தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது ! தனித்து நின்று எதையும் சாதிக்கவும் முடியாது ! சண்டைக்கு இழுப்பது திறமையல்ல !
சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கு சந்திரகுமாருடனான நேர்காணல்
தெருவில், சந்தியில் கதைப்பதை பாராளுமன்றத்தில் கதைப்பது தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத்தராது ! தனித்து நின்று எதையும் சாதிக்கவும் முடியாது ! சண்டைக்கு இழுப்பது திறமையல்ல !
சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் சங்கு சந்திரகுமாருடனான நேர்காணல்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
இலங்கை சந்தையில் இன்று சடுதியாக தங்கத்தின் விலை மிக அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று 22 கரட் தங்கத்தின் விலை 240,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 262,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 22 கரட் தங்கத்தின் விலை 167,000 ரூபாவாகவும், இன்றைய விலையுடன் ஒப்பிடும் போது 73,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது எனவும், 24 கரட் தங்கத்தின் விலை 177,000 ரூபாவாக காணப்பட்டதுடன் இன்றைய விலையுடன் ஒப்பிடும் போது 85,000 ரூபாவினால் அதிகரித்து உள்ளது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் .
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தீர்வை வரியினால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் மற்றும் தங்க முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முயற்சி செய்வதே தங்கத்தின் விலை அதிகரித்ததற்கு காரணம் என பொருளியல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காதலன் இறந்த செய்தி கேட்டு காதலி தற்கொலை !
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நேற்றைய தினம் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறிக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பாதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று விசாரணை செய்த போது இச் சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை பிரதான வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞனின் மரண செய்தியை அறிந்த வரணி பகுதியை சேர்ந்த காதலி வீட்டிலே தற்கொலை செய்து உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தந்தையின் டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மரணம் !
ஏப்ரல் 18 கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தை, தந்தை செலுத்திய டிப்பரின் சில்லுக்குள் சிக்கியே உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் உடற்கூற்று பரிசோதனைகளின் பின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்ற சம்பவம் ஏப்ரல் 13 இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மல்கந்துர பிரதேசத்தில் 19 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை இயக்க முயன்ற போது லொறியானது பின்னோக்கிப் பயணித்துள்ளது எனவே இதன்போது அங்கு இருந்த குழந்தை லொறியின் சக்கரத்தின் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலவேளை 5 நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தை அறிந்திருந்தால் அம்பாள் குளக் குடும்பத்தினர் சற்றுக் கவனம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. வாகனங்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் குழந்தைகள் இருக்கும் பட்சதித்தில் மேலதிக கவனத்தோடு தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் விபத்துக்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்ஜாக்கிரதையோடு எடுக்க வேண்டும். இது ஒரு வகையில் பெற்றோரின் அசட்டையீனம் கவனக்குறைவும் தான்.
ட்ரம்பின் அடாவடியிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான மனிதாபிமான உதவியை குறைத்துள்ளமையினால் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2026 ஆம் ஆண்டில் யுனிசெப் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான யுனிசெப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் யுனிசெப்பிற்கு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஐ.நா. அமைப்புகள் உட்பட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது. அதிலிருந்து யுனிசெப்பும் தப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் கரண்ட் கம்பமும் கரண்ட் பிரச்சினையும்: கள்ளக் கரண்டில் தன்குடும்பத்தை முன்னேற்றிவிட்டார் பா உ சிறிதரன்: பா உ இளங்குமரன் குற்றச்சாட்டு
‘இளங்குமரன் கரணட் கம்பம் என்றால் நாங்கள் கரண்ட். கரண்ட் அடிச்சால் தாங்கமாட்டார் என்று பா உ சிறிதரன் விட்டது கொலை மிரட்டல் எனத் தெரிவிக்கின்றார் பா உ இளங்குமரன். சிறிதரன் (கள்ளக்) கரண்டில் தன் குடும்பத்தை மட்டும் ஒளிமயமாக்கிவிட்டார் மக்களிடம் திருடிவிட்டார் எனக் குற்றம்சாட்டினார் பா உ இளங்குமரன். ஏப்ரல் 18இல் டான் தொலைக்காட்சியின் எதுசரி எது பிழை நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் பாராளுமன்றம் வரும்போது யாழ்ப்பாணத்தில் ஒரு நிலமும் இல்லாத சிறிவாத்திக்கு இப்போது யாழ்ப்பாணத்தில் எவ்வளவு காணி இருக்கின்றது. 24 மணி நேர சுப்பர்மார்க்கற் இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
இன்னும் சில விடயங்களை ஹோம்வேர்க் செய்து தேடாமல் சிறிதிரனின் மகன் கொழும்பில் கற்பதாகத் தெரிவித்தார். அவரின் இரு பிள்ளைகள் லண்டனில் கல்வி கற்பதை இளங்குமரன் அறிந்திருக்கவில்லை. மேலும் சிறிதரனின் மகன் யாழ் இந்துக்கல்லூரியில் படிக்கின்ற போது வாள் கொண்டு வெட்டியதையும் இளங்குமரன் சுட்டிக்காட்டியிருந்தார். கரண்ட் கம்பம் – கரண்ட் பிரச்சினையைத் தொடர்ந்து சிறதரனுக்கும் – இளங்குமரனுக்கும் இடையே நேரடி தர்க்கம் இடம்பெற்று வருகின்றது.
பா உ சிறிதரனின் பிரச்சாரப் பிரங்கியான அலன், 16 சிறார்களைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயத்தை சிறிதரன் காப்பாற்ற முயன்ற போது இளங்குமரன் விடயத்தை கொழும்புக்குத் தெரியப்படுத்தி இருந்தார். அலனை அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்ய அழுத்தம் வழங்கியமையே சிறிதரனின் கொந்தளிப்புக்கு காரணம் என்கிறார் பா உ இளங்குமரன்.
