உலகமெங்கும் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு மேலாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.
“உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஊடகவியலாளர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அல்லது தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அஸர்பைஜான் முதல் ஸிம்பாப்வே வரை, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரை, கியூபா முதல் எத்த்திரியா வரை இந்த நிலை உள்ளது. இவ் விடயத்தில் மனத்துயரை உண்டாக்கும் உதரணங்களாக தோன்றுவது இலங்கையில் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் சீனாவில் ஷிடாலோ மற்றும் ஹு ஸ்ரீயாவோ ஆகியோராவர்.
உண்மையை பொறுப்புடன் வெளிப்படுத்தும் முழு உலகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்த தைரியமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக இன்று என் குரலை எழுப்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் தோமஸ் ஜெர்ப்பஸன் கூறிய வார்த்தைகளை நினைவு கூருகிறேன். எமது அரசாங்கத்தின் அடிப்படை மக்களின் அபிப்பிராயமேயாகும். அந்த நோக்கத்திற்கான உரிமை காக்கப்பட வேண்டும். மேலும் ஊடகமில்லாத ஒரு அரசாங்கம் வேண்டுமா? அல்லது அரசாங்கமில்லாத ஊடகம் வேண்டுமா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.,.
