செய்திகள்

செய்திகள்

செய்திகள்

25 கிலோ கஞ்சா கலந்த பாபுல் ஆட்டுப்பட்டித் தெருவில் கண்டுபிடிப்பு

babul.jpg25 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த பாபுல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கஞ்சா கலந்த புகையிலை என்பன கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இது அண்மைக் காலத்தில் பிடிபட்ட அதிகூடுதலான பாபுல் தொகையாகும்.

ஆட்டுப்பட்டித் தெருவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கஞ்சா கலந்த பாபுல் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களி டமிருந்து கிடைத்த தகவலின்படி ஆட்டிப்பட்டித் தெருவில் உள்ள இரு களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த பாபுல், பாபுல் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தருவிக் கப்பட்ட 20 இலட்சம் பெறுமதி யான கஞ்சா கலந்து புகையிலை, பல்வேறு போதை ஏற்படுத்தும் பொருட்கள் என்பனவும் மீட்கப் பட்டதாக பொலிஸார் கூறினர்

சந்தேக நபர்கள் நேற்று மாளி காகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

சர்வதேச தேயிலை தினத்தை மடுல்சீமையில் நடத்த ஏற்பாடு

கடந்த 23 ஆம் திகதி பசறையில் இயங்கி வரும் அகில இலங்கை இந்திய வம்சாவளி மேம்பாட்டு மையத்தின் விஷேட ஒன்றுகூடலும் புனரமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவும் பசறை கோவில் கடை “வீ என் ஆர் பீபல்ஸ் பவுண்டேஷன்” காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக மக்களின் கல்வி கலாசாரம், சுகாதாரம், மேம்பாட்டு தொடர்பான கலந்துரையாடப்பட் டதோடு, எதிர்வரும் சர்வதேச தேயிலை தினம் தொடர்பாகவும் ஆலோசிக்கப் பட்டது.

அமைப்பின் உப தலைவர் பீ.டி.ஜே. சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டு மலையக மேம்பாடு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி கொண்டாடப்பட விருக்கும் மடுல்சீமை நகரத்தில் இடம்பெறவுள்ள “சர்வதேச தேயிலை தின வைபவத்தில் பல கலை, கலாசார நிகழ்வுகளும், விருது வழங்கல் நிகழ்வும் 2010 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பசறை வலய கோட்டத்தின் கீழ் வரும் சுமார் 30 பாடசாலை மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றைய கூட்டத்தில் நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் தலைவராக எல். வரதராஜன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக வீ. நிரோஷன் (அதிபர்), பொருளாளராக தியாகு ஜே.பி., உப தலைவராக பீ.டி.ஜே. சந்திரசேகரம் (ஜே.பி), உப செயலாளராக எம். ஞானப்பிரகாசம் (ஜே.பி.) நிர்வாக செயலாளராக எஸ். சதாசிவம் (ஜே.பி), நிர்வாக இயக்குநராக எஸ். அந்தோனிசாமி மற்றும் சர்வதேச தொடர்பாடல் இயக்குநராக பிரபல ஊடக நிகழ்ச்சி ஒங்கிணைப்பாளர் ஆர். கேதீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு – 180 பலி: 500க்கு மேல் மாயம்

tsunami.jpgஇந்தோ னேசியாவின் ஜாவாத் தீவுகளில் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களால் 180 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 500 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதித் தீவான மெத்தாவியில் திங்கட்கிழமை 7.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தில் 10 கிராமங்கள் முற் றாகச் சேதமடைந்துள்ளதுடன் 154 பேர் கொல்லப்பட்டனர். 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அதே நேரம் ஜாவாத் தீவுகளிலுள்ள மெராப்பி எரி மலை தீக் குழம்பை கக்கியதில் அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமித் தாக்கத்துக்குள்ளான பகுதிக் கடல் கொந் தளிப்புடன் காணப்படுவதால் நேற்றைய தினமே மீட்புப் பணியாளர்கள் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலம் அப் பகுதியைச் சென்றடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களும், மருந்துப் பொருள்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடு கள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. உணவுத் தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அரு கில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாட தமிழ்தேசியக்கூட்டமைப்பு தயராகவுள்ளதாகவும் ஆனால், ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் ஆராய இருதரப்பும் இரு குழுக்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர், விபரங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசதரப்பு குழு அமைக்கப்படவில்லை. இதேபோல, இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய அரசாங்கத்தின் தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை இன்னமும் நியமிக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதியுடனான மீண்டும் ஒரு சந்திப்பை கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி விரைவில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு முன்பதாக கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனர்வாழ்வு முகாம்களில் இன்னமும் 5100 முன்னாள் விடுதலைப்புலிகள் மட்டுமே உள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 5100 பேர் மட்டும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்புனர்வாழ்வு நிலையங்களில் 93 பெண் போராளிகளே மீதமுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் க.பொ.த. சாதாரண பரீடசைக்குத் தோற்றிய பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள பெண்களும் கட்டம் கட்டமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையம் நூல்கள் அன்பளிப்பு.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையத்தினால் 2000 யூரோ பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜேர்மன் கலாசார அமையத்தின் பணிப்பாளர் பிஜோன் கொரில்ஸ், யாழ்.பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் கலாசார அமையம் வருடந்தோறும் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு 2000 யூரோ பெறுமதியான நூல்களை வழங்கி வருகின்றது. அவ்வகையில் இம்முறை யாழ்.நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொது நூலகத்தை தமிழ்மக்களே பயன்படுத்துகின்றனர் ஆகவே தமிழ் மொழியிலான நூல்களை அதிகம் வழங்குவது பொருத்தமானது என தெரிவித்தார்.

அனுமதியின்றி மீள்குடியமர்ந்துள்ள வசந்தபுரம் மக்களை வெளியேறுமாறு படையினர் கோரிக்கை.

கொழும்புத்துறை வசந்தபுரம் என்ற இடத்திலிருந்து முன்னர் வெளியேறிய மக்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் அனுமதியின்றி மீள் குடியமர்ந்துள்ளதால் அவர்களை வெளியேறுமாறு படைனயினர் அவர்களிடம் கோரியுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வெளியேறிய அப்பகுதி மக்களில் 88 குடும்பங்கள் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தறப்பாள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு அப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் தெரிவித்து வருவதாகவும் ஆனால், அம்மக்கள் வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும், இதேவேளை, அவர்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கான மேலிட அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இவ்வளவு காலமும் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், தொடர்ச்சியாக அவ்வாறு தங்கியிருக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் தங்களின் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக படையினர் கோரி வருகின்றனர்.

தெல்லிப்பழையில் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதம்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழை கிராமசேவகர் பிரிவுகளில் மக்களை மீன்குடியேற்றுவதற்கு வசதியாக வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவில் காங்கேசன் வீதியின் மேற்குப் புறமாகவுள்ள மாவிட்டபுரம் வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் வகையில் துரிதமாக வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம்

யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். பிரதேச செயலாளர், மிதிவெடிகளை அகற் றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு; 300 பேர் இன்று பயணம்

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ள முதலாவது இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது. இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார். பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

முதற் தடவையாகவே இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.