செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என  தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில்; போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் அதன் கட்டுப்பணத்தை அந்தந்த மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை செலுத்த முடியும் எனவும் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சாவகச்சேரி, நெல்லியடியிலிருந்த அகதிகள் கொடிகாமத்துக்கு மாற்றப்பட்டனர்

சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த 2700 வன்னி அகதிகள் கொடிகாமம் இராமா புனர்வாழ்வு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் 600 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் பின்னர் இராமா கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இப்புனர்வாழ்வுக் கிராமத்தில் கூட்டுறவுச்சங்க கிளைகள், சமூக மண்டபங்கள், படிப்பகம் , விளையாட்டு மைதானம், தொழில் பயிற்சி பெறுவதற்கான நிலையங்கள், தற்காலிக பாடசாலைகள் என்பன நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தொலைபேசி, தபால், வங்கிச்சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இருந்தும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்தும் வெளியேறியதையடுத்து இப்பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டிடத்தில் இயங்கவுள்ளன. பாடசாலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு – பாதுகாப்பு அமைச்சு தகவல்

gothabaya7777.jpgஇலங் கைக்கான அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகர் கெதிக்ளுக்மன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையிலான இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இடம் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருதை தந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் பிரதி பிரதம அதிகாரி ரியட் அட்மிரல் டேவிட் தோமஸ்,  வடக்கு மற்றும் தெற்காசியாவுக்கான சர்வதேச திட்டப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கார்பிஸ் எவகியன் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு அதிகாரி கெப்டன் ஜொனதன் மீட் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.  

இதேவேளை,  அவுஸ்திரேலிய கடற்படையின் உயர் அதிகாரிகள் குழு பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவை கொழும்பிலுள்ள கூட்டு நடவடிக்கைத் தலைமையத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அகதிகளுக்கு போதிய மலசலகூட வசதி வழங்காததற்கு ஐ.நா.வே பொறுப்பு – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு போதியளவுக்கு மலசலகூட வசதிகளை வழங்காததற்கான பொறுப்பை ஐ.நா.வே ஏற்கவேண்டும் என்று மீள்குடியேற்ற விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ளோரின் அரைவாசிப் பகுதியினருக்கே மலசலகூட வசதிகள் உள்ளதாகவும் குளிக்கும் வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் ஐ.நா.தெரிவித்திருந்தது.ஆனால், ஐ.நா.வுக்கு அரசாங்கத்தின் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக வசதிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நிதியுதவி ஐ.நா.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான “சந்தேசிய’விற்கு கூறியுள்ளார். தாமதம் அவர்கள் தரப்பிலேயே(ஐ.நா.) உள்ளது. அதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று ரிசாட் கூறியுள்ளார்.

இதேவேளை, முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது அசாதாரணமானதல்ல என்று அரசாங்கம் கூறியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் முதியவர்களும் சிறுவர்களுமே என்று சமூகசேவைகள் பிரதியமைச்சர் லயனல் பிரேம சிறி பி.பி.சி.க்கு கூறியுள்ளார். “அதனால் முகாம்களில் உள்ள முதியவர்கள் இறப்பது இயற்கையானதே’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

முதியவர்களை மீளக்குடியமர்த்தும் பொறுப்பை இராணுவத்திடமிருந்து பொலிஸார் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேசமயம், முகாம்களின் நிலைமை சிறப்பாக இல்லையென்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

சொந்த வீடுகள்,தோட்டங்கள் போன்று நிலைமை இல்லை. ஆயினும் நாம் அவர்களுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

வயது முதிர்ந்தவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் அரசாங்கம் மிகக் கவனத்துடன் இருப்பதாகவும் ஏனெனில் உறவினர்களால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள கணிசமான அளவு மக்களுக்குப் பிராந்தியத்தில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களை வெளியேற அனுமதித்தால் அவர்கள் உறவினர்களுடன் தங்கியிருக்க முடியும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி 10-60 வயதுக்கு இடைப்பட்டவர்களை முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிப்பதை அரசு தடைசெய்துள்ளது.60 வயதுக்கு மேற்பட்டோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.

