செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வவுனியா வடக்கு 8 பிரதேச செயலக பிரிவுகளில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgநிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு, மன்னக்குளம், கனகராயன்குளம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கில் இன்னும் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள் ளனர். இங்குட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  இங்கு அரச அலுவலகங்கள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதுடன் கனகராயன் மகா வித்தியாலயம், புளியங்குளம் வித்தியாலயம் ஆகிய இரண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீளத் திறக்கப்படுமென்றும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் புளொட்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல். அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்குத் தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது.

இப்போது யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் நியாயமான தீர்வொன்றைத் நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக்கூடாது. அதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்க்கூட்டமைப்பு ஆலோசனை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் கட்சியினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை வைக்கத் தமிழ் மக்கள் தயாரில்லை என்பதால் இவர்கள் இருவரில் ஒருவரை ஆதரிக்க முடியாத நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மீள்குடியேறியோருக்கு மேலும் ரூ.25,000: டிசம்பர் 15க்கு முன் கொடுப்பனவு

badi000000.jpgநிவாரண கிராமங்களிலிருந்து வடக்கில் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியபோது இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்ட அனைவருக்கும் மேலும் இருபத்தைந்தாயிரம் ரூபா எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். மீள்குடியேறுவோர் தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஏற்கனவே இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகை தற்போது ஐம்பதினாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் குடியேறுவோருக்கு இந்தத் தொகை பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், ஏற்கனவே குடியமர்ந்தவர்களுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் கூறினார். தமது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர்,

‘மக்கள் இடம்பெயர்ந்தபோது இருந்த நிலையைவிடவும் கூடுதலான வசதிகளுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவித்தே அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். இரண்டு ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தம்மிடமுள்ள கூடுதலான ஏக்கரில் விவசாயம் செய்ய விரும்பினால் சொந்தச் செலவில் செய்யலாம். ஆனால், அரசாங்கம் இரண்டு ஏக்கருக்கு மாத்திரமே உதவிசெய்யும். மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி உபகரணங்களும் ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.’ வவுனியா வடக்கில் இன்னும் நான்கு நாட்களில் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா பரவலான ஏற்பாடு மலையகமெங்கும் அமைப்புகளுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழல் உருவாக்கப்படுவது அவசியமாகும் பவ்ரல் அமைப்பு கோரிக்கை

இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்திக் கோரவுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத் தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருகின்றோம். 10,500 தேர்தல் தொகுதிகளில் ஒருவர் வீதம் நியமித்து கண்காணிக்கவுள்ளோம்.எமது கண்காணிப்புக்கு சக கண்காணிப்பு அமைப்புகளின் உதவி பெறவுள்ளதுடன் சர்வதேச கண்காணிப்பாளரையும் இணைத்துச் செயற்படவுள்ளோம்.

இவ்வாரம் தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளோம். இதன்போது இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளோர் வாக்களிப்பது மற்றும் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதியில் வதிவோர் வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.வாக்களிப்பின் போது அடையாள அட்டை இன்மை பிரச்சினை குறித்தும் ஆராயவுள்ளோம். இடம்பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பதவின்மையினால் வாக்களிக்க முடியாது போகும் சூழல் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென கோரவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவூதி பாலத்தின் கீழுள்ள இலங்கையருக்கான உணவு, குடிநீர் விநியோகம்

மழையால் ஸ்தம்பிதம்சவூதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஜெட்டா நகரிலுள்ள பாலத்தின் கீழ்தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான அகதிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் விநியோகம் கடந்த இரு நாட்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹுசைன் பைலா தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் தங்கியுள்ள இப்பாலத்தை அண்டிய பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கீழ் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ள போதிலும் இவ்வெள்ளப் பெருக்கினால் அப்பாலத்திற்குச் செல்லும் வீதி துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரு தினங்களாக அங்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகம் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் ஆரம்பத்தில், அந்நாட்டின் விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் உடனடியாக சொந்த நாடுகளிற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் அப்பாலத்தின் கீழ் தங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும்.

slmcraufhakeem.jpgஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென எமது கட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது.அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம். முதலில் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன் பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றார். இதன் போது புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர விளக்கமளிக்கையில் கூறியதாவது; எமது பொது வேட்பாளர் இராணுவ சீருடையை களைந்து அரசுக்களின் வாக்குகள் மூலம் ஜனாதிபதியாகவுள்ளார். சமையல் அறையிலிருந்த திருமதி பண்டாரநாயக்கவால் நாட்டை நிர்வகிக்க முடியுமாயின் ஏன் சரத் பொன்சேகாவக்கு முடியாது.

ஐக்கிய தேசிய முன்னணி மீதும் பொது வேட்பாளர் மீதும் புலி மற்றும் தேசத்துரோகியென முத்திரை குத்த முற்படவேண்டாமென அரச கோருகின்றேன். இதை மீறினால் நாம் கையைத் தூக்கி பேச வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் மன்னார் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வு

011109dag.jpgசமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை குறித்து ஆராய்ந்தார்.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடனான சந்திப்பின் போது வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. சமாதான சூழலில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு நேற்று அமைச்சர் அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளுககு சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கணனி இயந்திரங்கள், தளபாடங்கள், மற்றும் அலுமாரிகள் ஆகிய பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். மன்னார் மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இரு பரீட்சை நிலையங்கள்

sri-lankan-students.jpgமீளக் குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னதாக இடம் பெயர்ந்துள்ள மற்றும் மீளக் குடியமர்த்தப் பட்ட பகுதிகளிலுள்ள க. பொ. த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க பணிப்புரை விடுத்தார்.

நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சை தொடர்பாகவும் இடம் பெயர்ந்த மற்றும் நிவாரணக் கிராமங்களி லுள்ள மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பரீட்சை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போதே ஆணையாளர் அநுர எதிரிசிங்க மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.