செய்திகள்

செய்திகள்

செய்திகள்

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த சிங்கள காதல் ஜோடி இலங்கை தூதரிடம் ஒப்படைப்பு

tamilnadu.jpgஅகதி களோடு வந்து கைதாகி தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கள காதலர்களை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க பொலிஸார் சென்னை அழைத்து சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 2008 டிசம்பர் 20 ஆ ம் திகதி படகில் வந்திறங்கிய வவுனியாவை சேர்ந்த அகதிகளுடன் இலங்கை கொழும்பு நகர் மகரகம பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர் துஷாரா சந்தனா (வயது 30) கடுவத்தை பகுதியை சேர்ந்த பெண் தாரகா தில்கானி (வயது 17) ஆகிய இருவரும் அகதிகளாக வந்தனர்.

சிங்கள மொழி தவிர வேறு மொழி தெரியாத இருவரையும் வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த வசந்தமாலா (49 வயது) அழைத்து வந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான பாடசாலை மாணவி தாரகா தில்கானியும், வாகன சாரதியான துஷாரா சந்தனாவும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் வவுனியா வந்து அங்கிருந்து படகில் அகதிகளாக வந்தனர்.

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக இவர்கள் இராமேஸ்வரம் வந்ததால் இருவரையும் பொலிஸார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க இராமேஸ்வரம் பொலிஸார் இவர்களை சென்னைக்கு அழைத்து சென்றனர்

சார்க் வலய நாடுகளின் கல்வி, உயர் கல்வி அமைச்சர்களது மாநாடு!

vishva-warnapala.jpgசார்க் வலய நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். தெற்காசிய உயர்கல்விக் கொள்கை மற்றும் நுட்பங்கள் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தவும் அதற்கென 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்!

rohitha-bogollagama.jpgஈராக்கின் தலைநகர் பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகத்தைத் மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கைக்கும் ஈராக்குக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் 2003 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஈராக்குக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.மீண்டும் தூதரகத்தைத் திறப்பதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலரை ஒதுக்கவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சரணடையுங்கள்: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஹசீனா எச்சரிக்கை

bangladesh-president.jpgவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு கிளர்ச்சியாளர்கள் சரணடைய வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

கலகத்தை கைவிடத் தவறினால் நாட்டின் நலன் கருதி எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டி வரும் என்றும் கிளர்ச்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில், கலகத்தில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மன்னிக்க முடிவு செய்துள்ளேன். வீரர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

கிளர்ச்சியை கைவிடுவதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு முகாமுக்கு திரும்புமாறு வீரர்களை வலியுறுத்துகிறேன். கிளர்ச்சியாளர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்காது. ஊதிய விகிதம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பாதையை மீள புனரமைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

railways-in-jaffna.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையை மீள புனரமைக்க சகல மக்களின் ஒத்துழைப்பையும் பெற போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக விசேட திட்டமொன்று முன் னெடுக்கப்பட உள்ளதோடு இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர் வமாக நாட்டு மக்களுக்கு வெளியிடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரி வித்தது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை மீள அமைப் பதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் நிதி உதவி, உழைப்பு என்பவற்றை பெறுவதற்காக இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாண ரயில் நிலையத்தையும், ரயில் பாதையையும் நிர்மாணிப்பதற்கு அம்பாந்தோட்டை மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். கிளிநொச்சி ரயில் நிலையத்தையும் ரயில் பாதையையும் அமைக்க மாத்தறை நகர மக்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பான தமது சகோதரத்துவ வாஞ்சையை பிரதிபலிக்கும் வகையில் தென்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களும் மலையக தமிழ் மக்களும் இணைந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் மீள அமைக்க உள்ளனர். இது இலங்கை மக்களின் சகோதரத்துவத்தையும், புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் காட்டும் குறிகாட்டியாக வரலாற்றில் பதியப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத்துறைக்கான நிவாரணத் திட்டம்!

milroy_fernando.bmpஅரசாங்கம் பிரதேச தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய நிவாரணத் திட்டத்தை இலங்கை அரச பெருந்தோட்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அல்கடுவ தோட்டக் கைத்தொழில் நிறுவனம் ஆகிய அரச தோட்ட நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வரும் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது – கோத்தபாய

gothabaya.jpgபயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள பிரதேசங்களைக் மீட்கும் நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் உயிர்ப்பெற முயற்சிக்கின்றனர்.

புத்தகம் எழுதுகிறார் கொண்டலீசா ரைஸ்

condalisa-rice.jpgஅமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் கொண்டலீசா ரைஸ்.

அவர் தனது பதவிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதவுள்ளார். இதற்காக அங்குள்ள பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் 8 ஆண்டு பதவிக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ரைஸ் புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும்.

முதல் புத்தகம் 2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டில் இரண்டாவது புத்தகம் வெளிவரவுள்ளது. இதில் தான் வளர்ந்த விதம் பற்றி ரைஸ் எழுதவுள்ளார்.

கனடா தமிழர் செந்தாமரை ஆசிரியர் காலமானார்

கனடாவின் ரொறண்டோ நகரில் இருந்து வெளியாகும் “தமிழர் செந்தாமரை” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கனக அரசரத்தினம் (வயது 58) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலமானார்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அரசரத்தினம் 1980 களில் ஆரம்பத்தில் வீரகேசரியில் ஒரு செய்தியாளராக இணைந்து தனது பத்திரிகைத்துறை வாழ்வை ஆரம்பித்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை விறுவிறுப்புடன் தருவதில் பெயரெடுத்த அரசரத்தினம் இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்தார்.

கனடாவில் அவர் வேறு தொழில் துறைகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் கூட ஊடகத்துறையில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக அங்கும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதிலேயே அக்கறை காட்டினார். தமிழர் செந்தாமரை என்ற வாரப்பத்திரிகையை சுமார் 15 வருடங்களாக ரொறண்டோவில் இருந்து வெளியிட்டுவரும் அரசரத்தினம் ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து ஊடகவியலாளர்களையும் முக்கியஸ்தர்களையும் அழைத்து கௌரவிக்கத் தவறுவதில்லை. இவ்வருட விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.

வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழ்ந்ததினால் தலையில் ஏற்பட்ட காயமே அரசரத்தினத்தின் மரணத்திற்கு காரணமாகியது. அவரது இறுதிக்கிரியைகள் ரொறண்டோவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.