வன்னியில் அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டிருக்கும் நிலக் கண்ணி வெடிகளின் மேல் அப்பாவி மக்களைத் தள்ளிவிட நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், இந்த நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கும், ஏலத்தில் விடுவதற்கும் நாம் ஒரு போதுமே இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ரன்பிம (தங்கபூமி) காணி உறுதி வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இப்போது சிலருக்கு கோஷங்கள் எழுப்புவதற்கு விடயங்கள் இல்லாதிருக்கின்றது. அதனால் கடந்த காலத்தில் யுத்தம், மனித உரிமை குறித்து பேசியவர்கள் இன்று இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாகவும், அவர்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துமாறும் கூறுகின்றனர்.
இந்த மக்களைப் புலிப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தே எமது படை வீரர்கள் மீட்டெடுத்தனர். இம்மக்களைப் பாதுகாத்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.
இம்மக்களைப் பராமரிப்பதற்காக நாளாந்தம் கோடிக்கணக்கான ரூபாக்களை செலவிடுவது அவர்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. எமக்கு அரசியலை விடவும் மக்களின் உயிர் முக்கியமானது.
அதனால் புலிகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் முழு உலகினதும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் அம்மக்களை நாம் விடுவித்தோம். இன்று இம்மக்களுக்காகப் பேசுபவர்கள் இம்மக்களைப் புலிகள் மனித கேடயங்களாகப் பாவித்ததை அன்று சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்களா? இல்லை. மாறாக எமக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என்று வங்கிகளிடமும், ஜி. எஸ். பி. பிளஸ் உதவியை நிறுத்துமாறுமே கூறி வந்தனர்.