உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும்.

 

அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.

 

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

 

உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும்.

 

யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.

 

எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

 

எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

நாட்டின் நலனுக்காகவே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கினேன் – முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

நாட்டின் நலனைகருத்தில்கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன எனவும் சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ள கோட்டாபய நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.

தொடரும் யுக்திய நடவடிக்கை – ஒரே நாளில் மேலும் 1024 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 1024 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு கோட்டாபாய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More …

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் !

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் – நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கைது – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கவலை !

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

“பச்சைத் தரை எங்கும் இரத்தக் கறை“ – பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக அனுஸ்டித்து ஆர்ப்பாட்டம் !

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரைப் பகுதியில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் அயல் மாவட்ட பெரும்பான்மைய இனத்தவரால் அங்கு கால் நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்கள், அழிவுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும், மேற்படி பிரதேசத்தில் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அகற்றி தங்கள் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக அனுஸ்டித்து ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் மயிலத்தமடு பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சற்தரை கோரிய பண்;ணையாளர்களின் போராட்டமானது கடந்த 126 நாட்களாக முன்னெடுத்து வரும் நிலையில் கடந்த காலங்களில் மேற்படி மேற்ச்சற் தரையில் கோலாகலமாகவும் பக்தியாகவும் தங்களின் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பட்டிப் பொங்கல் நிகழ்வினை பண்ணையாளர்கள் முன்னெடுத்து வந்த நிலையில் இம்முறை அங்கு அத்துமீறிய விவசாயத்தில் ஈடுபவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு இழைக்கும் அநியாயங்களை எதிர்த்து பட்டிப் பொங்கலைப் புறக்கணித்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

பச்சைத் தரை எங்கும் இரத்தக் கறை என்ற மகுடவாசகத்துடன் பண்ணையாளர்கள் மேலாடையின்று 126 வெற்றுப் பொங்கல் பாணைகள் சகிதம் குறித்த ஆர்ப்பாட்டம் காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று அங்கு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள், அரசியற் பிரதிநிதிகள் என்போருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் மேற்கொண்டு இறுதியில் பண்ணையாளர்களினால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அரசாங்க அதிபர் புதிதாக நியமனம் பெற்றவர் என்ற ரீதயில் அவர் மேற்படி விடங்களை கவனத்திற் கொள்வதாக தெரிவித்த வாக்குறுதிக்கு அமைவாக குறித்த ஆர்ப்பாட்டம் நிறைவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரிப்பு !

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலுள்ள அறைகளின் திறனைத் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கும் மேல் அரசாங்கம் செலவிடுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த கைதிகளில் 53 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 27 சிறைகளில் 187 கழிப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதுபார்க்கும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஆயிரத்து 795 கைதிகள் சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

நாம் அமைக்கும் அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் – ஹர்சடிசில்வா

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இட்ட பதிவில் இதனை தெரிவிதார் .

இதன்படி எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ள நாங்கள் சிறுவர் பாலியல் மற்றும் ஏனைய பாரிய இணைய குற்றங்களை தடுப்பதற்காக பாரிய தளங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.