தமிழ் மக்களுககாகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி தமிழ் இனத்தையே அழிக்கும் புலிகளின் செயற்பாட்டை கண்டிக்காமல் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு குரல் கொடுக்கும் எதிர்க் கட்சியினரின் நடவடிக்கை கவலைக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யுத்தம் முடிந்துவிட்டது அதனால் அன்றாட பாவனைப் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர். யுத்தம் முடிந்து விட்டாலும் மற்றுமொரு யுத்தமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் யுத்தம் எம்மை எதிர்நோக்கி உள்ளது என்பதை மறந்த நிலையில் எதிர்க்கட்சி செயல்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான திட்டங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
புலிகளின் மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை உலக நாடுகள் உட்பட நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ள வேளையில் எதிர்க்கட்சியினர் கவலையோ கண்டனமோ தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை உட்பட அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளன.அதேபோன்று நாட்டிலுள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி மற்றும் விநாயக மூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்), சந்திரகாந்தன் (பிள்ளையான் ) போன்றவர்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை இதனைக் கண்டித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். உண்மையான தகவல் இல்லாமல் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றைப்பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் இந்தத் தாக்குதல் உண்மையானதென்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உண்மை நிலையை உலகுக்கு எடுத்துரைத்த ஐக்கிநாடுகளுக்கு அரசாஙகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.