“யுத்தத்தை முடித்து விட்டோம்; இந்த வெற்றியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீல.சு.கவினது பதுளைக் கிளை நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் ஸ்ரீல.சு.கட்சிக்கு அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், பிரிக்கப்பட்ட இந்த நாட்டை ஒன்றிணைத்து சுதந்திரத்தை மீட்டுத்தர வேண்டுமென எதிர்பார்த்து எமக்கு புள்ளடியிட்டதன் பயனை தாங்கள் தற்போது நன்றாகப் புரிந்திருப்பீர்கள். நாம் இன்று பயங்கரவாதிகளை ஒழித்தும், பயங்கரவாதிகளின் தலைவரையும் ஒழித்து நாட்டில் அனைவரும் அச்சமின்றி வாழும் ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம் இந்த வெற்றியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.
காலாகாலமாக ஐ.தே.க. உறுப்பினர்கள் பெருமளவில் எம்முடன் இணைந்து கொண்டதற்கான காரணம் நாம் அண்மையில் பெற்றுக் கொண்ட வெற்றியின் காரணமாகும். இந்த நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒரு போதும் ஓரம்கட்டி விடவில்லை. தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் அச்சந்தர்ப்பத்திலும் கூட நாம் நாட்டின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். யுத்தத்தை காட்டி நாம் எப்போதும் எதையும் காலம் தாழ்த்த முடியாது. தற்போது நாட்டில் சுதந்திரமான ஒரு சூழ்நிலை நிலவியுள்ளதனால் அதிகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளப் பாடுபடுவோம்.
ஆனால், முன்பு அரசியல் செய்தவர், கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் திட்டங்களை அரசியல் வாக்குக்கு மட்டும் பயன்படுத்தினர். அரசியலில் தோல்வியை கண்டதும் அதை கைவிட்டுவிடுவார்கள். யுத்த காலத்திலும் கூட நுரைச்சோலை கொத்மலை திட்டங்களைக் கைவிடவில்லை. நாம் ஒரு போதும் வெறும் தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்.
யுத்தம் தொடர்பில் பல தலைவர்கள் எமக்கு உதவினார்கள், அதாவது பாதுகாப்பு தொடர்பில் ‘கிடைத்த தலைவரைக் கொண்டு யுத்தத்தை வென்றோம். அது போன்று அபிவிருத்தி தொடர்பிலும் எத்தனையோ பிரதேச, நகர், மாகாண சபை தலைவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எமக்குக் காட்டும் வழிகள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் நாம் உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.