செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். பிரதேசச் செயலர்களுக்கு தம்புள்ளயில் செயலமர்வு

Dambulla_SLயாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலர்களுக்கு இன்று வியாழக்கிழமையும் நாளையுமாக இரு நாட்கள் செயலமர்வு ஒன்று தம்புள்ளையில் நடைபெறுகின்றது. காணி நிர்வாகம் தொடர்பாகவே இச்செயலமர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயலமர்வு காணி அமைச்சின் உயர் அதிகாரிகளினால் யாழ்ப்பாண பிரதேசச் செயலர்களுக்கு தமிழ் மொழி மூலம் நடத்தப்.படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பச்சிலைப்பள்ளி மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்களாகும்” அமைச்சர் தேவானந்தா

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்களாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் அதிகளவு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்கள் ஆகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளான வேம்படுகேணி, இத்தாவில், முகமாலை, கிளாலி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உயர்பாதுகாப்புவலய பிரச்சினை எதுவும் இல்லை எனவும், அதிகமான மிதிவெடிகள் இப்பகுதியில் காணப்படுவதே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கும் படைப்பிரிவினரால் அங்குளம் அங்குளமாக துப்புரவாக்கப்பட்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை  அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டு. செட்டிப்பாளையத்தில் நிலை கொண்டிருந்த அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர்.

STF_SLForceமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த பகுதியில் சுமார் 25 குடும்பங்களின் குடியிருப்புக்கள், நெசவு நிலைய கட்டடம், கிராம அபிவிருத்திச்சங்க கட்டடம் முதலானவற்றில் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்தனர். தற்போது மட்டக்களப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் அவ்விடங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதயில் முன்னர் வாழ்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புக்களை துப்புரவு செய்து மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சியில் கசிப்பு தயாரித்த இரு பெண்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கசிப்பு  வைத்திருந்த இரு பெண்களுக்கு நீதிமன்றினால் அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைத் தெற்கில் சட்டவிரோதமாக, உடல் நலத்திற்கு கேடான கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டு இதனைத் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பெருமளவிலான உபகரணங்கள் மூலப்பொருட்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்டப்ட இரு பெண்களும் பருத்தித்துறை நீதவான் திருமதி றோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அப்பெண்களில் ஒருவருக்கு ஐந்து இலட்ச ரூபா அபராதமும், அடுத்தவருக்கு மூன்று இலட்ச ரூபா அபராதமும் விதித்தார்.

ரீ அர் ஓ வின் ‘புனித பூமி’யை நேர்டோ பொறுப்பெடுத்தது. : அஜன்.

NERDO Oct23_2010போரினால் அழிவுற்று இருக்கும் “புனித பூமி’யை நேர்டோ பொறுப்பு எடுத்து அன்பு இல்லமாக கட்டி எழுப்பும் பணியை ஒக்ரோபர் 23 2010ல் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வில்  கடந்த கால செயற்குழு உறுப்பினர், ஊர்மக்கள், மாணவர்கள், கல்விமான்கள், கிராம மக்கள், புலம் பெயர் உறவுகள், கலந்து கொண்டனர்.  ரீ ஆர் ஓவினால் 1992இல் ஆரம்பிக்கப்பட்ட புனித பூமி என்ற அனாதை குழந்தைகள் காப்பகம் 1998 டிசம்பர்வரை இங்கு நடைபெற்றது. இந்த இல்லம் 1998இல் நடைபெற்ற யுத்தத்தினால் கைவிடப்பட்டு மீளவும் அதே இடத்தில் மார்ச் 2002 இல் புனித ப+மி தனது செயற்பாடுகளை தொடர்ந்தது. வன்னி யுத்தம் மீள ஆரம்பித்தததை அடுத்து இந்த கட்டடம் கைவிடப்பட்டதுடன் இங்கு தங்கியிருந்த பல குழந்தைகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

NERDO_Oct23_2010கட்டட வேலைகள் ஆரம்பமானதன் அடையாளமாக மரம் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்கள் போரினால் அநாதரவாக இருக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவச் சிறார்களுக்கு எதிர்காலத்தை வழங்குதலும் இவர்களுடைய கல்வி, ஊட்டச்சத்து, உணவு பற்றாக்குறை இதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பது பற்றியும் கலந்துரையாடினர்.

இந்தரீதியில் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாக வன்னிப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியையும், விஞ்ஞானக் கல்வியையும் எப்படி புகட்டுவது என்பது பற்றியும் தமது கருத்தை கூறினர். நேர்டோவின் பங்களிப்பு இதற்கு அவசியம் என்பதை வலியுறுத்தியதை அடுத்து இது சம்பந்தமான விடயங்களில் தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய முடியம் என்று நேர்டோ அமைப்பினர் உறுதியளித்தனர்.

