செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour – புன்னியாமீன்

world-day-against-child-labour.jpgசிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலகதினம் World Day Against Child Labour  ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.

பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ,  மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ஆம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995இல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும்,  இளைஞர் 14 – 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள். 

எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும்  மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.

சிறுவர் உரிமையில் சில  அம்சங்களை கீழ்வருமாறு  சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 – இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.

2007 இல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,

2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்
80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.
குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.

 உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.
வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.
இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ஆம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம்.

மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.

‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள்.

1986 இல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997 இல்  ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லை

எடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை  சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன.

பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வஸிரிஸ்தான் மாகாணத்தின் எஞ்சிய பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்

தலிபான் களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையில் நேற் றிரவு இருபது தலிபான்கள் உயிரிழந்தனர். தலி பான்களின் முக்கிய தலைவர்கள் அல்கைதாவின் தலைவர்கள் மறைந்துள்ளதாகக் கருதப்படும் பான்னா மாவட்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் அரம்பமாகியுள்ளன.

வஸிரிஸ் தான் பிர தேச இராணுவ நடவடிக்கைகள் வெற்றியடை ந்து வரும் நிலையில் இராணுவத்தினர் முக்கிய கட்டத்துக்குள் வந்துள்ளனர். பான்னூ மாவட்ட த்தில் அல் கைதாவின் தலைவர்கள் மறைந்திருந்து மேற்குலகிற்கும் அமெரிக்காவுக்கு எதிராகத் திட்டமிடுவதாக அமெரிக்கா கருதுகின்றது. இத னால் பான்னூ மாவட்டத்தில் முன்னெடுக்கப்ப டும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்கள் அகலத் திறந்துள்ளன.

இரண்டு தினங்களுக்கு முன்னர் பான்னூ மாவட்டத்துக்குள் இராணுவம் நுழைந்த போது தலிபான்கள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். கடுமையான மோதலின் பின் இராணுவம் அப்பகுதிக்குள் பிரவேசித்தது. இச்சண்டையில் அறுபது தலிபான்கள் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடை ந்தனர். பின்னர் பான்னூ மாவட்டத்திலுள்ள தலிபான்களின் மறைவிடங்கள் முகாம்களைத் தேடும் நடவடிக்கை இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது.

வஸிரிஸ்தான் மாகாணத்தை தலிபான்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை மூன்று மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பான்னூ மாவட்டத்தை மீட்கும் இராணுவ நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பமா னது. இதன் முதற்கட்டத்தில் இருபது தலிபான்களும் மூன்று படைவீரர்களும் உயிரிழந்தனர்.

ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமா?

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்து இறந்து போன பயணிகளில் இருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் ரகசிய போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ரகசியப் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட இரு பயணிகளின் பெயர்களும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பெயர்களைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் சட்டவிரோத கடைகள் உடைப்பு

மட்டக் களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் இன்று (11.06.2009) காலை உடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திருக்கொண்டியாமடு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீட்டர் பாதையை அகலமாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காத்தான் குடி நகரசபை தலைவர் யூ எல் முபின் தெரிவித்துள்ளார்.

இந்த வீதி புனரமைப்பிற்கு ஜப்பான் அரசு 3600 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளது. இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க தெரிவுக்குழு அமைக்கும் யோசனை – அரசு நிராகரிப்பு

parliament-of-sri-lanka.jpgஊடக வியலாளர்கள் கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதன்கிழமை சபையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறானதொரு தெரிவுக்குழுவுக்கு தற்போது எந்த அவசியமும் கிடையாதென அரசாங்கம் மறுத்து விட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசிய எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவும், ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவிக்கையில்;

வடக்கிலும் தெற்கிலும் தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாகிவிட்டது. எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது வடக்கில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டாலுமே தெற்கில் பயங்கரவாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கானதொரு சமிக்ஞையைக் காட்டியுள்ளது. அதாவது இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் வீசிச் செல்லப்பட்டிருக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக் கேடானதுமான செயலென நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகவியலாளர்களுக்குத் தமது கருத்துகளை எழுத்து மூலமும் சரி, பேச்சு மூலமும் சரி வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் எமது அரசியலமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருக்கும் உரிமையாகும்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான ஆட்சிக் காலத்தில் 11 “ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நாம் இந்த சபையில் தகவல்களை வெளியிட்டிருக்கிறோம். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எமக்கு திருப்தியடைய முடியாது. ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேக நபரையும் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கடத்தி தாக்கப்படும் சம்பவங்களையும் தடுத்துக்கொள்வது எம் அனைவரினதும் பொறுப்பாகும். இதனடிப்படையில் சகல விடயங்களையும் ஆராய்ந்து இதுவரை இடம்பெற்றுள்ள படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பாக பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களுடன் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன், அதற்குரிய அதிகாரத்தின் பிரகாரம் பொலிஸாரால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் இந்தத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும் யோசனை செய்கிறோம்’ என்றார். அமைச்சர் யாப்பா இதற்குப் பதிலளித்த ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா பேசுகையில்;

