செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புத்தாண்டு காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு- விழிப்பாக இருக்க மக்களுக்கு வேண்டுகோள்

sri-lanka-police.jpgபுத்தாண்டு காலப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புத்தாண்டு சமயத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் தேர்தல் வேளையிலும் பொதுமக்கள் கூடுதலாக ஒன்றுகூடுவார்கள். இதன்போது பொதுமக்கள் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையக ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான நகரங்களிலும் கிராமங்களிலும் சன நெரிசல் ஏற்படுவதால் அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொதிகளை சோதனையிடும் பாதுகாப்புத்தரப்பினர் முக்கிய இடங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

புலிகள் இயக்கம் பலமடைய ஐ.தே.கட்சியே காரணம் – அமைச்சர் அனுர பிரியதர்ஷன

anura.jpgஉலகிலேயே மிக மோசமான பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கம் பலமடைவதற்கு ஐ. தே. க.வே காரணமாக இருந்தது. புலிகளை போஷித்தவர்களும் அவர்களே என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதன் மூலம் நன்மையே கிடைத்துள்ளது என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது தவறுகளை மூடிமறைக்க முயற்சிகின்றார் எனவும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்திகள் மாநாடு நேற்று நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த போது புலிகளுக்கு பணமும், ஆயுதமும் வழங்கினார். அத்தருணத்தில் இலங்கையிலிருந்த இந்திய இராணுவத்திற்கும் தெரியாது. இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் தெரியாது. ஏன் எமது இராணுவத்துக்கே தெரியாமல்தான் ஆயுதங்களை வழங்கினார். இதனால் புலிகள் மேலும் போஷிக்கப்பட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் நாட்டின் பெரும் பாகத்தை தாரைவார்த்துக் கொடுத்தார். புலிகள் தமக்கு வேண்டிய விதத்தில் செயற்பாட்டார்கள். ஒளி/ஒலிபரப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ஒரே தினத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டன. நவீன ஆயுதங்கள், தொழில் நுட்பக்கருவிகள் கொண்டுவந்தார்கள். ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட காலப்பகுதிக்குள் எவ்வளவு நவீன ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதை இன்று படையினர்கைப்பற்றும் ஆயுதங்களூடாக கண்கூடாக பார்க்கமுடிகிறது.

இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க தனது உள்வீட்டு விவகாரத்திற்கு கூட முகம் கொடுக்க முடியாமல் விட்ட தவறுகளை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

செட்டிக்குளம் வைத்தியசாலை ரூ. 72 மில். செலவில் அபிவிருத்தி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் செட்டிக்குளம் தள ஆஸ்பத்திரி 72 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியை வழங்க ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்திருக்கிறது.

இதனடிப்படையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல கஹந்த லியனகேயும், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்கவும் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியுதவியின் கீழ் 400 படுக்கைகளைக் கொண்ட ஆஸ்பத்திரியாக செட்டிகுளம் தள வைத்தியசாலை மேம்படுத்தப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். தற்போது இந்த ஆஸ்பத்திரியில் 131 படுக்கைகளே இருப்பதாகவும் அவை அப்பிரதேசத்தில் தற்போது தங்கியுள்ள மக்களுக்கு ஆரோக்கிய சேவை வழங்கப் போதியதாக இல்லை என்பதைக் கருத்திற் கொண்டு இந்த ஆஸ்பத்திரியை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிகட்ட நடவடிக்கையில் இராணுவம்: இலங்கை பாதுகாப்பு அமைச்சு

army-wanni.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிய பகுதியில் விடுதலைப் புலிகளால் மனித கேடயமாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் மக்களை, விடுவிப்பதற்கான இறுதி மீட்பு நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அம்பலவன் பொக்கணைக்கு மேற்கேயும் புதுமாத்தளனுக்கு தெற்கேயும் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைகளில் இராணுவத்தினர் தமது நிலைகளை நடவடிக்கைகளுக்காக நகர்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மண் சுவர்களுக்கு 150 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், அங்கு அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக இலங்கை இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட மீட்பு நிலைகள் சில அமைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வழிகளின் ஊடாக மக்களை வருமாறு கோரும் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

அதேவேளை, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சில மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால், இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசியல் ஆலோசனை, கூட்டு ஆணைக்குழு, வர்த்தக சம்மேளன புரிந்துணர்வு: -லிபியாவில் மூன்று ஒப்பந்தம்

mahi-kadabi.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று நாள் உத்தியோகபூர்வ லிபிய விஜயத்தின் போது இலங்கைக்கும் லிபியாவுக்குமிடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பொருளாதார, கலாசார மற்றும் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு கூட்டு ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், அரசியல் ஆலோசனைகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டிருக்கின்றன. ஒரு நாடுகளின் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையிலும் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லிபிய வெளிவிவகார அமைச்சரும் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். லிபிய ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் கடாபியுடன் இரண்டாவது தடவையாக நடைபெற்ற விசேட பிரத்தியேக சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் லிபியாவின் திரிப்போலி நகரை நேற்று முன்தினமிரவு சென்றடைந்தனர்.