சமூகப் பிரச்சினை பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் தமது கருத்தைக் கூறினர். குறிப்பாக இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் குறைபாடு பெண்களுக்கு கல்வி புகட்டுவதன் ஊடாக பிள்ளைகளின் கல்வியை சீர்செய்ய முடியும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவில் மீன்பிடியை தொழிலாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

ரிசானாவின் கதி அரசு, மனித உரிமை அமைப்புகள், முஸ்லிம் சமூகம் கடும் கவலை

இலங்கைப் பணிப்பெண் ரிசானா றபீக்கிற்கு சவூதி உயர்நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசும் உள்நாட்டு,சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகமும் கடும் கவலையை வெளியிட்டுள்ளன.

ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.வீட்டுப் பணியாளராகச் சென்ற அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம் எழுதியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இதனைப் பாராட்டி ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. எமது கோரிக்கைகள் தொடர்பாக சவூதி மன்னர் அக்கறையெடுத்து மன்னிப்பு வழங்க வேண்டுமென நாம் விரும்புகிறோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. ஹசன் அலி கூறியுள்ளார்.

சவூதி தூதுவரை இன்று (நேற்று) பிற்பகல் நாம் சந்திக்கவுள்ளோம். நிலைமையை அவருக்கு விளக்குவோம். சவூதி அரேபியாவிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதவுள்ளோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.நான் அறிந்தவரை சவூதி அரேபியச் சட்டத்தில் குறிப்பிட்ட சில வரையறைகள் உள்ளன. தீர்மானம் மேற்கொண்ட பின்னர் அதனை மாற்ற முடியாது. அப்பெண் குற்றவாளியென உயர்நீதிமன்றம் இப்போது தீர்மானித்துள்ளது. ஆதலால் அப்பெண்ணின் உயிர் வாழ்வுக்காக நாம் வேண்டுகோள் விடுக்க வேண்டியுள்ளது. இப்போது சவூதி மன்னரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமே அப்பெண்ணின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, இந்த விடயம் குறித்து சவூதி மன்னரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அக்கறையெடுப்பார்களெனத் தான் நம்புவதாகவும் ரிசானாவுக்கு மன்னிப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பரென்றும் முன்னாள் ஐ.தே.க. எம்.பி. யான ஹுசைன் அகமட் பைலா கூறியுள்ளார்.

மலசலக் குழியிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு

பிறந்து பத்து நாட்களேயான சிசு ஒன்று பாடசாலை புத்தகப் பையொன்றில் போட்டு மலசலக் குழியொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (27) காலையில் வெலிமட லந்தேகம பஹலகபில வெல என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு அருகாமை யிலிருந்த மலசல குழியொன்றுக்குள் இருந்து இந்த ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வேளை 5.30 மணியளவில் குழந்தையொன்றின் அழுகுரல் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்துள்ளது. அதனையடுத்து பிரதேசவாசிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு மலசலக்குழியொன்றுக்கு அருகாமையில் அந்த சத்தம் வந்துள்ளது. அதனையடுத்து தேடுதல் நடத்திய கிராமவாசிகள் மலசல குழியொன்றுக்குள் புத்தக பையொன்றை கண்டு எடுத்துள்ளனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாகவுள்ளது. வெலிமட பொலிஸார் குழந்தையின் தாயைத்தேடி வருகின்றனர்.

முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம் – தொழிற்சாலைகள் அமைக்கும் இடங்களை பார்வையிடுவர்

வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக் கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

முதலீட்டாளர் குழுவினருடன், இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றாடல் திணைக்கள அதிகாரிகளும் இன்று வவுனியா செல்லவுள்ளனர். வவுனியா நகர், வவுனியா வடக்கு, செட்டிக்குளம் மற்றும் நெலுங்குளம் பகுதிகளுக்கே இந்த முதலீட்டாளர்கள் நேரில் சென்று காணிகளை அடையாளங் காணவுள்ளனர்.

சுற்றாடல் மற்றும் வனவள திணைக்களங்களின் அறிக்கை பெறப்பட்டவுடன் சில வாரங்களில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க மேற்படி முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். யாழ். கிளிநொச்சி பகுதிகளிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

சந்திரிகா கொலை முயற்சி : குற்றவாளிக்கு கடூழிய சிறை

chandrika-kumaratunga.jpgஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தின் போது மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற் றச்சாட்டுகளுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இலங்கேஸ்வரன் என்பவருக்கே 30 வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம்.பி.டி. வராவெள, வழங்கினார்.

சம்பவத்தின் போது தற்கொலைக் குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருக்கும். இதனால் தேர்தல் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதி பதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொள்ள செய்தமையைக் கொண்டே குற்றவாளிக்கு இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது

பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார்.

இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.