இலங்கையில் 35 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் – இருநூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலி !
கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார், வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக தெரியவருகின்றது.
இவ்வருடத்தின் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தனர்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்துள்ளனர் எனவும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் மனோஜ் ரணகல.
மிகக்குறைந்த சனத்தொகையை கொண்டுள்ள இலங்கையில் அதிகப்படியான விபத்து உயிரிழப்புகள் இடம்பெறுவது அபத்தமானது எனவும் மனித உயிர்களின் பெறுமதி தொடர்பில் மக்களிடையே அக்கறையீனம் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த ஆண்டு மக்களுக்கு வழங்கிய உரையில் தெரிவித்திருந்தார்.
உலக வங்கியின் அறிக்கையின்படி, நாட்டில் வருடாந்தம் சுமார் 38,000 விபத்துகள் இடம்பெறுகின்றன. இதனால் சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் அதிக சனத்தொகையான 140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதி விபத்து மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது போலவே 2 கோடி மக்கள் தொகையை கொண்ட இலங்கையிலும் ஒரு லட்சம் பேருக்கு 10 தொடங்கி 11 வீதிவிபத்து மரணங்கள் நிகழ்வது தீவிரமான தன்மை என்கின்றன ஆய்வுகள்