கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராமநாதபுரம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய இந்தத் தாக்குதலில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு வந்த யுவதியொருவர் மீது சந்தேகம் கொண்ட படையினர், அவரை தடுத்து நிறுத்திய போது, அவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார். எனினும், ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த யுவதி அங்கு வந்ததாகவும் எனினும் அங்கிருந்த படையினர் அந்த யுவதியின் திட்டத்தை குழப்பிவிட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.