நாட்டில் இன்று ஜனநாயக ஆட்சியொன்று நடைபெறுவதில்லை எனவும் இராணுவ ஆட்சியை விடவும் மோசமானதொரு சர்வாதிகாரச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 26 ஆம் திகதியுடன் இந்த அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ஜெய்க் ஹில்டனில் நேற்று நடைபெற்ற எதிரணிகளின் கட்சித் தலைவர்களின் செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதியானால் இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு செல்லும் என்ற எதிரணியின் கூற்று பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. நான் உங்களிடம் கேட்கின்றேன் இன்று நடப்பது ஜனநாயக ஆட்சியா? இராணுவ ஆட்சியை விடவும் மோசமான தொரு ஆட்சியல்லவா? நடந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவேண்டும். இதன் பொருட்டே ஜனநாயகத்தை நேசிக்கும் சகல அரசியல் சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன.
1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தது நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாகும். ஆனால் அந்த அதிகாரம் இன்று தவறானவர்களின் கரங்களில் சிக்கி நாட்டை அழிவு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பூரண அதிகாரத்தை பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம்.
அடுத்துவரும் புதிய அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்வோம். அதனூடாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வும் காணப்படும்.
ஜெனரல் சரத்பொன்சேகாவின் 10 அம்ச வேலைத்திட்டமானது மிகப்பெரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம். நூறு பக்கங்களில் கூட விபரிக்க முடியாதவற்றை 10 அம்சத்திட்டமாக முன்வைத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அவரோடு இணைந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட ஏற்றுக்கொண்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் எம்மோடு பேச்சு நடத்தினர். அது ஆரோக்கியமானதாக அமைந்தது. பின்னர் அவர்கள் ஜே.வி.பி.யுடன் பேசவிரும்பினர். அதனை நாம் வரவேற்றோம். அந்தப் பேச்சுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைந்ததன் காரணமாக ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை எப்படி இரகசிய உடன்படிக்கை என்று கூறுவது.
ராஜபக்ஷ சகோதரர்கள் பிரபாகரனுடனும் புலிகளுடனும் 2005 இல் செய்துகொண்டது தான் இரகசிய உடன்படிக்கை. அது ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு செய்துகொள்ளப்பட்டது. அதன் பின்விளைவுகள் தான் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டன.
26 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதை தடுப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ எத்தகைய வேலையையும் செய்யத்தயாராக உள்ளார். ஆனால், நாட்டு மக்கள் இன, மத, மொழி, கட்சிபேதமின்றி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யத்தீர்மானித்து விட்டனர். 27 ஆம் திகதி புதன்கிழமை நண்பகலாகும் போது நாட்டின் ஜனாதிபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவாவதை இனிமேல் எவராலும் தடுக்க முடியாது என்று ரணில் தெரிவித்தார்.