பிள்ளையான் கைது விவகாரம்: உண்மையை மறைத்து அனுதாபம் தேடும் முயற்சி – அமைச்சர் ஹந்துனெத்தி சாடல்
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக அல்ல, முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிள்ளையான் தொடர்பில் தவறான புரிதலை உருவாக்க உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என்றும், கம்மன்பிலவின் கருத்துகள் உண்மையை மறைத்து அனுதாபம் ஈர்க்கும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பிள்ளையான் 2015 முதல் 2020 வரை சிறையில் இருந்தவர் என நினைவுபடுத்திய அவர், 2019 குண்டுத் தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லையெனில் அதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
பிள்ளையான் தேசிய வீரன் என கூறும் கம்மன்பிலவை விமர்சித்த ஹந்துனெத்தி, “உதய கம்மன்பில சற்று அமைதியாக இருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரியா
தினசரி 1,000 கடிதங்களைப் பெறுவதாகவும், அதில் 900க்கும் மேற்பட்டவை கிராம மட்ட பிரச்சனைகள் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உள்ளுராட்சி மற்றும் நகர சபைகள் சரியாக செயல்பட்டால் இவை அனைத்தும் தீர்க்கப்படலாம் என்றார்.
“நான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாத அளவுக்கு இந்தக் கடிதங்கள் வருகின்றன. ஆனால் அவை எல்லாம் கீழ்மட்டத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சனைகள். அதனால் தான் உள்ளுராட்சி அமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மே 6ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல் நாட்டின் நிர்வாக அமைப்பை மேம்படுத்தும் முக்கிய மாற்றத்துக்கான ஆரம்ப கட்டமாக இருப்பதாகவும், இதன் மூலம் மேலிருந்து கீழ்வரை ஒரே நோக்கத்துடன் செயல்படும் அமைப்பை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சிகள் கதறுகின்றன ! தேர்தல் ஆணைக்குழு திணறுகிறது ! என்பிபி உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீட்டு வாய்ப்பு அதிகம் ! ஜனாதிபதி அனுர
யாழில், மன்னாரில் ஏப்ரல் 17, நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட உரை அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ஆனால் மற்றைய கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளுக்கு அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதை ஒன்றுக்கு பத்துதடவை யோசித்துத்தான் நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதே கருத்துப்பட நாட்டின் பல பாகங்களிலும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
மன்னாரில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க உள்ளுராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டது தமிழ் தேசியக் கட்சிகளைக் கதறவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இது மக்களை அச்சுறுத்தும் முயற்சி என்றும், தேர்தல் விதிமீறலாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழ் மக்கள் ஜனாதிபதி உரையின் பின்னணியை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதே கருத்தை வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எம் ஏ சுமந்திரன், ‘மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
பா உ சிறிதரன் ஜனாதிபதி அவ்வாறு செய்தால் தனிநாடு தமிழீழம் கோருவோம் என உசுப்பியுள்ளார். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்தான் ஆட்சியமைக்கும். இங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியாது என அரசாங்கம் கூறுமேயானால் எமக்கான தனிநாட்டை பிரித்துத் தருவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அதனை முன்னிறுத்தி நாம் பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு தயாராவோம்’ – இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பா உ சிறிதரனின் இந்த உசுப்பல் பேச்சுக்களுக்கு மக்கள் மசியவில்லை. அதனால் பொதுவேட்பாளர் அரயநேந்திரன் மண் கவ்வியமை தெரிந்ததே.
இந்த விடயம தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் குற்றம்சாடியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுவது ஒழுக்கத்துக்கு முரணானதாகும். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் ஜனாதிபதி அச்சுறுத்துகின்றார். ஜனாதிபதியால் தெரிவிக்கப்படும் இந்த கருத்துக்கள் முற்றுமுழுதாக தேர்தல் சட்டத்துக்கு முரணானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, மன்னாரில் தேர்தல் பிரசாரத்தின்போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தேர்தல் விதிமீறல் எனக் குறிப்பிட்டுத் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் ஏப்ரல் 21 அன்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக அரசியல் செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரயசேகரம், இவ்விடயத்தை ஜனாதிபதி அனுர வேறு விதமாகத் தெரிவித்து இருக்கலாம் என்றும் ஆனால் ஏனைய கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளுக்கு நிதியைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
உள்ளுராட்சி சபைகளில் தோல்வியுற்றால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் ! பொன்னம்பலம் கஜேந்திரகுமார்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்தால் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொகக்குவிலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று ஏப்ரல் 18இல் தெரிவித்தார்.
நேற்று ஏப்ரல் 17இல் யாழுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி தமிழ், சிங்களக் கட்சிகள் தையிட்டி விகாரை விடயத்திலிருந்து விலத்திக்கொண்டால் அப்பிரச்சினையை தன்னால் இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 18இல் யாழ் கொக்குவில்லில் பத்திரிகையார் சந்திப்பை ஏற்பாடு செய்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தாங்கள் தையிட்டி விகாரை விவகாரத்திலிருந்து ஒதுங்குவதற்குத் தயார் எனத் தெரிவித்தார். அச்சந்தர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவும் ஏனைய சிங்களத் தலைவர்கள் போன்ற மோசமான இனவாதியே எனவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.
‘வடக்கு கிழக்கில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். உள்ளுராட்சி சபைகளிலும் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள்’ என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடகச் சந்திப்பில் ஏப்ரல் 18இல் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எமக்கு வாக்களித்த மக்களை நாங்கள் ஒரு போதும் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்தார். நாட்டில் இனவாதம் மதவாதம் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே என அவர் வலியுறுத்தினார்.