இலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு நகரமாகிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் முன்னேறிய இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்கே இராணுவ முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,
இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இன்று அதிகாலையும் நேற்றும் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்திருக்கின்றது.