செய்திகள்
செய்திகள்
செய்திகள்
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது.
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார். இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது. இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது.
ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.
தமிழ்க் கூட்டமைப்புபாரிய பேரழிவுக்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதா அல்லது தன்மானத்துடன் கௌரவமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று வாழ்வதா என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானிக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் “வீடு” சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று ஞாயிறு காலை ஆலங்கேணி, ஈச்சந்தீவு கிராமங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சம்பந்தன் பேசினார். ஏப்ரல் 8 பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பலம் வாய்ந்த அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லும் வாய்ப்பு உருவாகி வருகிறது. வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ். ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் இதற்கான எழுச்சி,ஆர்வம் அதிகரித்து வருகின்றது. திருகோணமலை மாவட்டத்திலும் தமிழர் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியை முறியடிக்கவும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வருகின்றனர். தமிழ் மக்களின் பூரணஅங்கீகாரம் பெற்ற பலம்வாய்ந்த அணியாகப் பாராளுமன்றம் செல்வது உறுதியாகி விட்டது என்றும் சம்பந்தன் கூறினார். வெளிவிவகாரம், தேசிய நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றைத் தவிர்த்து ஏனைய அதிகாரங்களை சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தமிழ் பேசும் மக்களுக்கு அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தாயகத்தை நிர்வகிக்கக் கூடியதாக வழங்கப்பட வேண்டும் என்று தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு முதன் முதலாகக் குரல் கொடுத்தார். அதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது என்றும் சம்பந்தன் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திரு ப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து 16 பேர் இலங்கை வந்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப் பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இவர்கள் இருவர் வீதம் எட்டுக் குழுக்களாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண் காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சி. எம். ஈ. வி. அமைப்பு இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்திருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, சுமார் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கென 565 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி, பெப்ரல் அமைப்பு 11,000 க்கும் மேற்பட்டோரை உள்ளூர்க் கண்காணிப்பாளராகப் பயன் படுத்தவுள்ளது. அதேநேரம், சீ. எம். ஈ. வி. சுமார் நான்காயிரம் பேரை ஈடுபடுத்தவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பிரதான கட்சிகளின் முக்கிய கூட்டங்கள் பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளன. ஐ. ம. சு. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மித்தெனியவில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தவிர அமைச்சர்கள் தலைமையிலான முக்கிய கூட்டங்களும் பல மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியும் இன்று பலபிரசாரக் கூட்டங்களை நடத்த உள்ளது. ஐ. தே. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மாலை கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடைபெறும். ஜனநாயக தேசிய முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜே. வி. பி. தலைவர்கள், மற்றும் அநோமா பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கம்பஹாவில் நடைபெற உள்ளது. இதேவேளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.
தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (6) முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கவுள்ளதோடு 7ஆம் திகதி வாக்குப் பெட்டிகள் எடுக்கச் செல்லப்பட உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வெற்று வாக்குப் பெட்டிகளுக்குள் ‘ஸ்ரிக்கர்’ ஒன்றை ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அவ்வாறு ‘ஸ்ரிக்கர்’ ஒட்ட விரும்பும் பிரதிநிதிகள் தேர்தல் தினம் காலை 6.30 மணிக்கு முன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு கேட்கப்படுகின்றனர். அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சில தொகுதிகளில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவரை உதவியாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைபௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியமை தொடர்பாக நூல்கள் எழுதியமை தொடர்பாக கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாலினி பெரேரா என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை கடந்தவார இறுதியில் கைதுசெய்திருப்பதாகபொலிஸார் தெரிவித்ததாகவும் ஆயினும், அது தொடர்பாக விபரித்திருக்கவில்லை என்றும் ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்தது.
இஸ்லாமியப் போராளிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.அவர் மீது இன்னமும் முறைப்படி குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யவில்லை. ஏனெனில் பொலிஸார் தற்போதும் விசாரணை நடத்திவருகின்றனர் என்று ஜயக்கொடி கூறியுள்ளார். உணர்வுபூர்வமற்ற வகையில் மத ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவரும் பாஹ்ரெய்னில் வசிப்பவருமான இந்த நூலாசிரியர் இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்த சமயம் கைதுசெய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தனது நூல்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தபோது அவர் கைதானார். “இருளிலிருந்து வெளிச்சத்துக்கு” “கேள்விகளும் பதில்களும்” என்பனவே அந்த நூல்களாகும். மத சகிப்புணர்வின்மைக்கு எழுத்தாளர் பலியாகியிருப்பதாக மாலினி பெரேராவின் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் கூறியுள்ளார். மத ரீதியான தீவிரவாதிகளுடன் மாலினி பெரேராவுக்கு ஏதாவது தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது உட்பட சகல குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருக்கிறார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்த பௌத்த பிக்குகள் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிக்குமார் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தை பொலிஸார் சனிக்கிழமை இரவு அகற்றிய போதும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதென அவர்கள் தீர்மானித்துள்ளனர். “ஜெனரலை விடுதலை செய்யும் மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த பிக்குமார் குழுவே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது
சட்டதிற்கு முன் அனைவரும் சமமானவர்களே. அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (3ம் திகதி) தெரிவித்தார். பொதுத் தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐ. ம.சு. மு. மாவட்ட மட்டத்தில் நடத்திய பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கொஸ்வத்தை, புத்ததாச விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில் :-
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் மேலதிக வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு செய்த உங்களுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அன்று என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்திராவிட்டால் இன்று நான் 2 x 2 கூட்டிலோ அல்லது 2 x 6 குழியிலோதான் இருந்திருப்பேன். நான் 2 x 2 கூட்டில் இருந்திருக்கின்றேன். ஆனால் அங்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. எனது தாயார் சுகவீனமுற்றிருந்த போதிலும் அவரது இறுதிக் கிரியைகளுக்காகவே என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுவும் கைவிலங்கு போட்டே அழைத்துச் சென்றனர்.
