள எக்ஸ் கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.

முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

முப்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி !

 

மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 40,000/- ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெற்ற 36,000/- ரூபாவை அபராதமாக வசூலிக்க உத்தரவிட்டார்.