செய்திகள்

செய்திகள்

செய்திகள்

படையினர் இழப்பு குறித்து தகவல்களை வெளியிடுமாறு திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை

parliament.jpgயுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் வெளிவராதது பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுட்டிக் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி., இது தொடர்பான தகவல்களை வெளியிடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; யுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் அவர்களது பெற்றோருக்கு கிடைப்பது குறைவடைந்துள்ளது. இது பாரிய பிரச்சினையாகும். எனவே, இதுபற்றி கவனம் செலுத்தி தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாதம் என்பது ஒரு இடத்தில் இருப்பதில்லை. அடிக்கடி பயங்கரவாதம் தலைதூக்கும். இதை நாம் வரலாற்றிலும் கண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையின் பிரகாரம் முப்படையினரும் தமது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், அதை நீண்ட காலம் பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ள அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

எனவே, அதற்கானதொரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினர் பெற்ற வெற்றிகளை தக்க வைக்க முடியாமல் போய்விடும். அது படையினர் உயிர்த் தியாகம் செய்து அவயவங்களை இழந்து பெற்ற வெற்றிகளை குறைத்து மதிப்பிடுவதாக போய் விடும். பயங்கரவாதத்தை அழிப்பதுடன் நின்று விடாது, மக்களின், வாழ்க்கை பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மீண்டும் பயங்கரவாதம் வளர்ந்து விடும்.

இதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கை ரத்தாகி ஒரு வருடமாகி விட்ட போதிலும் அதைப் பற்றியே பேசப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் நோர்வே தரப்பையும் முதலில் பொதுஜன ஐக்கிய முன்னணியே கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் போர் நிறுத்த உடன்படிக்கையின் வெற்றி என்னவென்பதை கருணாவையும் பிள்ளையானையும் கேட்டால் தெரியும். இந்த உடன்படிக்கை காலத்தில் தான் புலிகள் 2, 3 ஆக பிரிவுகளாக பிளவுபட்டனர். மக்களைக் கேட்டால் இதைச் சொல்வார்கள். அது மட்டுமல்லாது, இந்த உடன்படிக்கையினால் தான் சர்வதேச ரீதியில் இலங்கை மீதிருந்த அபகீர்த்தியையும் குறைக்க முடிந்தது’ என்றார்.

இலங்கை நிலைவரம்; நோர்வே அமைச்சருடன் ஹிலாரி ஆராய்வு

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனால் கார் ஸ்ரோரேயுடன் கலந்துரையாடியுள்ளார்.  அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நெருக்கடி, மனிதாபிமான நிலைவரம், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை  செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நோர்வே அமைச்சருடனான சந்திப்பில் ஏனைய விவகாரங்களுடன் இலங்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக ஹிலாரி கூறியுள்ளார்.

“இலங்கையில் மோலை முடிவுக்கு கொண்டுவர நோர்வே மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகள் தொடர்பாக நாம் ஆராய்ந்தோம். காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, இலங்கை உட்பட கணிசமான பிராந்திய விவகாரங்கள் தொடர்பான தாக்கங்கள் மற்றும் சவால்கள் குறித்து நாம் ஆராய்ந்தோம்’ என்றும் ஹிலாரி கூறியுள்ளார்.

அரசியல்வாதி வாக்களிக்கும்போது புகைப்படம் எடுக்க தடைவிதிப்பு

election_ballot_cast.jpgமேல் மாகாணசபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் வாக்களிக்கும்போது புகைப்படமெடுப்பதை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தடைசெய்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஊடகவியலாளர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் எவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாமென அவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவராக இருப்பினும் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக் கூட அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள்ளும் ஊடகவியலாளர்களையோ, படப்பிடிப்பாளர்களையோ தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களையோ அனுமதிக்க வேண்டாமென தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்களிடம் பேட்டி காணவும் புகைப்படமெடுக்கவும் விரும்பும் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நூறு யார் தொலைவுக்கப்பால் அதனைச் செய்ய முடியுமெனவும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் தேவி இன்று முதல் வவுனியா வரையில் சேவை!

bati-trnco.jpgதமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ் தேவி ரயில் இன்று மீண்டும் வவுனியா வரைக்கும் சேவையில் ஈடுபட்டது. பாதுகாப்பு கரணங்களை முன்னிட்டு இச்சேவை முன்னர் மதவச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று காலை 5 :45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயில் முற்பகல் 10.10 மணக்கு வவுனியாவை அடைந்தது. இன்று மாலை வவுனியாவிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்ளம் அறிவித்துள்ளது. இன்று முதல் தினமும் காலை 5.45 மணிக்கு யாழ் கடுகதி வவுனியா வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டென்மார்க் வெளிவிவகார அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர் கைது

denmark.jpgடென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து

நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் -வைகோ

vaiko-black-flag.jpgஇலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சென்னையி்ல் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாஜக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார். இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தமிழர்கள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராமநாதபுரம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய இந்தத் தாக்குதலில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த யுவதியொருவர் மீது சந்தேகம் கொண்ட படையினர், அவரை தடுத்து நிறுத்திய போது, அவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார். எனினும், ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த யுவதி அங்கு வந்ததாகவும் எனினும் அங்கிருந்த படையினர் அந்த யுவதியின் திட்டத்தை குழப்பிவிட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்: திருமாவளவன்

thiruma_8-4.jpgமக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று, ஈழத் தமிழர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர்,

சிதம்பரம் தொகுதியில் நான் 3வது முறையாக போட்டியிடுகிறேன். ஏற்கனவே 2 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பெரும்பாலான மக்களின் நன்மதிப்பையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றேன். எனவே, மக்கள் வெற்றிவாய்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கையிலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையிலும் மீண்டும் 3வது முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளேன். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக, இந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் தற்போது அரசியல் அதிகாரம் இல்லை. எனவே, இலங்கை தமிழர் பிரச்சனையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று, நாடாளுமன்றம் செல்வோம். அங்கு இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து வலியுறுத்துவோம்.

அரசியலமைப்பு பேரவையை அமைப்பதில் இழுபறி நிலை – ரணிலுக்கு பிரதமர் விளக்கம்

parliament.jpg அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ள நிலையில், அச்சபையை நியமிப்பதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பெயர்களை சிபார்சு செய்திருப்பதால் மட்டுமே அரசியலமைப்பு சபை நியமித்துவிட முடியாதென்றும் அந்தப் பெயர்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

இதேநேரம், சிறிய கட்சிகள் சார்பாக அரசியலமைப்பு சபைக்கு பெயர்களை சிபார்சு செய்யும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா இதன்போது சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் அரசியலமைப்பு சபை நியமனம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையை அடுத்து ஏற்பட்ட வாத பிரதிவாதங்களில் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டன.

இன்று ஜே.வி.பி. கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jvp-0804.jpgமக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:

“மேல் மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எமது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்கிரமடைந்து எமது கட்சி ஆதரவாளர் ஒருவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களாகியும், பொலிஸார் ஒரு சந்தேகநபரைக் கூட இதுவரை கைது செய்யவில்லை. தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறியின் வாகனத்தில் வந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அனைத்து சாட்சியங்களுடன் இதனை நாம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம்.

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பொலிஸார் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எமது கட்சியை அழிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கத்திற்கு நாம் சரியான பாடம் புகட்டுவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.