அன்று ஜனநாயகம் செத்திருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. நாம் ஜனநாயக விழுமிய நெறிகளின் படி தேர்தல்களை நடத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலைக் கூட இரு வருடங்களுக்கு முன்னரே நடத்தினோம். நாம் இந்த நாட்டின் மனித உரிமைகளுக்காக கதைத்தவர்கள் மட்டுமல்லாமல் அதனை பாதுகாக்கவும் செயற்பட்டவர்கள். சட்டத்திற்கு முன் சகலரும் சமம். அன்று உச்ச நீதிமன்ற வரையறைகளுக்கும் அப்பால் சென்று தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும், நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். நான் உச்ச நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட விரும்பாத ஜனாதிபதியாவேன்.
ஜனநாயகத்தைப் போன்று சட்டமும், நீதியும் பாதுகாக்கப்பட வேண்டுமென நான் உறுதியாக நம்புகின்றேன். யுத்தம் நடைபெற்ற போதிலும் நாம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைக் கைவிடவில்லை. எமக்கு உலகளாவிய நெருக்குதல் ஏற்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நெருக்குதல்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். எமது தாய் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சிலர் குழுக்களாக இணைந்து செயற்பட்டனர். அவற்றின் முன்பாக நாம் சளைத்துவிடவில்லை. தற்போதைய அரசியல் யாப்புப் படி தவறு செய்தால் ஜனாதிபதி தவிர பிரதமர், உச்ச நீதிமன்ற நீதியரசர் உட்பட சகலரும் தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள். மக்களுக்கு ஒரு நீதியும், அபேட்சகர்களுக்கு இன்னொரு நீதியும் கிடையாது. இந்த நாட்டில் சக்திபடைத்தவர்கள் முதல் சாதாரண ஏழைகள் வரையும் சகலருக்கும் சட்டம் ஒன்று தான். அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை.
உணவுக்காக கடன் வாங்கும் கொள்கை எம்மிடம் கிடையாது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் உணவுக்காகப் பெற்ற கடனை இன்றும் வட்டியுடன் திருப்பி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை நாம் உள்ளூர் விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். இதனடிப்படையில் விவசாயிகளை ஊக்குவிக்கவென உரமானியம், நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். நாம் செயல்திறன் மிக்கவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.
அதனால் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதன் பின்னர் மூன்று விருப்பு வாக்குகளையும் பாவியுங்கள் என்றார். இக்கூட்டத்தில் ஐ. ம. சு. மு.யின் கொழும்பு மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க, முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச, சுதர்மன் ரதலிய கொட, துமிந்த சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
அரசியல் நாகரீகம் வேண்டும். ஏனையோரைப் பற்றித் தூற்றிப் பேசுவதை முற்றாவிட்டுவிட வேண்டும். ஒருவருடைய குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து மேடைகளில் அவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்திக்காட்டுவது நாகரிமற்ற செயலாகும். நாங்கள் எங்களைப் பற்றி சிந்திப்போம். சமூகத்திற்கு எங்களால் என்ன செய்யமுடியும் என்ற விடயத்தைப்பற்றி மாத்திரம் பேசுவோம்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் இறக்காமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூடத்தில் பேசும்போது இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறியதாவது:- மறைந்த தலைவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் வைத்திருந்த கட்டுப்பாடு இன்று மங்கி மறைந்து விட்டது. எங்கள் தலைவரின் கொள்கைகளை இன்று காணமுடியாது.
கடந்த ஒன்பது வருடங்களாக என்னிடம் தலைவரின் கொள்கைபற்றி கேள்வி கேட்டவர்களிடம் நான் இன்று கேட்க விரும்புகின்றேன். மறைந்த தலைவருக்குப் பிறகு வந்த பராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் நாம் தோழில் சுமந்து கொண்டு தலைவரைப் போல இரு என்றால் முடியுமா? எனவே பிழைவிட்டவர்கள் மக்கள்தான் என்றார்.