அலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற ஒன்பது மாணவர்களில் ஒரு மாணவி மரணமான சம்பவம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பக்கனே கங்கேயாய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 10 ஆம் தர மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இப்பாடசாலைவளவில் வைத்து இவர்கள் அலரி விதைகளை உட்கொண்டதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு மாணவி வாந்தியெடுத்து பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது தன்னுடன் சேர்ந்து அலரி விதைகளை உண்ட ஏனைய மாணவர்களின் விபரத்தை அவர் வெளியிட்டார்.
பொலநறுவை ஆஸ்பத்திரி நிர்வாகம் இது தொடர்பாக பொலநறுவை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் ஏனைய மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோருக்கு சம்பவத்தைக் கூறினார்கள். இதனையடுத்த மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளும் தம்புள்ளை ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை மோசமாகவே அவர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தம்புள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாணவர்களில் இருவர் பின்னர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
ஆறு மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பிறந்த தின வாழ்த்து அட்டைகள் மாணவன் ஒருவரின் புத்தகத்தில் இருந்து ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து திங்கட்கிழமை அதிபரிடம் இதனைக் கூறப்போவதாக ஆசிரியர் எச்சரித்ததே இவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணமென்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.