மேல் மாகாணசபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் வாக்களிக்கும்போது புகைப்படமெடுப்பதை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தடைசெய்துள்ளார்.
வாக்களிப்பு தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஊடகவியலாளர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் எவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாமென அவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவராக இருப்பினும் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக் கூட அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள்ளும் ஊடகவியலாளர்களையோ, படப்பிடிப்பாளர்களையோ தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களையோ அனுமதிக்க வேண்டாமென தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அரசியல் தலைவர்களிடம் பேட்டி காணவும் புகைப்படமெடுக்கவும் விரும்பும் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நூறு யார் தொலைவுக்கப்பால் அதனைச் செய்ய முடியுமெனவும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.