பன்றிக்காய்ச்சல்; 76 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

who_logo.jpgஉலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் நோய் 76 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.  மேலும் இந்த நோயால் 35, 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் 163 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கிலாந்தில் 1,226 பேரும், அவுஸ்திரேலியாவில் 1,823 பேரும் சீனாவில் 318 பேரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோய் தற்போது மொராக்கோ, மேற்கு கரை மற்றும் காசா கரையோரப்  பகுதிகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
 

வடக்கே கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளில் 2006/2008 கல்வி ஆண்டுகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளவர்களை மாகாண அரச சேவைத் திட்டத்தின் கீழ் ஆசிரியராக வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகஷ்ட மற்றும் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஜூன் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணியிலிருந்து வவுனியா மேலதிக மாகாணக் கல்விப் பணிமனையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் புகைப்படப் பிரதிகளுடன் தெரிபட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய ஆவணம், பிறப்புச் சான்றிதழ், க.பொ.த.சா/த., க.பொ.த.உ/த சான்றிதழ்கள், இறுதியாகக் கற்ற பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் மற்றும் ஒருவரின் சான்றிதழ்கள், பிரதேச செயலாளர், கிராம சேவையாளரின் குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் விசேட தகைமைகள் இருப்பின் அவற்றை நிரூபிக்கும் சான்றிதழ் ஆகியவற்றை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் தேசியக் கல்வியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாவட்ட ரீதியாக வருமாறு:

வவுனியா மாவட்டம் ஆங்கில மொழி மூலம்

1.ஜானகி அருணாசலம், 2.ஷோபா தெய்வேந்திரராசா,3.மேரி ஜெனிஸ்ரா ஆரோக்கியநாதன், 4.நிருபா தியாகராஜா.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.சிவசிதம்பரம் மாதீசன், 2.சந்திரகலா ஞான சுந்தரலிங்கம், 3.சிவகௌரி சிவசுப்பிரமணியம், 4.ராஜயந்தினி தர்மலிங்கம், 5.சுகன்யா மகேந்திரன், 6.ராதிகா சிவசுப்பிரமணியம், 7.சலமன் நியூட்டன்.

மன்னார் மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.பிரான்ஸிஸ் அருள்ஜெயந்தன், 2.செல்வி புரூனே ஜீவன்தாஸ் பெர்னாண்டோ, 3.சூசைப்பிள்ளை சுதாகரன், 4.குமுதினி வேலாயுதம்

5.செல்வநாயகி முத்துசாமி, 6.தோமஸ் செரின் இவோன்ஸியா, 7.வினோதினி ஆதிரையம்பிள்ளை, 8.கனகரட்னம் குமரன்

9.செல்வி ஆகஸ்டின் அருள்ரூபன், 10.டனிஸ் வசந்தகுமார் பிரான்ஸிஸ், 11.அந்தோனி சந்தியோகு மேரி டயனா குரூஸ்.

கிளிநொச்சி மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1.பொன்னுத்துரை பிரகலாதன், 2.விஜயலட்சுமி விநாயகமூர்த்தி, 3.சந்திராதேவி ஸ்ரீலட்சுமிரஞ்சன், 4.குமணரஞ்சனி வல்லிபுரம், 5.சுஜந்தினி சுகுமாரன், 6.வீரசிங்கம் மயூரதன்.

வவுனியா மாவட்டம் தமிழ்மொழி மூலம்

1. பாலதர்சினி பாலசுந்தரம், 2.தர்ஷிகா பரமேஸ்வரன், 3.இளையதம்பி சுமித்ரா, 4.இராஜேந்திரன் இளங்கீரன், 5.சண்முகநாதன் செந்தூர்செல்வன், 6.பாத்திமா சித்தாரா, 7.இளையதம்பி ரவிச்செல்வன், 8.ஜசிந்தா குமாரகுலசிங்கம், 9.மீரா கந்தையா, 10.சுபனிக்கா சந்திரசேகரம், 11.பரராசசிங்கம் சுதர்சன்

