‘தங்கம் ஐ லவ் யூ’ என்று வம்பிழுத்தவர் தலைக் காயத்துடன் மருத்துவமனையில் ! வலம்புரி ஹோட்டலில் எம்பி அர்ச்சுனாவுடன் தகராறு !

‘தங்கம் ஐ லவ் யூ’ என்று வம்பிழுத்தவர் தலைக் காயத்துடன் மருத்துவமனையில் ! வலம்புரி ஹோட்டலில் எம்பி அர்ச்சுனாவுடன் தகராறு !

 

பெப்ரவரி 11 ஆம் திகதி “ நேற்றைய தினம் இரவு 10:25 மணி அளவில் நானும் தங்கை கவுசல்யாவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கின்ற ஒரு பிரபல்யமான உணவு சாலை ஒன்றிற்கு உணவருந்த சென்று உணவு ஓடர் செய்துவிட்டு காத்திருந்த வேளை தங்கை கவுசல்யா என்னிடம் சொன்னாள் எங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள்” என்று தனது முகநூலில் என்ன நடந்தது என்பதை பா உ அரச்சுனா தனது முகநூலில் விளக்கியுள்ளார்.

“சரி எடுத்துவிட்டுப் போகட்டும். வெளிநாட்டுக்காரர்களின் பணத்தில் உல்லாசமாக உணவு உண்கிறோம் என்று நான்கு போஸ்ட்களை போட்டுக் கொள்வார்கள் விடுங்கோ என்று சொல்லிவிட்டு நான் நிதானமாக அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை முதன்முதலாக நிமிர்ந்து பார்த்த போது தங்கம் என்றும் ஐ லவ் யூ என்றும் கத்தியபடி இருவர் எங்களை நோக்கி வருவதை அவதானித்தேன். எதுவும் அறியாதவாறு ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லிக் கொண்டது ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று” சுட்டிக்காட்டிய அர்ச்சுனா தொடர்ந்தும் என்ன நடந்தது என்பதை விபரித்தார்.

“தலையை குனிந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் மீண்டும் அமைதியானோம். எலக்சன் நேரம் பிச்சை எடுப்பாய் இப்போது என்ன சீன் ஓட்டுகிறாய் என சொல்லிக் கொண்டது அந்தக் கருத்த தாடி கொண்ட உருவம். மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். என்ன நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா என்று அதட்டி கேட்டார் அந்த பெரியவர். தலையை நிமிர்ந்து சொன்னேன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் தயவு செய்து குழப்ப வேண்டாம் சாப்பிட்டு முடிய கதைக்கின்றேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியான போது அந்த இரண்டாவது வில்லன் என் பின்னால் வந்து என் தோளில் கை வைத்து அமத்தியபடி உனக்கு நாங்கள் கதைப்பது கேட்கவில்லை என்று கேட்டார்.

கௌசல்யா சற்று பதட்டத்துடன் அண்ணா நாங்கள் போவோம் என்றாள். இரு என, கைகளை பற்றிய படி சொன்னேன்” என்று அடுத்தது என்ன நடந்தது என்பதை விலாவாரியாக விபரித்தார். பா உ அர்சுனாவின் விபரணம் வலம்புரியினால் வெளியிடப்பட்ட சிசிரிவியிலும் பதிவாகியுள்ளது.

அதன்பிறகு “எனது தொலைபேசியை எடுத்து அவர்கள் உரையாடுவதை வீடியோ பண்ணினேன். அப்போது பின்னால் இருந்தவர் என் முதுகில் குத்தி என்னுடைய போனை பறித்தார். மௌனமாக எழும்பி நின்றபடி தயவுசெய்து எனது போனை தரவும் என்று கேட்டேன். தர முடியாது என்று ஒருவர் சொல்ல மற்றையவர் அந்த போனை உடை மச்சான் என சொல்லிக் கொண்டார். வேண்டாம் என்று சொல்வதற்கு முன்னம் என்னுடைய போனை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தார். அதனை எடுத்துப் பார்த்தேன் எந்த உடைசலும் இருக்கவில்லை” நடந்ததை சுவாரஸ்யமாக விபரித்தார் அர்ச்சுனா. எதையும் கூட்டிக் குறைக்காமல் நடந்ததை விபரித்துள்ளார்.

“மௌனமாக அதனை எடுத்து காற் சட்டை பைக்குள் வைத்தபடி ஓடர் பண்ணிய சாப்பாட்டை டேக் எவே பண்ணித் தருமாறு கேட்டேன். அதற்குள் பின்னால் இருந்தவர் மறுபடியும் என் முதுகில் குத்தி பின்னாலிருந்து என்னை தாக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நடந்தவை சம்பவம் “. என ‘யாழ்ப்பாணமும் வாழ்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும் ‘ என்ற தலைப்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் அர்ச்சுனா.

