இலங் கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெதிக்ளுக்மன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையிலான இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இடம் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருதை தந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் பிரதி பிரதம அதிகாரி ரியட் அட்மிரல் டேவிட் தோமஸ், வடக்கு மற்றும் தெற்காசியாவுக்கான சர்வதேச திட்டப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் கார்பிஸ் எவகியன் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு அதிகாரி கெப்டன் ஜொனதன் மீட் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அவுஸ்திரேலிய கடற்படையின் உயர் அதிகாரிகள் குழு பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவை கொழும்பிலுள்ள கூட்டு நடவடிக்கைத் தலைமையத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.