செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கண்டி, வத்தேகம கல்வி வலயம்: 68 பாடசாலைகள் பெப்ரவரி 15 வரை பூட்டு

கண்டி மாநகர சபை வட்டாரம் உட்பட கண்டி, வத்தேகம ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த 68 பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இத்தகவலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் உட்பட 62 ஆவது சுதந்திர கொண்டாட்டங்கள் இம்முறை பள்ளேகலையில் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு 68 பாடசாலைகளும் மூடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தெயட்ட கிருல” என்ற கண்காட்சிகள் இதில் முக்கிய இடம் பெறுவதால் அங்கே கடமை புரியும் பொலிஸாருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தங்குமிடம் வசதியாகவே இவை மூடப்படுகின்றன. ஜீ. ஸி. ஈ. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் கண்டி புஷ்பதான மகளிர் பாடசாலை தவிர நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளும் இதன் காரணமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் லீவு நாட்களுக்குப் பதிலாக பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இடம்பெறும் சனிக்கிழமை நாட்களில் வகுப்புகளை நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார்.

‘சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு’ – சந்திரிகா குமாரதுங்க

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

65% க்கும் அதிகமான வாக்குகளால் ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதி – ஆளும் கட்சி செயலாளர்

mahindaஜனாதிபதித் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதே தங்களது நோக்கமென அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்த விடுதலைப் புலிகள் பிரச்சினையை துடைத்தெறிந்து அவ்வமைப்பைச் சேர்ந்த சர்வதேச ரீதியான சந்தேகநபர்களையும் கைது செய்து அபிவிருத்தித் திட்டங்களையும் வகுத்து தற்போது அதை செயற்படுத்துவதற்காக மக்கள் முன்னிலைக்கு வந்துள்ளார். மக்கள் மீதுள்ள நம்பிக்கையுடனேயே அவர் வந்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் சூழலும், பின்னணியும், தற்போதைய சூழ்நிலையும் வெவ்வேறானவை. தற்போது துப்பாக்கிச் சத்தங்களோ, குண்டு வெடிப்பு சத்தங்களோ, கிடையாது. மக்கள் எல்லைகளை கடந்து வந்து வாக்களிக்க வேண்டியதில்லை.

இதேநேரம், நாம் ஆரம்பத்திலிருந்தே முறையாக திட்டமிட்டு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமங்கள் வரை எமது பிரசாரங்கள் சென்றுள்ளன. எதிரணியினரை பொறுத்தவரை 5 சத வீதம் கூட கீழ் மட்டத்திற்கு அவர்களது பிரசாரம் சென்றடையவில்லை.

எம்மைப் பொறுத்தவரை இது புதுமையான தேர்தலில்லை. ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அவரது வெற்றியை உறுதி செய்வதிலேயே இந்த தேர்தல் எமக்கு முக்கியமாகிறது. இதுவே எமது நோக்கம். அத்துடன் நானும் ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இணைந்து வன்முறையில் ஈடுபட வேண்டாமென விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தனக்குத் தானே செய்து கொண்டதே தவிர கடந்த சில தினங்களில் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனவே, 27 ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றியின் பின்னரும் ஏனைய கட்சியினருக்கு எந்த கஸ்டங்களும், அசௌகரியங்களும், துன்புறுத்தல்களும் ஏற்படாத வகையில் வெற்றியை கொண்டாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

புதன்கிழமை நண்பகல் ஜெனரல் ஜனாதிபதியாவார் எவராலும் தடுக்க முடியாது; ரணில்

sa.jpgநாட்டில் இன்று ஜனநாயக ஆட்சியொன்று நடைபெறுவதில்லை எனவும் இராணுவ ஆட்சியை விடவும் மோசமானதொரு சர்வாதிகாரச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 26 ஆம் திகதியுடன் இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நேற்று நடைபெற்ற எதிரணிகளின் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியானால் இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு செல்லும் என்ற எதிரணியின் கூற்று பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. நான் உங்களிடம் கேட்கின்றேன் இன்று நடப்பது ஜனநாயக ஆட்சியா? இராணுவ ஆட்சியை விடவும் மோசமான தொரு ஆட்சியல்லவா? நடந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவேண்டும். இதன் பொருட்டே ஜனநாயகத்தை நேசிக்கும் சகல அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன.

