செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இரு மாகாண சபைகள் இவ் வாரம் கலைக்கப்படும்?

lanka-map-02.jpgஇந்த வாரத்தினுள் மேலும் இரு மாகாண சபைகள் கலைக்கப்படலாமென அரசுதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ் வாரத்தின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தென்மாகாண சபையை சிறிது காலம் தாமதித்து கலைப்பதற்கும் அரசு உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்

vote.jpgமத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக மத்திய மாகாணசபை கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். கண்டி மஹிய்யாலையில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்றது. இதனை நிரப்ப கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இவ்வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பது எனது நோக்கமாகும். மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் அரசு பெற்ற வெற்றி இம்மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான அறிகுறியாவவே உள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனவே நாட்டில் சகல இனமக்களும் சமாதானமாக வாழும் காலம் உருவாகும் என்றார்.

பிரபாகரனை தேடிக்கண்டுபிடிக்க இலங்கைக்கு உதவியளிக்கும் இந்தியா

army-1401.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடிக்கண்டு பிடிப்பதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்து வருவதாக “ஏசியன்ஏஜ்’ பத்திரிகை நேற்று முன்தினம் திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி, விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் இறுதித்தளமாக இருந்த முல்லைத்தீவின் நகர் பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத் தகவலை தெரிவித்துள்ளன. “இந்திய கடற்படை எமக்கு சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. அத்துடன், இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப்படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன’ என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிவழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் முல்லைத்தீவு காடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. (கருணா) தெரிவித்துள்ளார். ஆனால்,கடல்வழியால் பிரபாகரன் சென்றிருக்கும் சாத்தியத்தை இங்கே பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை. பிரபாகரன் செக் தயாரிப்பான சிலின் 143 ரக விமானத்தில் சென்றிருக்கலாமெனவும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால், புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் பிரவேசித்திருப்பது அமைதியைகொண்டு வருமா என்பது தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இராணுவ வெற்றியை தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மட்டக்களப்பு நகரைச்சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் நிருபருக்கு கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கறியுள்ளார்.

“இராணுவ நடவடிக்கை முடிவுறும் நிலை ஆனாலும் மோதல் தொடரும்’

truck.jpgமரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார்.  அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

risard.jpgமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் டிக்ஸன்தால ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது :- முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் வசிக்கும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கம், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான சம்பவங்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்வரை தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். கண்ணி வெடிகள் அகற்றும் பணியினை பாதுகாப்புத் தரப்பு மேற்கொள்ளும்வரை இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைவுமின்றி பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி எம்மைப் பணித்துள்ளார். மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பாடசாலை வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இன்னும் சில தினங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரலாமென்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய கவனம் செலுத்த முடிந்ததாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

விடுதலைப்புலிகள் மீது கருணை கிடையாது – பிரணாப்

pranaf.jpgவிடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம்.  இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன்.

mahinda20-01.jpg
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன். அதை ஏற்றுத்தான் அவர் கொழும்பு வருகிறார் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்

அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்துவதற்காக தான் செல்லவில்லை என்றும், புலிகள் மீது இந்திய அரசுக்கு ஒருபோதும் இரக்கம் பிறக்காது என்று அறிவித்துவிட்டே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் பிரணாப்.

இந்நிலையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இறுதித் தீர்மானத்தை மதித்துதான் பிரணாப் இலங்கை வருகிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன. மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் கருணாநிதியிடமும் இதே தகவலைத்தான் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதையே முதல்வரிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கூறியுள்ளார். இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

stop-violance.jpg
ஊடகவியலாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலையும் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான அமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடக அமைப்புகள், இலங்கை ஆசிரியர் சங்கம், இடதுசாரி முன்னணி, புதிய சமசமாஜக் கட்சி, சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மக்கள் அமைப்பு மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன பங்கு பற்றின.

இதன் போது, தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இது அரசின் பொறுப்பு, ஊடக அடக்கு முறையை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை வைத்திருந்ததுடன் அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

கருணாநிதியுடன் போனில் பிரணாப் ஆலோசனை

pranab.jpgமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்தத் தகவலை இன்று காலை சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை பிரச்சனை குறித்து கருணாநிதி, பிரணாப் முகர்ஜியிடம் பேசியதாகவும், அதற்கு பிரணாப் முகர்ஜி, இன்று மாலை தான் இலங்கைக்குச் செல்வதாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை பயணம் குறித்த அறிவிப்பையும் சட்டசபையில் அன்பழகன் வெளியிட்டார்.

புலிகளின் குரல் வானொலிக்கான அனுமதிப் பத்திரத்தை ரத்தாக்க நடவடிக்கை

puli-kural.jpgபுலிகளின் குரல் வானொலிக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.  புலிகளின் குரல் வானொலிக்கு அனுமதிப் பத்திரம் வழங்கியமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுமதி தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு முன்னைய அரசு வானொலி அனுமதிப்பத்திரம் வழங்கியமை சட்ட விரோதமாதெனக் கூறி கலாநிதி பியசேன திஸாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன், 2009 ஜனவரி 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலின் கீழ் இந்த அனுமதியை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இந்நிலையில், இது சம்பந்தமான மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்