“இது பயங்கரவாதம் இருந்த நாடு. எனவே, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு அனைத்திற்கும் உதாரணம் காட்டுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் அரசாங்கம் என்ற வகையில் தேடிப் பார்க்கும் பொறுப்பு எமக்குள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போதும் வெளிநாட்டு தலைவர்கள் இலங்கை வரும்போதும் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் கவலையடைகிறோம். அசோசியேட் நியூஸ் பேப்பர்ஸ் (லேக்ஹவுஸ்) நிறுவனத்திலேயே பணிபுரிகிறார். அவருக்கும் அரசாங்கத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அது மட்டுமல்லாது கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் அவர் அரசுக்குச் சார்பாகவோ அல்லது எதிராகவோ எதுவும் எழுதினாரா என்று கூட எமக்குத் தெரியாது.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு (போத்தல ஜயந்தவிற்கு) வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான உரிமையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லை. அப்படியான சட்டங்களைக் கொண்டு வரும் எண்ணமும் எமக்குக் கிடையாது.

இதேநேரம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் சிலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளது. சிலவற்றைத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும். எனவே, இதற்கு தெரிவுக்குழுவொன்று அவசியமில்லை. ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதுமே கடமைப்பட்டுள்ளது’

வணங்காமண் கப்பலை திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற செயல்: நெடுமாறன்

vanangaaman-captainali.jpgவணங் காமன் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது மனித நேயமற்ற கொடிய செயல் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டினர். அவற்றை ‘வணங்காமண்’ என்னும் கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், அக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது மனித நேயமற்ற கொடிய செயல்.

நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை பதவி பிரமாணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாளை நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே தேர்தல் திணைக்களத்தினால் இவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இக் கட்சி சார்பில் முதலாவது இடத்தைப் பெற்றிருந்த கனகசபை பத்மநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

அவருக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மரணமடைந்த நிலையிலேயே மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை அந்த இடத்திற்கு நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

லண்டனில் ரயில்கள் வேலை நிறுத்தம்:பல லட்சம் மக்கள் அவதி

tube-train_pa.jpgலண்டன் பாதாள ரயில் ஊழியர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதன் காரணமாக பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தினந்தோரும் பாதாள ரயிலை பயன்படுத்தும் 35 லட்சம் பயணிகளின் தேவைக்காக கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு, வேலையிடங்கள் குறைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைக்க புதிய கட்டிடம் – 15ஆம் திகதி திறந்து வைக்கப்படும்

sumeda_jayasena.jpgகிளி நொச்சியிலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 349 இடம்பெயர்ந்த சிறுவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்ல கட்டிடம் எதிர்வரும் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படுமென சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் சுமார் 50 ஆயிரம் சிறுவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெற்றோரை இழந்த சுமார் 850 சிறுவர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்தச் சிறுவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு அவர்களின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலன்புரி முகாம்களிலுள்ள பெண்களை சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

11 சிசுக்கள் உட்பட 62 பேரின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரி பிரேத அறையில்

வவுனியா முகாம்களில் கடந்த 16 நாட்களில் மரணமடைந்த 11 சிசுக்கள் உட்பட 62 பேரது உடல்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி வரையான 16 நாட்களில் உயிரிழந்தவர்களின் உடல்களே இவையாகும்.

இந்த 62 பேரில் பெரும்பாலானோர் செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாம்களைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வவுனியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள முகாம்களைச் சேர்ந்தவர்கள்.

நோய், போதிய பராமரிப்பின்மை, போசாக்கு குன்றியமை காரணமாகவே இதில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். இந்த 62 சடலங்களில் 51 சடலங்கள் வயோதிபர்களுடையது. இவர்களது குடும்பத்தவர்கள் இவர்களைப் பிரிந்து வெவ்வேறு முகாம்களில் இருப்பதால் இவர்கள் இறந்த விபரங்களும் குடும்பத்தவர்களுக்கு தெரியாதுள்ளது.

இவ்வாறு இறப்போரின் உடல்களை அடையாளம் காட்டவோ இறுதிக் கிரியைகளைச் செய்யவோ எவருமே வராத நிலையில் அனைத்துச் சடலங்களும், ஒரே குழிகளில் போடப்பட்டு புதைக்கப்படும் நிலையே காணப்படுகிறது. வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறு நூற்றுக்கணக்கான வயோதிபர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிசுக்கள் யாவும் பிறப்பின்போது மரணித்தவையென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆஸ்பத்திரி சவச்சாலையில் இடவசதியின்மை காரணமாக இந்த சடலங்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.