ஜனாதிபதித் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதே தங்களது நோக்கமென அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்த விடுதலைப் புலிகள் பிரச்சினையை துடைத்தெறிந்து அவ்வமைப்பைச் சேர்ந்த சர்வதேச ரீதியான சந்தேகநபர்களையும் கைது செய்து அபிவிருத்தித் திட்டங்களையும் வகுத்து தற்போது அதை செயற்படுத்துவதற்காக மக்கள் முன்னிலைக்கு வந்துள்ளார். மக்கள் மீதுள்ள நம்பிக்கையுடனேயே அவர் வந்திருக்கிறார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் சூழலும், பின்னணியும், தற்போதைய சூழ்நிலையும் வெவ்வேறானவை. தற்போது துப்பாக்கிச் சத்தங்களோ, குண்டு வெடிப்பு சத்தங்களோ, கிடையாது. மக்கள் எல்லைகளை கடந்து வந்து வாக்களிக்க வேண்டியதில்லை.
இதேநேரம், நாம் ஆரம்பத்திலிருந்தே முறையாக திட்டமிட்டு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமங்கள் வரை எமது பிரசாரங்கள் சென்றுள்ளன. எதிரணியினரை பொறுத்தவரை 5 சத வீதம் கூட கீழ் மட்டத்திற்கு அவர்களது பிரசாரம் சென்றடையவில்லை.
எம்மைப் பொறுத்தவரை இது புதுமையான தேர்தலில்லை. ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. எனினும் 65 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அவரது வெற்றியை உறுதி செய்வதிலேயே இந்த தேர்தல் எமக்கு முக்கியமாகிறது. இதுவே எமது நோக்கம். அத்துடன் நானும் ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இணைந்து வன்முறையில் ஈடுபட வேண்டாமென விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல பிரதிபலன் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தனக்குத் தானே செய்து கொண்டதே தவிர கடந்த சில தினங்களில் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
எனவே, 27 ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றியின் பின்னரும் ஏனைய கட்சியினருக்கு எந்த கஸ்டங்களும், அசௌகரியங்களும், துன்புறுத்தல்களும் ஏற்படாத வகையில் வெற்றியை கொண்டாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.