அங்கு லிபிய சுகாதார அமைச்சர் அலி முஹம்மத் ரிஜாஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு உட்சாக வரவேற்பு அளித்தார். திரிப்போலி நகரில் இரு நாடுகளினதும் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் இலங்கை வர்த்தக சம்மேளன குழு உறுப்பினர் ஜி. தம்மிக்க பெரேராவும், லிபிய வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சபையின் தலைவருமான ஜி ஹுசமா அலி அலுஸ்பாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

எமது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை -யாப்பா

anura.jpgவைகோ வாக இருக்கலாம் அல்லது வேறு எவராகவேனும் இருக்கலாம். எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமிழகத்திலுள்ள ‘வைகோ’வை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். தமிழினம் அழிந்தால் தமிழகம் கொந்தளிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். தமிழகம் இன்று பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் பாரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் குறிப்பிட்ட கொஞ்ச ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு இருக்கும் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்தான் வைகோ என்பவர். அவர் வன்னிக்கு வந்து புலிகளுடன் பேசியது மட்டுமல்ல, புலிகளின் சீருடையையும் அணிந்து ஆயுதம் கையிலேந்தியவர்தான். எனவே அவரது கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

பிரபாகரன் என்பவரை இந்திய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியிருப்பதுடன் இந்தியாவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டவராகவும் கருதப்படுகிறார். பயங்கரவாதப் பிரச்சினையை அரசாங்கம் இன்று வெற்றிகரமாக முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து பரிதவிக்கும் சிறுவரை பராமரிக்க திருச்சபை அமைப்புகள் முன்வருகை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென்ற விருப்பத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப், இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக அம்மாவட்ட குருமுதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வருகை தந்து செட்டிகுளம் அருணாச்சலம் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை புதன்கிழமை மாலை ஆயர் சென்று பார்வையிட்டார். 14 ஆயிரம் மக்களை கொண்டுள்ள இம்முகாமில் சிறியதொகை மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

இடைத்தங்கல் முகாம் மற்றும் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ள முதியோர் 150 பேர் வவுனியா பம்பைமடுவிலுள்ள அன்னை திரேசா முதியோர் இல்லத்தில் ஆயரின் உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிகமான 100 பேரை மன்னார் பட்டித் தோட்டத்தில் அமைந்திருக்கும் அன்பு கன்னியர் நடத்திவரும் இல்லத்தில் தங்கவைக்க முடியுமென்பதால் அவர்களை அங்கு அனுமதிக்குமாறு இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை கோரியுள்ளார்.

இதன் அடிப்படையில் 15 முதியவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து நிர்க்கதியாகியுள்ள சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென விரும்புவதாக ஆயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கோரியுள்ளார். அதேபோல கால், கைகளையிழந்துள்ளவர்களை பராமரிக்க திருச்சபை அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgசுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற் பன்னப்பட்டு விற் பனை செய்யப்படும், சீனி, பருப்பு என்பன நுகர்வோர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அல்லது அதற்கு குறைவாகவோ விற்பனை செய்யா தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் வெள்ளைச் சீனி ஒரு கிலோ 73 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் குறைவாகவே விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் சில வர்த்தக நிலையங்களிலும், சுப்பர் மார்க்கட்டுகளிலும் பக்கட் பன்னப்பட்ட சீனி, பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் பருப்பு 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதன் பின்னர் லக் சதொசவில் பருப்பு ஒரு கிலோ 154 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

பக்கற் பன்னப்பட்டதற்காக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. எந்தவொரு பொருளுக்கும் பொதியிடும் செலவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே இந்த அரசிடமிருப்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது -கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை சர்வதேசம் இன்று உணரத் தொடங்கியுள்ளது. இந்த அரசாங்கத்திடம் தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனை உணர்ந்தே சர்வதேச நாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியவர்கள் இன்று தீர்வை முன்வைக்குமாறு நிர்பந்திக்கின்றனர்.

இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேல் மாகாணசபைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து கொலன்னாவ சாத்தம்மா தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

தொடந்து பேசிய அவர்; பொறுப்பும், கௌரவமும் மிக்க பதவியான பிரதமர் பதவியில் இருப்போர் சவப்பெட்டி, ஆணி, இரத்தம்மென மக்களை போரை நோக்கி நகரச் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இன்று வன்னியில் வாழும் மக்கள் தம் மண்ணை விட்டு அகலமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இம்மக்களின் மன உறுதிக்கு மாசு கற்பிக்க முயன்ற அரசின் முயற்சிகள் யாவும் தவிடுபொடியாகி உள்ளது. இன்று தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக நாம் மட்டுமே போராடுகின்றோம். மற்?றய கட்சிகள் என்ன செய்கின்றன.

ஐக்கிய தேசியக்கட்சி தென்னிலங்கையில் நடக்கும் மரண வைபவங்களுக்கு கதிரைகளை வழங்கிவருகின்றது. போரைப்பற்றியோ, தீர்வை பற்றியே ஐக்கிய தேசியக்கட்சி இன்று அதிகம் கதைப்பதில்லை. அவசரகாலச்சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும்போது எதிர்த்துவாக்களிக்காமல் ஒதுங்கி போவது அதற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானதாகும். எதிர்வரும் காலங்களில் வார்த்தைகளால் மக்களுடன் விளையாடமுடியாது. சரியான நிலைப்பாட்டுடன் மட்டுமே மக்களை அணுகமுடியுமென்றார்.

கருணாநிதியின் அலெக்ஸாந்தர்-போரஸ் ஒப்பீட்டுக்கு எதிராக கண்டனங்கள்

karunanithi.jpgஇலங் கையில் நடைபெறும் சண்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், போரஸ் மன்னரை அலெக்ஸாண்டர் நடத்தியதைப் போல கெளரவமாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட நடைபெறும் போரைத் தடுத்து நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வாதாடுவதை விட்டுவிட்டு, போருக்கு முதல்வரே முடிவுரை எழுத முற்றப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசிய பேச்சு தொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, இது மிகப்பெரிய இனத் துரோகம் என்று கண்டித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்ப்டடால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பேசிய வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ, தமிழகம் கொந்தளிக்கும் என்று மத்திய, மாநில அரசுகளை நல்லெண்ணத்தோடு எச்சரித்ததாக விளக்கமளித்துள்ளார்