ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 2 ஆயிரத்து 920 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நேற்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஆசிரியருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் இடமாற்றங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுமென்று இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
நாட்டிலிருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதனால் நாட்டின் எந்தப் பாகத்திலும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற மாட்டாது. எனவே, ஆசிரியர்கள் எந்தப் பாகத்திலும் கடமையாற்ற முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டின் படை வீரர்கள் போன்று தமது கடமைகளை முனனெடுக்க வேண்டும். முப்படையினரும் பொலிஸாரும் இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினர். அதே போன்று அரச ஊழியர்களும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.