செய்திகள்
செய்திகள்
செய்திகள்
பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கான தேசியத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தின் போது பேச்சு மற்றும் தொடர்பாடலுக்கான ஆங்கில மொழிப் போதனைகளை விரிவுபடுத்துவதிலுள்ள பிரச்சினைகளுக்கும், தடைகளுக்கும் தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இத்தேசியத் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அரசியல் யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேகர, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பெர்னாண்டோ, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க ஆகியோர் பங்குபற்றிய கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர்பாடல் திறன்களை பாடசாலைகள் மட்டத்தில் மேம்படுத்துவதிலுள்ள தடைகளையும், குறைபாடுகளையும் மாகாண கல்வித் திணைக்கள மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளும், பாடசாலைகளின் அதிபர்களும் முன்வைத்தனர்.
இவற்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களும் மாகாண முதலமைச்சர்களும் உடனுக்குடன் தீர்வுகளை வழங்கினர்.
ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஹைதரா பாத்திலுள்ள ஆங்கில மற்றும் பிறநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் நாற் பது ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இப் பயிற்சியைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் தயாரித்து ள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிகாட்டி நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஆங்கில மொழி பேச்சு மற்றும் தொடர் பாடல் திறன்களை மேம்படுத்தும் திட்டத் தின் கீழ் ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவென மைக்ரோ சொப்ட், இன்டெல் மற்றும் மெற்றோ பொலிட்டன் ஆகிய தனியார் நிறுவனங்கள் மடிக் கணனிகளை ஜனாதிபதியிடம் வைபவரீதியாகக் கையளித்தன.
இவ்வைபவத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார். அவ்வாக்குறுதிக்கு ஏற்ப பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டி நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளார்.
அடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரிவான அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தடிப்படையிலேயே ‘வாழ்க்கைத் திறன் ஒன்றாக ஆங்கில மொழி’ என்ற தொனிப் பொருளில் ஆங்கில மொழிப் பேச்சு மற்றும் தொடர்பாடல் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட விருக்கின்றது.
நவீன உலகிற்கு ஆங்கில மொழியின் பேச்சு மற்றும் தொடர்பாடல் அறிவும் தகவல் தொழில் நுட்ப அறிவும் மிகவும் அவசியமானது. இவற்றைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதி தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அடுத்து வரும் பத்து வருடங்களில் நாட்டில் வாழும் சகல ஏழை எளிய மக்களும் ஆங்கில மொழியறிவைப் பெற்றுக் கொள்ள இத்திட்டம் பெரிதும் உதவும் என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 554 கி.மீ.வீதி அபிவிருத்தி- ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் துரித நடவடிக்கை
முல் லைத்தீவு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் பராமரிக்கப்படும் வீதிகள் அனைத்தும் 16866 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் 180 நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 156 மில்லியன் ரூபாவும், மூன்று வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 16710 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன. மொத்தம் 554 கிலோ மீட்டர் வீதி இரண்டு கட்டங்களிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
வடக்கின் வசந்தம் செயற் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய பிரதான தீர்மானங்களாவன 2006ம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளில் ஒரு வீதத்திற்கு மாத்திரம் மின்சார வசதி இருந்தது.
180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இதை 15 வீதமாக அதிகரிப்பதற்கும், மூன்று வருட வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 2200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நீர் விநியோகம், தென்னை மற்றும் பனை வளர்ச்சி, இயற்கைப் பசளைப் பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளித்தல், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தல் தொடர்பான தீர்மானங்களும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், மாவட்டச் செயலாளர் இமெல்டா சுகுமார், வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரி. ஏ. சந்திரசிறி ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய நடுவணரசு, இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்திருக்கிறது.
இந்தத் தடையின் விளைவாக, மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை, அவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் கூட அவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் இரண்டு நாள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து, இந்த மாநிலங்களில் அதிகபட்ச உஷார்நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 2 ஆயிரத்து 920 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நேற்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஆசிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் இடமாற்றங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுமென்று இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
நாட்டிலிருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதனால் நாட்டின் எந்தப் பாகத்திலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற மாட்டாது. எனவே, ஆசிரியர்கள் எந்தப் பாகத்திலும் கடமையாற்ற முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டின் படை வீரர்கள் போன்று தமது கடமைகளை முனனெடுக்க வேண்டும். முப்படையினரும் பொலிஸாரும் இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினர். அதே போன்று அரச ஊழியர்களும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.
ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் இன்று சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் சகல வசதிகளையும் கொண்ட தபால் நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸநாயக்க தெரிவித்தார். இவ்வாறு எட்டுத் தபாலகங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றை அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் பூர்த்தியடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான தபால் விநியோக நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தபால்களை விநியோகிப்பதற்கு விஷேட திட்டமொன்றைத் தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும் அந்தப் பகுதிகளுக்கான தபால் விநியோக வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசனையின் பிரகாரம் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை நேற்று முதல் (21) அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்படை இறங்குதுறையில் வைத்து மன்னார் மீனவர்களை நேற்று முன்தினம் (20) சந்தித்த பெசில் ராஜபக்ஷ எம். பி. இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதன்படி கிழக்கு மற்றும் யாழ். குடா மீனவர்களுக்கு 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 14 ஆம் திகதி நீக்கப்பட்டதோடு, யாழ். குடா மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 19 ஆம் திகதி நீக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் 60 வீதமானவர்கள் மீன்பிடித் தொழிலை தமது பிரதான ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். 63 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இவ்வாறு மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மீன் பிடித்துறை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 19040 மெற்றிக் தொன் மீன் பிடிபட்டது. இந்தத் தொகை 2007 ஆம் ஆண்டாகும் போது 9170 மெற்றிக் தொன்னாகக் குறைந்தது. மன்னார் மாவட்ட மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பெசில் ராஜபக்ஷ எம்.பி. யின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், அவற்றுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.
இது கால வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மீனவர்களின் கோரிக்கைப்படி தற்போது 7 தினங்களும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடிப் படகு இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டது. இதன்படி 15 குதிரை வலு கொண்ட படகு இயந்திரங்களை பாவிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது.
இது தவிர மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்காக 275 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்தோடு ஓய்வு அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 180 நாள் திட்டத்தினூடாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
குளிரூட்டிகள், ஐஸ் உற்பத்தி நிலையங்கள் என்பன அமைக்க கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற் பரப்பிற்கு வந்து மீன்பிடிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையில் கடற்படையினருக்கு நேரடியாகத் தலையிட முடியாது எனவும், மன்னார் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை ஆரம்பிப்பதோடு இந்திய மீனவர்களின் வருகை குறையும் எனவும் பெசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
“தேசிய உணவு வாரம்” இன்று (22 ஆம் திகதி) தொடக்கம் இம் மாதம் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உள்நாட்டு உணவு உற்பத்தியையும், நுகர்வினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் உணவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
“நாம் பயிரிடுவோம் – நாட்டை முன்னேற்றுவோம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்நாட்டு உணவு உற்பத்தி தொடர்பாக தேசிய மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான சட்டமூலத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தண்டனைகள், அபராதங்கள் போன்றவற்றை மேலும் கடுமையானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புதிய திருத்த சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச போதை தடுப்பு தினமான இம்மாதம் 26ம் திகதி அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் ஜனாதிபதியின் மூலமாக அதற்குப் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப்படு மென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித் தார்.
அத்துடன் சட்டம், ஒழுங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமை ச்சின் கீழுள்ள ஐந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய வேலைத் திட்டமொன்றை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்வரும் 26ம் திகதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி ஊடகங்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடு பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி (மத்தடதித்த) திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுகக் முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதெனவும் தெரிவித்தார்.
போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையின் தலைவர் மென்டிஸ் இதுபற்றி விளக்குகையில் :- இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரைக்கும் முன்னர் புலிகள் போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளனர்.
இப்போது இது நிறுத்தப்பட்டுள்ள போதும் மீன் பிடிப் படகுகளின் மூலம் இப்போதும் இக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 1,202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.