இலங்கையில் இருந்து இம்முறை புனித மக்காவுக்கு யாத்திரை செல்வதற்காக 2800 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தக் கோட்டா தொகையை 5300 ஆக அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகச் செயற்படும் அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி சவூதி அரேபியா சென்றுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.
ஹஜ் ஏற்பாடு தொடர்பாக அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ் முகவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது ஹஜ் யாத்திரை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகள் கோட்டா தொகை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரம் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்வரென எதிர்பார்ப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார். இம்முறை இலங்கையில் இருந்து செல்ல 2800 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகை போதுமானது அல்ல எனவும் இதனால் மேலும் 2500 பேருக்கு மேலதிகமாக அனுமதி பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.