செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பிரிட்டனில் கடும் வேலைவாய்ப்பின்மை

britain.jpgபிரிட்டனில் ஒரு தாசாப்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இருபது லட்சத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையினர் தற்போது இங்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இது பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சக்தியின் 6.3 வீதமாகும்.

அதேவேளை பிரிட்டன் தற்போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதாக, பாங் ஒவ் இங்கிலண்டின் ஆளுனர் மேர்வின் கிங் கூறியுள்ளார். வட்டி வீதம் மேலும் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட நடுப்பகுதியில், இன்னும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று அந்த வங்கி தனது புதிய பொருளாதார எதிர்வுகூறலுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புலிகளின் குண்டுத் தொழிற்சாலை படையினரால் இன்று மீட்பு!

bomb_construct.pngமுல்லைத் தீவில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் இன்று காலை சுகந்திரபுரம் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தொழிற்சாலையில் கிளேமோர் குண்டுகள் மற்றும் 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது

புதிய பாதுகாப்பு வலயம் இன்று பிரகடனம்!

chalai_map.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் புதிய பாதுகாப்பு வலயம் ஒன்றை இன்று பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு ஏரிக்கு கிழக்கே உள்ள நிலப்பரப்பில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் புதிய பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவே இப்புதிய பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்த அளவு விரைவில் பொது மக்கள் இந்தப் பாதுகாப்பு வலயத்துக்கு வந்து சேரவேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வன்னியிலிருந்து நோயாளரை திருமலை அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை

ship-10022009.jpgவன்னியில் யுத்தத்தினால் காயமடைந்த பொதுமக்களில் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்தது.

வன்னியில் காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் ஐ.சி.ஆர்.சி.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓஷியன்’ எனும் கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் இயங்கும் தற்காலிக ஆஸ்பத்திரியிலிருந்தே இவர்கள் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த அனைத்து நோயாளிகளும் காயமடைந்தவர்களுமே ஐ.சி.ஆர்.சி. மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் 240 பேர் கப்பல் மூலம் நேற்று முன்தினம் இரவு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

indonesia_map_.gif
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசிதீவில் இன்று காலை மிக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், தேவாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஒரு மருத்துவமனை இடிந்ததில் தான் பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர்.

கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

‘ஐ. சி. ஆர். சி பணியாளர்கள் வன்னியிலிருந்து வெளியேறவில்லை’ -தகவல் அதிகாரி

red-cr.jpgவன்னியில் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ. சி. ஆர். சி) பணியாளர்கள் வெளியேறி வரவில்லையென்று சங்கம் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் தொடர்ந்தும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவார்களென்று சங்கத்தின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ன  தெரிவித்தார்.

வன்னியிலிருந்து நோயாளர்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட போது, ஐ. சி. ஆர். சி பணியாளர்களும் அவர்களுடன் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அந்தப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று பணிகளை ஆரம்பிப்பார்களென்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறிவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாதெனவும் அவர் கூறினார்.

வன்னியிலிருந்து ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஐ. சி. ஆர். சி. கப்பல் மூலம் நேற்று முன்தினம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு- மாத்தளன் கடற்பரப்பிலிருந்து கப்பல் மூலம் நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளர்களுள், கடுமையாகக் காயமுற்றவர்கள் பலர் இருந்துள்ளார்கள். இதனால், நோயாளர்களோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களும் உடன் வந்தார்கள் என்று அதன் தகவல் அதிகாரி சரசி தெரிவித்தார்.

“நோயாளர்களுடன் வந்துள்ள பணியாளர்கள் மீண்டும் அந்தப் பகுதிகளுக்குச் சென்று வழமை போன்று மனி தாபிமானப் பணிகளை மேற்கொள்வார்கள். இதிலிருந்து சங்கம் விலகி நிற்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேயாளர்கள் வந்த கப்பலில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துப் பணியாளர்களும் வெளியேறி வந்து விட்டதாக வெளியாகியிருந்த செய்தியை அவர் மறுத்தார்.

