கஜேந்திரகுமார் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை – இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் காட்டம்
தமிழ் மக்களுக்கு உகந்த தீர்வை எட்டுவது குறித்து கட்சி மிகவும் நிதானமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் செயற்படுகின்றது. ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக பாடம் எடுக்கவேண்டிய நிலையில் தமிழரசுக் கட்சி இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 22 ஆம் திகதி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் எமது மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமொன்றைப் பற்றித் தவறான விடயங்களைத் தெரிவித்திருந்ததன் காரணமாக இத்தெளிவுபடுத்தல் அவசியமாகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் அரசியலமைப்பு விவகாரம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கஜேந்திரகுமாருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் எவ்வித குழப்பங்களும் இடமில்லை. அவ்வாறிருக்கையில் சுமந்திரன் கட்சியின் பதில் பொதுச்செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் சி.வி.கே.சிவஞானம் அவரது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தமக்கு முன்னுக்குப்பின் முரணான பதிலை அனுப்பியிருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது மிகவும் அபத்தமானதாகும்.
தமது யோசனைகளுடன் ஏனைய தரப்பினரும் இணங்கிவரவேண்டும் எனும் அவரது கடும் நிலைப்பாட்டின் பின்னால் போகவேண்டிய வங்குரோத்து நிலை தமிழரசுக்கட்சிக்கு ஏற்புடையதல்ல – என்று தெரிவித்துள்ளார்.