1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தது நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாகும். ஆனால் அந்த அதிகாரம் இன்று தவறானவர்களின் கரங்களில் சிக்கி நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பூரண அதிகாரத்தை பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்.

அடுத்துவரும் புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்வோம். அதனூடாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வும் காணப்படும்.

ஜெனரல் சரத்பொன்சேகாவின் 10 அம்ச வேலைத்திட்டமானது மிகப்பெரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம். நூறு பக்கங்களில் கூட விபரிக்க முடியாதவற்றை 10 அம்சத்திட்டமாக முன்வைத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அவரோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் எம்மோடு பேச்சு நடத்தினர். அது ஆரோக்கியமானதாக அமைந்தது. பின்னர் அவர்கள் ஜே.வி.பி.யுடன் பேசவிரும்பினர். அதனை நாம் வரவேற்றோம். அந்தப் பேச்சுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைந்ததன் காரணமாக ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை எப்படி இரகசிய உடன்படிக்கை என்று கூறுவது.

ராஜபக்ஷ சகோதரர்கள் பிரபாகரனுடனும் புலிகளுடனும் 2005 இல் செய்துகொண்டது தான் இரகசிய உடன்படிக்கை. அது ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு செய்துகொள்ளப்பட்டது. அதன் பின்விளைவுகள் தான் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டன.

26 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதை தடுப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ எத்தகைய வேலையையும் செய்யத்தயாராக உள்ளார். ஆனால், நாட்டு மக்கள் இன, மத, மொழி, கட்சிபேதமின்றி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யத்தீர்மானித்து விட்டனர். 27 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலாகும் போது நாட்டின் ஜனாதிபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவாவதை இனிமேல் எவராலும் தடுக்க முடியாது என்று ரணில் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு?

sri-lankan-election-01jpg.jpgஜனாதி பதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு:

* வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது மூன்று வேட்பாளருக்குத் தமது விருப்பத் தெரிவின் ஒழுங்கில் வாக்களிக்க முடியும்.

* ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிக்க விரும்பும் வாக்காளர் தமது வாக்குச் சீட்டில் தான் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கும் சின்னத்துக்கும் அருகில் உள்ள கூட்டில் ‘X’ அடையாளத்தையிடலாம். அல்லது ‘1’ என்ற அடையாளத்தையோ இடுவதன் மூலம் தமது வாக்கை அளிக்க முடியும்.

* ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்புத் தெரிவின் அடிப்படையில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் தமது வாக்குச் சீட்டில் அந்த விருப்பத் தெரிவின் ஒழுங்குப்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கு எதிரே உள்ள கூட்டில் ‘1’, ‘2’, ‘3’ என்ற இலக்கங்களை வரிசைப்படி இடவேண்டும்.

அந்த வாக்காளர் ‘1’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் (அந்த வாக்காளரின்) முதல் தெரிவாகவும், ‘2’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வேட்பாளர் அவரின் இரண்டாவது தெரிவாகவும், ‘3’ என்ற இலக்கத்தைக் குறிப்பிடும் வாக்காளர் மூன்றாவது தெரிவாகவும் கருதப்படுவர்.

இதைவிட, முதலாவது தெரிவை ‘1’ எனக் குறிப்பிடாது விட்டுவிட்டு, ‘2’ மற்றும் ‘3’ தெரிவுகளை மட்டும் வாக்குச் சீட்டில் குறிப்பிட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதேசமயம், ஒரு வாக்காளர் தமது முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவைக் குறிப்பிட்டுவிட்டு, மூன்றாவது தெரிவைக் குறிப்பிடாமல் விட முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் வாக்கு எண்ணிக்கையில் அந்த வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் வாக்கு செல்லுபடியற்றதாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

* வாக்குச் சீட்டில் வேட்பாளர் எவருக்கும் வாக்களியாது விட்டால்.

