செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

market-share.jpgகடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐரோப்பிய பங்குச் சந்தைகள். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாகவே சரிவுக்குள்ளாகியிருப்பதைத் தொடர்ந்து, கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வங்கித் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

எச்எஸ்பிசி, பிஎன்பி பாரிபஸ், ஐஎன்ஜி போன்ற வங்கிகளில் ஒருபக்கம் வேலையிழப்பும், மறுபக்கம் பங்குகள் சரிவும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் ஐரோப்பாவில் எதிரொலிக்கும் என்பதால், அந்நாட்டின் நிலைமையை உற்று நோக்கி வருகிறார்கள் ஐரோப்பிய பொருளியல் நிபுணர்கள்.

பொருளாதார வீழ்ச்சி துவங்கிய பிறகு அமெரிக்காவில் மட்டும் 44 லட்சம் பேர் ஜனவரி வரை பணியிழந்தனர். கடந்த ஜனவரியில் மட்டும் 550,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தைகளின் பங்கு வணிகமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் மாதம் மட்டும் ஐரோப்பாவில் வேலையிழப்புக்கு உள்ளாகும் பணியாளர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கிழக்கு பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக 16ம் திகதி திறக்கப்படும்

eastern-university.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை வர்த்தக முகாமைத்துவம் விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
 

மேலும் 406 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ship.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதிக்கு கௌரவம் அளிக்க ஜனாதிபதி முடிவு.

20090302.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை காப்பாற்றிய பஸ் சாரதியை இலங்கைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பாக்கிஸ்தான் சாரதியை அழைத்து பாராட்டுவிழா நடாத்துமாறு ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அமைய வெகு விரைவில் அவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும். ஊடக, மனித உரிமை அமைப்புக்கள்

tissanayagam.jpgபயங்கர வாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும் என, உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. எனினும் அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

அனைத்துலக மன்னிப்புச்சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு, அனைத்துலக ஊடக சம்மேளனம் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கிய ஊடக, மற்றும் மனித உரிமை அமைப்புக்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் தாக்குதலை விமர்சித்துப் பத்தி எழுதிய திஸ்ஸநாயகம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பார்வை மற்றும் உடல் நலக்குறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உடனடியாக மோதலை நிறுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை

ban-ki-moon.jpgஇலங்கைப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்களின் இழப்புகள் அதிகரித்துள்ளதையிட்டு வியாழக்கிழமை கடும் கவலை தெரிவித்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், உடனடியாக சண்டையை நிறுத்துமாறு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வன்னிப் பிராந்தியத்தில் போர் வலயத்திலுள்ள மக்களின் நிலைமை தொடர்பாக வியாழனன்று அறிக்கை விடுத்திருக்கும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகம் கடந்த மாதம் நிலைமை மோசமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. பெப்ரவரியில் மோதல் வலயம் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவாக சுருங்கியுள்ளது. 1 இலட்சத்துக்கும் 2 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான பொதுமக்கள் 14 சதுர கிலோமீற்றர் புதிய பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் புகலிடம் அடைந்திருப்பதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்கும் இலங்கை அரசும் புலிகளும் சண்டையை இடைநிறுத்த வேண்டுமென்று மீண்டும் பான் கீ மூன் அழைப்பு விடுத்திருப்பதாக அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்கள் பலர் உள்ள இடத்திலிருந்து தமது ஆயுதங்களையும் போரிடுவோரையும் அகற்றுமாறும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறும் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் தகவலின் பிரகாரம், பொதுமக்கள் யுத்த வலயத்திற்குள்ளும் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் தொடர்ந்து உயிரிழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஷெல் தாக்குதலால் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிவாரணப் பணியாளர்கள் செல்வதற்கு முடியாமல் இருப்பதால் எண்ணிக்கையை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியாமலுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதியில் அதிக சனச் செறிவு ஏற்பட்டுள்ளது. அங்கு உணவு தட்டுப்பாட்டால் மக்கள் இறப்பதாக ஐ.நா.வுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள நிலைமைகள் மலேரியா, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் மோசமாக பரவ வழிவகுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்நோய் பரவுவது தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மோதலில் சிக்கியுள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு உதவ 155 மில்லியன் டொலர்கள் தேவையென ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மோதலுக்கான பிரதான காரணங்களுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அதிதீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வீரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு எப்.பி.ஐ. உதவி

crc-04032009.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு விசாரணைகளுக்கு உதவ அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்துக் கலந்துரையாடிய எப்.பி.ஐ. யின் பணிப்பாளர் றொபர்ட் மியூலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தமது உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர்  ஏன் பெட்டர்சன் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் உள்விவகார ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ குழுவினர் 9ஆம் திகதி இலங்கை வருவர்

india-doctors.jpgஇந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர். 

“உண்மையான’ ஆண் பெண்ணை துன்புறுத்தான் – பான் கீ மூன்

ban-ki-moon.jpgபெண்களுக் கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  நாளை கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தாக்கம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பான், பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் ஆண்கள் அடிக்கடி சண்டைக்குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்குகிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நாட்டிய பயிர்களே எமக்கு உணவாகிறது. எமது சமூகங்களை ஒன்றிணைக்கும் இழைநாராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்ளுக்கெதிரான வன்முறைகளை அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களாகத் கருதவேண்டும். இவை எமது உயர்ந்த நாகரிகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். எனவே இவ்வாறான வன்முறைகள் வெறுக்கத்தக்கவையாகவும் ஐ.நா. சாசனத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரானவையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  உலகம் பூராகவும் ஐந்தில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படும் அதேவேளை, சில நாடுகளில் மூன்றில் ஒரு பெண் வீதம் அடித்து துன்புறுத்தல் அல்லது ஏனைய வகை துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்ததையடுத்து “பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற அழைப்புடன் கடந்த வருடம் பான் உலகளவிலான பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்.

அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கி முனையில் 4 படைவீரர்களால் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது யுவதியொருவரை சந்தித்ததாக தெரிவித்த பான், இச்சம்பவத்தால் அப் பெண் உடல் ரீதியாக மட்டும் துன்புறுத்தப்படவில்லை, சமூகம் அப்பெண்ணை களங்கப்பட்டவளாக நோக்குவதால் மனதளவிலும் அப்பெண் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். வெட்கம் என்ற தவறான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குறிப்பிட்ட பெண்ணின் குடும்பமும் சமூகம் தீண்டத்தகாதவளாக அவளை ஒதுக்கி வைக்கின்றதென தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய பான்கிமூன், “வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மரணம், காயம், மருத்துவ செலவீனம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை சிறியதாக இந்தாலும் அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது’ எனத் தெரிவித்துள்ளார். எனவே “இவ்வாறான துன்புறுத்தல்களுக்கெதிர?க ஆண்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் என்ற கருத்தை ஆண்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியதும் அவசியமாகும். மாற்றத்திற்கான தருணத்தை நாம் சந்தித்துள்ள இவ்வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவரிடமும் வேண்டுகோள்விடுக்கின்றேன்’ என பான் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – ஐ.தே.க

ravi-karunanayaka.jpg இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் முதனிலை நிறுவனங்களாகக் கருதப்படும் 41 நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து 182 பில்லியன் மேலதிகப் பற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.