செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிக்க வழிவகை செய்வேன் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgபாரிய அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கும் வகையில் ஜீ-15 அமைப்பானது ஜீ-08 அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையினை உண்மையானதாகவும் யதார்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தெளிவான முறையொன்று தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஜீ-15 அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி செயற்பாட்டை தோற்றுவிப்பதற்காக பொருளாதாரம், நிதி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலுள்ள திறமைசாலிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவசாலிகளைக் கொண்ட செயற்பாட்டு படையொன்றை நியமிப்பது பொருத்தமானதெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈரான் இஸ்லாமிய குடிய ரசுக்குப் பின் ஜீ-15 அமைப்பின் தலைமையை இலங்கை பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சியுடனேயேயாகும். அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நாம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளோம். கடந்த காலங்களில் இந்த அமைப்புக்கு மிகவும் திறமையாக வழிகாட்டி வந்த கலாநிதி, மஹ்மூத் அஹ்மட் நெஜாட்டுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

தெற்கின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பு மற்றும் அந்தத் துறையின் சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்வ தற்கு வழிகாட்டிய உங்களுடைய அர்ப்பணிப் பான சேவைக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.

எவ்வாறாயினும் எமது இந்த அமைப்புக்கு புனர்வாழ்வளித்து அதனைத் தொடர்ந்து முன்நோக்கி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது ஒரு சுற்றுவட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம். எங்களது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியலில் மாற்றம் ஏற்பட்ட ஒரு யுகத்திலாகும். நாங்கள் இன்று 20 வருடத்தை பூர்த்தி செய்வது இந்த பூகோளமயம் மாற்றமடைகின்ற சந்தர்ப்பத்திலாகும்.

சவால்களைக் கொண்ட சூழ்நிலை, நீண்ட எதிர்காலத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. நாங்கள் முதன்மை வழங்கக் கூடிய துறைகள் அநேகமானவை. பிணக்கு முடிவடைந்தாலும் எங்களால் கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னமும் முடிவடையவில்லை.

உலகெங்கும் நடைபெறுகின்ற இயற்கை அழிவுகளை சுட்டிக் காட்டுவது காலநிலை விபரீதங்களை நிர்வகிப்பதற்கு பூகோள ரீதியாக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். அதற்கிடையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அபிவிருத்தி சவால்கள் ஏராளமானவை. அவை வறுமையொழிப்பு, பட்டினியொழிப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்தல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவாகும். நான் கூறிக் கொள்வதென்னவென்றால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எங்கள் அமைப்புக்குள் தீர்வுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. எனினும் செல்வச் செழிப்பு மிக்க மிக ஒற்றுமையான எங்கள் அமைப்புக்கூடாக நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய விசேட நடவடிக்கை எடுக்கலாமென்பது எனது நம்பிக்கையாகும்.

தலைமைப் பொறுப்பை கையேற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜீ-15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்கு வழிவகை செய்வேன் என அவர் உறுதியளித்தார்.  இச் செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்பு கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் ஏழு பேர் நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு அங்கத்தினர் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

சகல இனங்களையும் பல்கலாசாரத்தையும் பிரதிபலிப்பதான இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சட்ட மா அதிபருமான சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தினர்களாக கலாநிதி ரொஹான் பெரேரா, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார, பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி, சி. சண்முகம், திருமதி மனோராமநாதன், மெக்ஸ்வெல் பரனகம ஆகியோரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

நாட்டின் சகல சமூகங்களினதும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டதாகச் செயற்படும் இவ்வாணைக்குழுவானது அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து அதன் அறிக்கையையும் விதப்புரைகளையும் ஆறு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சகல அரசாங்க ஊழியர்களும் நபர்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பினையும் இதற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 14ம் பிரிவின் 393ம் அத்தியாயத்தின் கீழான விதிகளுக்கிணங்க இவ்வாணைக்குழு இயங்கும்.

இவ்வாணைக்குழுவில் அங்கத்தவரான டாக்டர் ரொஹான் பெரேரா வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகரும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு ஆசிய பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்காக ஐ. நா. பொதுச்சபையினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவராவார்.

எச். எம். ஜீ. எஸ். பலிகக்கார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவராவார்.

பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பிரதித் தலைவராவார்.

சி. சண்முகம் முன்னாள் திறைசேரியின் செயலாளராவார்.

திருமதி மனோ இராமநாதன் முன்னாள் நீதியரசர் பி. ராமநாதனின் மனைவியும் பிரதி சட்ட வரைஞராகப் பணியாற்றுபவருமாவார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர்.

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி

rain.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

rain.jpgஎட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர். இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார். இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மழையினால் மேல் மாகாணத்திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா – மினுவாங்கொட, கம்பஹா – ஜாஎல, கம்பஹா – உருதொட்ட, பெலும்மகஹா – வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார். கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன. குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார். களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம்; இடியுடன் கடும் மழை தொடரும்; மக்களுக்கு எச்சரிக்கை!

9colombo.jpgதிருகோண மலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரன தெரிவித்தார்.

