தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசுக்கு 15 நாள் காலக்கெடுவை விதித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளதுடன் இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
பஸ்கட்டண திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நாம் அரசுக்கு இம்மாத இறுதிவரை கால அவகாசம் வழங்கினோம் எனினும் எமது கால அவகாசம் முடிவடைவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அரசுக்கு மேலும் 15 தினங்கள் கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். கொழும்பில் நேற்று சனிக்கிழமை எமது சங்கத்தின் கூட்டம் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது பஸ் கட்டணங்களில் 7 வீத அதிகரிப்பை தேசிய கொள்கைக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் அதிகரிக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதேவேளை எமது சங்க கூட்டத்தின் போது குறைந்தபட்ச கட்டணம் முதல் அனைத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.