12.தவயோகினி தவராசன், 13.யசிந்தா வேலுப்பிள்ளை, 14.ராமஞ்ஞனா ராமலிங்கம்

15.இராஜரட்ணம் காண்டீபன், 16.யாழினி குணபாலசிங்கம், 17.தட்சாயினி சுப்பிரமணியம், 18.செல்வரட்ணம் ஸ்ரீதேவகரன், 19.திலகராஜன் சுசந்தன், 20.மார்க்கண்டு கேசவன், 21.மரியராமசூரியர் திசரூபன், 22.செல்வி இடா வில்ஸன், 23.ஸ்ரீதரன் கீர்த்தனா, 24.ஆர் ரேனிதா, 25.விமலராணி இமானுவேல், 26.ரெஜீபா

27.சியாமளா டேவிட், 28.மேரி ஜெனிற்றா விசுவாசம்.

இடம்பெயர்ந்தோருக்கு புளத்சிங்கள மக்கள் ரூ.15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

rizad_baduradeen1.jpgவடக்கி லிருந்து இடம்பெயர்ந்த தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக புளத்சிங்கள பிரதேச சபைப் பிரிவு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டன.

இந்த உணவுப் பொருட்களை புளத்சிங்கள பிரதேச சபைத் தலைவர் தேசபந்து துசித்த குலரத்ன தலைமையிலான குழுவினர் அண்மையில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் வைத்து அமைச்சர் றிஷாத்திடம் கையளித்தனர்.

இப்பொருட்களில் அரிசி, தேங்காய், பால்மா, சவர்க்காரம், புதிய உடைகள், குடிநீர், மருந்துப் பொருட்கள் உட்பட பல அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருந்ததாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு முதல்வரின் செயலாளர் சு.க.வில் இணைவு

கிழக்கு மாகாண முதல மைச்சரின் செயலாளர் எஸ். மாமாங்கராஜா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண ஸ்ரீல.சு.க. அமைப்பாளருமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்தித்து உத்தியோகபூர்வமாக ஸ்ரீல.சு.க. அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வார் என கருணா அம்மானின் ஊடக பேச்சாளர் ஜூலியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு நீண்டகாலம் தொடர்ந்து சமுகமளிக்காத தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுப்புரிமையை இழக்கும் நிலை

parliament-of-sri-lanka.jpgஇலங் கைக்கு திரும்ப முடியாத நிலையிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை எதிர் வரும் நாட்களில் பறிபோகலாமென தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, சம்பிரதாய பூர்வமாக இதுவரை இல்லாத வகையில் தற்போது, விடுமுறைக்கான காரணம் கோரும் நிலை உருவாகியிருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சக உறுப்பினர்களுக்காக விடுமுறை பிரேரணைகளை சமர்ப்பிக்கும் உறுப்பினர்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்படும் நிலைமை உருவாகியிருப்பதாக கட்சிக்குள்ளேயே அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஏனெனில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்பாக விடுமுறைப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களில், அதற்கான காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த அரச தரப்பு, இறுதியாக கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விடுமுறைப் பிரேரணைகளுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

சபையில் பிரேரணைகள் மூலம் விடுமுறைகளை பெற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இராஜதந்திர சிறப்புரிமையுடன் கூடிய கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நாட்டுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக பேசி வருகின்றனர் என்பதே ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாக இருந்தது. இதன் பின்னர் அந்த உறுப்பினர்கள் சார்பாக வைத்திய சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே விடுமுறைகள் அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யான சிவாஜிலிங்கத்திற்கு விடுமுறை கோரி பிரேரணை சமர்ப்பிக்க வேண்டி நேரிடலாமெனவும் அத்தகைய தொரு நிலைமையில் விடுமுறைக்கான சான்றுகளை சமர்ப்பிப்பது என்பது சிரமமாக இருக்குமென கட்சிக்குள் அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அத்துடன், வெளிநாடுகளிலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் நாடு திரும்புமாறு, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 15 வரை சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நட வடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15, ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரினால் விசேட சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் அறிவுறுத்தப்படவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த 8 ஆம் திகதி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து பரீட்சார்த்திகளும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கூறினார்.

இதேநேரம், இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய அடையாள அட்டை பெற முடியாத 16 வயதிற்கும் குறைவான பரீட்சார்த்திகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட சுற்றுநிருபமொன்றை பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கவிருப்பதாகவும் அநுர எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.