இந்தத் தாழமுக்கத்தினதும், தென்மேல் பருவ பெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

இக்காலப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் அதிக மழை காரணமான பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி நிட்டம்புவவில் 313.6 மி.மீ, மக்காவிட்ட 223.5 மி.மீ, ஹங்வெல்ல 210 மி.மீ, கலட்டுவாவ 219.5 மி.மீ, குக்குலேகங்கை 188 மி.மீ, அவிசாவளை 157 மி.மீ. என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுற்ற 6 மணி நேர மழைவீழ்ச்சி பதிவுப்படி இரத்த மலானையில் 169.5 மி.மீ. கொழும்பில் 126 மி.மீ. என்றபடி மழை பெய்துள்ளது என்றார்.

”யாழ் கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல்களும் காதலர்களின் திருமண முயற்சிகளுமே” – மாநகர முதல்வர் : வி ராம்ராஜ் (ரிபிசி பணிப்பாளர்)

Jaffna_Mayor_Yogeswari_Patkunam”யாழ் நகரை அபிவிருத்தி செய்ய தமிழ் மக்கள் முன்வரவேண்டும்” என யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் May 16 2009 ரிபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துதுரையாடலில் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
”அண்மைக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் நடந்த கடத்தல் முயற்சிகளில் பல தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளும் காதலர்களின் சட்டவிரோத திருமண முயற்சிகளுமேயாகும். எனினும் இவற்றை யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர்ப் பத்திரிகைகள் சில கடத்தல் சம்பவங்கள் என்றே செய்திகளைப் பிரசரித்து நாடுகடந்த தமிழ் ஈழ் அரசிற்க்கு ஆதரவு தேடும் முயற்சிற்களில் ஒன்றாகவே காணபடுகிறது.
 
யாழ் மாநகர சபையின் துணை முதல்வர் கைது என்பது ஒரு மொட்டை கடிதத்தை கொண்டே கைது செய்யபட்டுள்ளார். அது தொடர்பாக மக்களின் வேண்டுகோள்ளுக்கு இணங்க நீதிதேவதை நீதி வழங்க என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன் தவிர நீதிதுறை நான் விமர்சிக்கவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்
 
”இந்தியாவின் அணுசரனையுடன் ஜனாதிபதி இன்னும் மூன்று மாதகாலத்திற்க்குள் 13வது அரசியல் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவதுன் ஊடாக முழுமையான தீர்வு ஒன்றை காணவுள்ளதாக ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளலஸ் தேவநந்தாவுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார். மிகவும் பலமான அமைப்பான விடுதலை புலிகளால் கூடு தமிழ் ஈழ விடுதலை வெற்றி பெறமுடியாவில்லை மற்றவர்களால் எவ்வாறு தமிழ் ஈழ அடையமுடியும்” என யாழ் மாநகர முதல்வர் கேள்வி எழுப்பினார்.
 
நல்லூர் ஆலய பகுதிகளில் தற்காலிகமாக நடைபாதை வியாபாரிகளுக்கு மக்களின் உடனடி தேவைகளுக்காக தற்காலிகமாக அனுமதி வழங்கபட்டிருந்தது ஆனால் இப்பொழுது அப்பகுதி முழுமையாக புனிதபடுத்தபட்டிருப்பாதாகவும் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்தார்.

ஆயிரம் பேர் விடுதலை

ltte_child_soldiers.jpgபுனர் வாழ்வு நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் பேர் நாளை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர். யுத்தம் வெற்றிகொளளப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள வைபவத்திலேயே இந்த நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வடமாகாண ஆளுனர் தலைமையிலான இந்த வைபவத்தில் பங்கேற்குமாறு வடபகுதி மாவட்டச் செயலாளர்கள் சகலரும் கேட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சுற்றி காற்றமுக்கம்

lightning.jpgஇலங்கையைச் சுற்றி காற்றமுக்கநிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பையும் அதணை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் இன்று நினைவு கூரப்படுகின்றனர்.

Tribute_to_Deathsவன்னியில் இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று 17ம் திகதி வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதே வேளை, உயிரிழந்த  மக்களை நினைவு கூரும் விதமாக ஆலயங்கள் தேவாலயங்களில் இன்று பூஜை வழிபாடுகளும்  நடைபெறுகின்றன. வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது குறித்த புள்ளிவிபரங்கள் போர் முடிவடைந்து ஓராண்டு நிறைவடைகின்ற நிலையிலும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்றுறையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டார்!

யாழ். ஊர்காவற்றுறைப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் நேற்று 16ம் திகதி பொதுக் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த குமாரவேலு பாலதேவி என்ற 44 வயது குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். மீட்கப்பட்ட சடலம் மரணவிசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ள தமிழ் பொலிஸாருக்கு களுத்துறையில் பயிற்சி!

யாழ்.மாவட்டத்தில் நாளை 18ம் திகதி  நியமனம் வழங்கப்படவுள்ள 342 பொலிஸாருக்கும் யூன் மாதம் முதலாம் திகதி களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லாரியில் பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ். பொலிஸ் நிலைய அத்தியட்சகர் மென்டிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்,  யாழ்.மாவட்ட தமிழ் இளைஞர்; யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரிட்சையில்  மருத்துவ சோதனையில் பங்கேற்றவர்களில் 342பேர் பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 22 பெண்களும். 320 ஆண்களும் அடங்குகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளார்.