மேற்படி சம்பவமானது யாழ்ப்பாணத்தில் வலம்புரி ஹோட்டல் கிறீன் கிறாஸ் எனும் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியிலிருந்து வந்த புலம்பெயர் தமிழரான இரத்தினம் ஶ்ரீஹரன் தனது நண்பர்களுடன் இணைந்து வலம்புரி ஹோட்டல் உணவகத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது அதேநேரத்தில் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா நரேன் இருவரையும் அவதூறாக பேசி தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

வலம்புரி ஹோட்டல் சிசிரிவி காணொலியும் அதையே காட்டுகின்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் வேறெங்கோ இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்த மேசைக்கு சென்று பேச்சுக் கொடுப்பதும், அவருடைய கையிலிருந்த ரெலிபோனை பிடுங்குவதும் கூட தெரிகிறது. ஆரம்பத்தில் இந்த அத்துமீறலை சகித்துக் கொண்ட அர்ச்சுனா ஒரு கட்டத்தில் திருப்பி தாக்கியதில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஹோட்டல் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கும் பொறுப்பற்ற தன்மையும் கண்டிக்கப்பட வேண்டும். வலம்புரி ஹோட்டல் நிர்வாகம் தமது விடுதியின் உணவகத்திற்கு உணவருந்த வருபவர்களாக இருந்தாலும் சரி விடுதியில் தங்க வருபவர்களாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நடந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளின்படி அநாவசியமாக அடுத்தவர் மேசைக்கு சென்று சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாத போது சம்பாஷனையில் ஈடுபடுவது அவர்களை தொந்தரவு செய்வது என்பது கண்டிக்கப்பட வேண்டியது. குறிப்பாக கௌசல்யா நரேனை வம்புக்கு இழுத்தது ஆண்களின் பொதுப்புத்தியில் உள்ள கோளாறு. இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரத்தினம் சிறிகரனுக்கு கௌசல்யாவின் வயத்தில் ஒரு மகளும் உள்ளார். அப்படியிருந்தும் அவருக்கு தாயகத்தில் ஒரு இளம்பெண்ணோடு காதல் கேட்கின்றது. பொது வெளியில் அது என்ன நேரமாக இருந்தாலும் பெண்களிடம் அத்துமீறுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

அதேநேரம் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்த அநாகரீகத்தை தடுக்காது இவற்றை வேடிக்கை பார்த்ததும் தவறு. வலம்புரி நிர்வாகம் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். மதுபான விடுதியுடன் கூடிய உணவகத்தை நடத்துவதாக இருந்தால் காவலாளர்கள் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு சிலரைப் பொறுத்தவரை இலங்கைக்கு சுற்றுலா வருபவர்கள் பல்வேறு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது நாளாந்த செய்தியாகிவிட்டது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஜேர்மனில் அகதியாக வாழும் இரத்தினம் ஶ்ரீஹரன் வலம்புரி விடுதியில் நடந்து கொண்ட மாதிரி ஜேர்மனியில் அடுத்தவர் உணவு உண்ணும் மேசைக்கு சென்று தொந்தரவு செய்திருந்தால் இப்போது அவர் ஜேர்மனியில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்.

சட்டத்தரணி கௌசல்யா நரேனிடம் அத்துமீறிய மாதிரியே பல பாலியல் ரீதியான வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் தமிழர்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்று வருகின்றனர்.

ஒருபக்கம் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் மற்றும் உதவி செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும் மறுபுறம் பல சமூக சீரழிவுகளுக்கும் காரணமாகவுள்ளார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரான்ஸ்சில் இருந்து வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரிக்ரொக் ராசன் வீடு புகுந்து நபர் ஒருவரை கடத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து, பொலிஸார் முன்னிலையில் அந்நபரை தாக்கியதோடு அதனை வீடியோ பிடித்து ரிக்ரொக்கிலும் வெளியிட்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட கோபதாபங்களுக்கு பழிவாங்க ஆவா குழு போன்ற வாள்வெட்டுக்குழுக்களுக்கு பணம் அனுப்பி கூலிப்படையை வைத்து எதிரிகளை பழிவாங்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலே பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவுவதாக கூறிக் கொண்டு அக்குடும்பங்களில் வாழும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் பாலியல் இலஞ்சம் என பல சீரழிவுகளில் ஈடுபடுகின்றனர்.

பணம் இருப்பதாலும் வெளிநாட்டில் வாழ்வதாலும் தாங்கள் இலங்கையில் உள்ளவர்களை விட மேலானவர்கள் என்ற மனப்பாங்கு அவர்களை இவ்வாறான வேண்டத்தகாத வேலைகளில் ஈடுபட வைக்கின்றது.

வெளிநாட்டுக் குடியுரிமையுடன் இலங்கையில் குற்றவியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின் இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும். மீண்டும் இலங்கை வர முடியாத மாதிரி விசா கட்டுப்பாடு போட வேண்டும். இவ்வாறான சில இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஒரு பெண்ணுடன் உணவருந்த செல்லும் போது கிண்டல் கேலிக்கும் ஆளாக வேண்டியிருந்தால், சமானியர்களின் நிலமை என்னவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விடயத்தில் யாழ் மையவாத ஊடகங்கள் வழமைபோலவே நடுநலை தவறியே செய்திகளை வெளியிட்டன. சமூக வலைதளங்களிலும் தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டிருந்தன. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *