செய்திகள்

செய்திகள்

செய்திகள்

குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் கைது

ஒன்றரை வயது ஆண் குழந்தையைக் கிணற்றில் வீசி தாயொருவர் கொலை செய்த சம்பவம் தங்கொட்டுவகெட்டியவெல பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கணவனுக்கும் இப்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே அவர் குழந்தையைக் கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தங்கொட்டுவ பொலிஸார் குழந்தையின் தாயாரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து தலைமறைவான தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குழந்தையின் சடலம் சிலாபம் ஆஸ்பத்திரியில் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் கட்டணங்களை 15 நாட்களுக்குள் அதிகரிக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம்

bus.jpgதனியார் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசுக்கு 15 நாள் காலக்கெடுவை விதித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளதுடன் இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

பஸ்கட்டண திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நாம் அரசுக்கு இம்மாத இறுதிவரை கால அவகாசம் வழங்கினோம் எனினும் எமது கால அவகாசம் முடிவடைவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அரசுக்கு மேலும் 15 தினங்கள் கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். கொழும்பில் நேற்று சனிக்கிழமை எமது சங்கத்தின் கூட்டம் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது பஸ் கட்டணங்களில் 7 வீத அதிகரிப்பை தேசிய கொள்கைக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் அதிகரிக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதேவேளை எமது சங்க கூட்டத்தின் போது குறைந்தபட்ச கட்டணம் முதல் அனைத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடபகுதி உள்சார் கட்டமைப்புக்கு இந்தியாவுடன் உடன்படிக்கை

வட பகுதியில் அரசாங்க, தனியார் உள்சார் கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்ப இந்தியா உதவியளிக்க முன்வந்திருப்பதுடன் பாரியளவிலான நிர்மாணப் பணிகளுக்கு பிந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.
பாரியளவில் புனர்வாழ்வு, மீள்கட்டுமான செயற்றிட்டத்தின் கீழ் கட்டிடங்கள், பொது வசதிகள் என்பவற்றை ஏற்படுத்துவதற்கான விடயங்கள் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் நிர்மாண, பொறியியல் சேவைகள் அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியாகியுள்ளது. அமைச்சின் நிர்மாணப் பிரிவில் ஐ.சி.ரீ.ஏ.டிக்கும் இந்தியாவின் நிர்மாண கைத்தொழில் துறை அபிவிருத்தி பேரவைக்கும் இடையில் கடந்த புதன்கிழமை ஒப்பந்தம் அமைச்சர் ராஜித சேனாரட்ண முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்தாலும் தமிழரின் அபிலாசைக்கான போராட்டம் முடியவில்லை – இரா. சம்பந்தன்

images-r-sam.jpgவடக்கே நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறார்களென்று சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை நண்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  கண்டி வீதியில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது;

இந்த நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை முடிந்துவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று அரசு கூறிவருகிறது.  அத்துடன், நாட்டில் எதுவித பிரச்சினைகளும் இல்லை. சகலரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் எனவும் அரசு கூறிவருகிறது.  எமது மக்களைப் பொறுத்தவரை சரித்திர ரீதியாக இந்த நாட்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம். எமது உரிமைக்காகவே போராடியும் வருகிறோம்.

குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி அமைப்பு முறையான இந்தக் கோரிக்கையை நாம் நீண்டகாலமாகவே விடுத்துவருகின்றோம்.  எமது சுயநிர்ணய உரிமையை,சரித்திர ரீதியாக நாம் வாழ்ந்து வரும் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது நீண்டகால போராட்டத்தின் ஒரு அங்கமே. அந்த போராட்டம் முடிவடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் அபிலாசைக்கான போராட்டம் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

எம்மை பொறுத்தவரையில் எமது அபிலாசைகள் பூர்த்தி அடைந்து ஒரு அரசியல் நிலைமை ஏற்பட்டால்தான் நாம் இந்த நாட்டில் சம உரிமையுடன் கௌரவத்துடன் சுயமரியாதையுடன் வாழ முடியும். அதனால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு தற்போது வவுனியா நகரில் வாழ்கின்ற மக்களையும் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களையும் சார்ந்தது.

நாம் யாரையும் எதிர்க்கவில்லை, வெறுக்கவில்லை இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களையும் நேசிக்கின்றோம். சகோதரர்களாக கருதுகின்றோம். ஆனால் எமக்கு இந்த நாட்டில் சமத்துவம், சம உரிமை, பாதுகாப்பு வேண்டும். இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் நாம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். என்றார்.

இந்தியாவின் முதல் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ins-arihant.jpgஇந்தியா வின்  முதலாவது,  முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணு சக்தியில் இயங்கக் கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் குர்சரண் கெளர் நீர்மூழ்கியைத் தொடங்கி வைத்தார்.

பல்வேறு கடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும். இதேபோல மூன்று கப்பல்களை இந்தியா வடிவமைத்து வருகிறது. அதில் முதல் கப்பல்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமுடையது. 6000 டன் எடையுடன் கூடியது. 2 ஆண்டுளுக்கு இது கடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இது கடற்படையில் சேர்க்கப்படும். அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா உருவாக்கி தொடங்கியிருப்பதன் மூலம், இத்தகைய கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கியைத் தொடங்கியிருப்பதன் மூலம் வான், நிலம் மற்றும் கடல் மார்க்கமாக அணு ஆயுதங்களைக் கையாளக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்பது முக்கியமானது.

அலரிவிதை உண்டு 9 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி; மாணவி மரணம்

images000.jpgஅலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற ஒன்பது மாணவர்களில் ஒரு மாணவி மரணமான சம்பவம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பக்கனே கங்கேயாய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 10 ஆம் தர மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இப்பாடசாலைவளவில் வைத்து இவர்கள் அலரி விதைகளை உட்கொண்டதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.  ஒரு மாணவி வாந்தியெடுத்து பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது தன்னுடன் சேர்ந்து அலரி விதைகளை உண்ட ஏனைய மாணவர்களின் விபரத்தை அவர் வெளியிட்டார்.

பொலநறுவை ஆஸ்பத்திரி நிர்வாகம் இது தொடர்பாக பொலநறுவை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் ஏனைய மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோருக்கு சம்பவத்தைக் கூறினார்கள். இதனையடுத்த மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளும் தம்புள்ளை ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை மோசமாகவே அவர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தம்புள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாணவர்களில் இருவர் பின்னர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

ஆறு மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பிறந்த தின வாழ்த்து அட்டைகள் மாணவன் ஒருவரின் புத்தகத்தில் இருந்து ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து திங்கட்கிழமை அதிபரிடம் இதனைக் கூறப்போவதாக ஆசிரியர் எச்சரித்ததே இவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணமென்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும்- ஜனாதிபதி

mahinda-rajapa.jpg“யுத்தத்தை முடித்து விட்டோம்; இந்த வெற்றியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீல.சு.கவினது பதுளைக் கிளை நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் ஸ்ரீல.சு.கட்சிக்கு அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், பிரிக்கப்பட்ட இந்த நாட்டை ஒன்றிணைத்து சுதந்திரத்தை மீட்டுத்தர வேண்டுமென எதிர்பார்த்து எமக்கு புள்ளடியிட்டதன் பயனை தாங்கள் தற்போது நன்றாகப் புரிந்திருப்பீர்கள். நாம் இன்று பயங்கரவாதிகளை ஒழித்தும், பயங்கரவாதிகளின் தலைவரையும் ஒழித்து நாட்டில் அனைவரும் அச்சமின்றி வாழும் ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம் இந்த வெற்றியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

காலாகாலமாக ஐ.தே.க. உறுப்பினர்கள் பெருமளவில் எம்முடன் இணைந்து கொண்டதற்கான காரணம் நாம் அண்மையில் பெற்றுக் கொண்ட வெற்றியின் காரணமாகும். இந்த நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒரு போதும் ஓரம்கட்டி விடவில்லை. தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் அச்சந்தர்ப்பத்திலும் கூட நாம் நாட்டின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். யுத்தத்தை காட்டி நாம் எப்போதும் எதையும் காலம் தாழ்த்த முடியாது. தற்போது நாட்டில் சுதந்திரமான ஒரு சூழ்நிலை நிலவியுள்ளதனால் அதிகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளப் பாடுபடுவோம்.

ஆனால், முன்பு அரசியல் செய்தவர், கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் திட்டங்களை அரசியல் வாக்குக்கு மட்டும் பயன்படுத்தினர். அரசியலில் தோல்வியை கண்டதும் அதை கைவிட்டுவிடுவார்கள். யுத்த காலத்திலும் கூட நுரைச்சோலை கொத்மலை திட்டங்களைக் கைவிடவில்லை. நாம் ஒரு போதும் வெறும் தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்.

யுத்தம் தொடர்பில் பல தலைவர்கள் எமக்கு உதவினார்கள், அதாவது பாதுகாப்பு தொடர்பில் ‘கிடைத்த தலைவரைக் கொண்டு யுத்தத்தை வென்றோம். அது போன்று அபிவிருத்தி தொடர்பிலும் எத்தனையோ பிரதேச, நகர், மாகாண சபை தலைவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எமக்குக் காட்டும் வழிகள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் நாம் உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரணவக்க எம்.பி. காலமானார்

sarath-ranawaka.jpgகளுத்துறை மாவட்ட ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க நேற்றுக் காலமானார்.  பல மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் காலமானார்.

புளத்சிங்கள, அகலவத்த தொகுதிகளின் ஐ.தே.கட்சி அமைப்பாளராக பதவி வகித்த சரத் ரணவக்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 15 வருடங்களுக்கு மேல் அங்கம் வகித்தார்.

ஈரான் பயணிகள் விமானம் ஓடுபாதை சுவரில் மோதி விபத்து – 17 பேர் பலி

25-iran-plane-crash.jpgஈரானில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையின் சுவற்றில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 153 பயணிகளுடன் மாஷாத்வந்த விமானம் ஒன்று மாஷாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

எதிர்பாராவிதமாக ஓடு பாதையின் நடுப்பகுதியில் விமானத்தை விமானி தரை இறக்கியதால் குறைந்த தூரமே உள்ள ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்து தீப்பிடித்தது. அவர்களில் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

பேருவளை கோஷ்டி மோதலில் மூவர் பலி நிலைமை கட்டுப்பாட்டில்; பலத்த பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலை தற்போது தணிந்து அமைதி நிலவுகிறது.

இரு கோஷ்டிகளுக்கிடையே நேற்று அதிகாலை 1.30 அளவில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர். இப் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது. வழமை போல் மக்கள் இப்பகுதிகளில் நடமாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது.

பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.