பிரிவினைவாத பிரசாரத்துக்கு தேசிய வானொலியில் இடமளிக்க முடியாது! – இ.ஒ.கூ. தலைவர் தெரிவிப்பு

hadson_samarasinghes.jpgபிரிவினை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற, முழு நாட்டுக்கும் சாத்தியமற்ற செய்திகளை தேசிய வானொலியின் அலை வரிசைகள் மூலம் ஒலிபரப்புச் செய்ய முடியாதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழோசை மற்றும் பி.பி.சி. சந்தேசிய ஆகியவற்றை முன்னறிவித்தல் எதுவுமின்றி பி.பி.சி. நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பி.பி.சி. நிறுவன அதிகாரிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக அவர்களிடமிருந்து எமக்கு இது வரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைச் சோதனையிடுவதற்காக விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் அண்மையில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி.யின் சந்தேசிய சிங்கள செய்திச் சேவையில் ஒலிபரப்பான செய்தி உண்மையை மூடி மறைப்பதாக அமைந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்

மத்திய, வடமேல் மாகாண பாடசாலைகள் தேர்தலை முன்னிட்டு வெள்ளி மூடப்படும் – கல்வியமைச்சு

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் நாளை வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படுமென கல்வி யமைச்சு தெரிவித்திருக்கிறது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெற விருக்கிறது.

இதற்கான வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பாடசாலைகளிலேயே அமைக்கப்பட விருப்பதாலும் ஏனைய தேர்தல் கடமைகளின் பொருட்டுமே தேர்தலுக்கு முன்தினமான 13 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரு மாகாணங்களினதும் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளரான எஸ்.யூ.விஜேரட்ன தெரிவித்தார்.

இதேநேரம், விடுமுறை வழங்கப்பட்ட இந்த பாடசாலை தினம் பின்னர் வசதியான பிறிதொரு தினத்தில் வைக்கப்படும் என்றும் விஜேரட்ன மேலும் கூறினார். தேர்தல்கள் செயலகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அரச பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு.

civilians-1002-09.jpgபுலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் பொதுமக்கள் தற்காலிகமாக 5 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கல்வி வலயப் பணிப்பாளர் ரஞ்சன் ஒஸ்வேல் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் மகாவித்தியாலயம், நெல்லுக்குளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 வார காலத்திற்கு தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்படும் இவர்கள் மெனிக்பாமில் அமைந்துள்ள நிரந்த நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இடவசதி குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைகளிலும் மக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தற்கொலைத் தாக்குதலை எதிர்க்கட்சியினர் கண்டிக்காமை கவலைக்குரியது -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவிப்பு

lakshman_yapa_abeywardena.jpgதமிழ் மக்களுககாகப்  போராடுவதாகக் கூறிக்கொண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி தமிழ் இனத்தையே அழிக்கும் புலிகளின் செயற்பாட்டை கண்டிக்காமல் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியினரின் நடவடிக்கை கவலைக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிந்துவிட்டது அதனால் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். யுத்தம் முடிந்து விட்டாலும் மற்றுமொரு யுத்தமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் யுத்தம் எம்மை எதிர்நோக்கி உள்ளது என்பதை மறந்த நிலையில் எதிர்க்கட்சி செயல்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான திட்டங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

புலிகளின் மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை உலக நாடுகள் உட்பட நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ள வேளையில் எதிர்க்கட்சியினர் கவலையோ கண்டனமோ தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது வருந்தத்தக்க விடயமாகும்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.அதேபோன்று நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி மற்றும் விநாயக மூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்),  சந்திரகாந்தன் (பிள்ளையான் ) போன்றவர்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை இதனைக் கண்டித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். உண்மையான தகவல் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றைப்பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் இந்தத் தாக்குதல் உண்மையானதென்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைத்த ஐக்கிநாடுகளுக்கு அரசாஙகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.