இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென்ற விருப்பத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப், இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக அம்மாவட்ட குருமுதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வருகை தந்து செட்டிகுளம் அருணாச்சலம் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை புதன்கிழமை மாலை ஆயர் சென்று பார்வையிட்டார். 14 ஆயிரம் மக்களை கொண்டுள்ள இம்முகாமில் சிறியதொகை மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
இடைத்தங்கல் முகாம் மற்றும் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ள முதியோர் 150 பேர் வவுனியா பம்பைமடுவிலுள்ள அன்னை திரேசா முதியோர் இல்லத்தில் ஆயரின் உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிகமான 100 பேரை மன்னார் பட்டித் தோட்டத்தில் அமைந்திருக்கும் அன்பு கன்னியர் நடத்திவரும் இல்லத்தில் தங்கவைக்க முடியுமென்பதால் அவர்களை அங்கு அனுமதிக்குமாறு இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை கோரியுள்ளார்.
இதன் அடிப்படையில் 15 முதியவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து நிர்க்கதியாகியுள்ள சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென விரும்புவதாக ஆயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கோரியுள்ளார். அதேபோல கால், கைகளையிழந்துள்ளவர்களை பராமரிக்க திருச்சபை அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.