உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கம் பலமடைவதற்கு ஐ. தே. க.வே காரணமாக இருந்தது. புலிகளை போஷித்தவர்களும் அவர்களே என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதன் மூலம் நன்மையே கிடைத்துள்ளது என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது தவறுகளை மூடிமறைக்க முயற்சிகின்றார் எனவும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்திகள் மாநாடு நேற்று நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த போது புலிகளுக்கு பணமும், ஆயுதமும் வழங்கினார். அத்தருணத்தில் இலங்கையிலிருந்த இந்திய இராணுவத்திற்கும் தெரியாது. இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் தெரியாது. ஏன் எமது இராணுவத்துக்கே தெரியாமல்தான் ஆயுதங்களை வழங்கினார். இதனால் புலிகள் மேலும் போஷிக்கப்பட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் நாட்டின் பெரும் பாகத்தை தாரைவார்த்துக் கொடுத்தார். புலிகள் தமக்கு வேண்டிய விதத்தில் செயற்பாட்டார்கள். ஒளி/ஒலிபரப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ஒரே தினத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டன. நவீன ஆயுதங்கள், தொழில் நுட்பக்கருவிகள் கொண்டுவந்தார்கள். ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட காலப்பகுதிக்குள் எவ்வளவு நவீன ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பதை இன்று படையினர்கைப்பற்றும் ஆயுதங்களூடாக கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க தனது உள்வீட்டு விவகாரத்திற்கு கூட முகம் கொடுக்க முடியாமல் விட்ட தவறுகளை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.