* முதலாம் தெரிவைக் குறிப்பிடாது இரண்டாம், மூன்றாம் தெரிவைக் குறிப்பிட்டிருந்தால், இவ்வாறு தேர்தல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தவர்களுக்கு சிறை

விடுதலைப் புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. சதாஜன் சரசந்திரன் மற்றும் யோகராசா நடராசா ஆகிய இருவருக்கும் முறையே 26 மற்றும் 14 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள்.

திருக்கேதீஸ்வரம் ஆலயப் பிரதேசம் புனரமைப்பு

aalayam.jpgபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் ஆலயப் பகுதி புனித பிரதேசமாக 270 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மாசி மாதம் நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக ஆலயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் முதற்கட்ட வேலைகள் யாவற்றையும் பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இப்பகுதிக்கு

விஜயம் செய்து மக்கள் சுதந்திரமாக ஆல யத்திற்குச் சென்று வழிபாடு செய்வதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலயப்பகுதிக்கு மக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது. சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மறுநாள் காலை பாலாவி கடல் நீரேரியில் தீர்த்த மாடுவதற்கு ஏதுவாக புனரமைப்பும் செய்யப்படுகிறது.

இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்

lttelogo1.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

23.01.2010

இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும்.

பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல்.

தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் சிங்கக் கொடி ஏற்றி விட்டு நடாத்தப்படுகிறது.

இதற்குத்தான் ஜனநாயகம் என சிங்கள பேரினவாதம் பெயர் வைத்துள்ளது.

ஒடுக்குமுறைக்கும் இடம் பெயர்தலுக்கும் இரத்தக்களறிக்கும் சிங்கள பேரினவாதம் வைத்தருக்கும் பெயர்தான் ஜனநாயகம். இன உரிமைக்காய் போராடியவர்களை கொடும் சிறைக்குள் அடைத்துவைத்தும் சமாதானம் பேசியவர்களை கொன்று ஒழித்தும் ஈவிரக்கமற்ற அநீதிகள் புரிந்த பதவியின் பெயர்தான் இலங்கையின் ஜனாதிபதி.

இதற்குத்தான் இப்போது தேர்தல்.

தேர்தல் சமயங்களில் தம்மை நல்லவர் போல் காட்டி சமாதானம் பேசி அப்பாவிகளான தமிழ்மக்களை நம்பவைத்து மீண்டும் ஏமாற்றி அவர்களை ஒடுக்குவதுதான் இலங்கை ஜனாதிபதி தேர்தல். சிங்கள பேரினவாதம் தன்னை வளர்த்துக்கொள்ளுவதற்காகாவும் தமிழர் ஒடுக்குமுறைக்காக சில மாற்றங்களைச் செய்துகொள்ளுவதும்தான் இந்த தேர்தல்களின் வெளிப்பாடுகளும் முடிவுகளுமாக இருக்கும்.

ஆனால் இதில் போட்டியிடும் பேரினவாதிகளுக்குள் தமிழ் இன ஒடுக்குமுறைக்கொள்கையில் எந்தக் கருத்துவேறுபாடும் இருக்காது.  இதுவரை காலமும் ஏற்படாத மனித பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர் இரத்தத்தில் கொடியேற்றிய இந்த ஜனாதிபதி தேர்தல் ஈழத் தமிழர்களின் துக்க தினமாகும்.

தமிழீழத்தில் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்த தேர்தல் நாளை இனப்படுகொலையின் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி வேண்டுகிறோம். புலம் பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கு எமது அவலம் தெரியும்படி கறுப்புக்கொடிகள் ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.

நன்றி

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு 69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்

sri-lanka.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:-

அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது.

27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.