செய்திகள்

செய்திகள்

செய்திகள்

1069 பேர் படையினரிடம் நேற்று தஞ்சம்

displace.jpg
முல்லைத்தீவிலுள்ள புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 1069 சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தரும் சிவிலியன்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக பெருமளவில் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை நோக்கியே 1069 சிவிலியன்களும் வருகை தந்துள்ளனர். இவர்களில் 260 சிறுவர்கள், 204 சிறுமிகள், 354 ஆண்கள் மற்றும் 291 பெண்கள் அடங்குவர். யாழ். கொக்கிளாய் பிரதேசத்தை நோக்கி 234 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 80 சிறுவர்கள், 44 சிறுமிகள், 80 பெண்கள் மற்றும் 70 ஆண்கள் அடங்குவர்.

படையினர் அண்மையில் விடுவித்த கெவில் பிரதேசத்தை நோக்கி 190 சிவிலியன்கள் காலை 8.30 மணியளவில் வருகை தந்துள்ளனர். இவர்களில் 53 சிறுவர்கள், 39 சிறுமிகள், 51 பெண்கள் மற்றும் 47 ஆண்கள் அடங்குவர். வவுனியாவின் ஓமந்தைச் சோதனைச் சாவடியை நோக்கி மாலை 3.30 மணியளவில் 483 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 92 சிறுமிகள், 89 சிறுவர்கள், 178 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.

கிளிநொச்சியின் புலியன் பொக்கரை பிரதேசத்தை நோக்கி 26 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களில் 18 ஆண்கள், 04 பெண்கள், 03 சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவரும் அடங்குவர். இராமநாதபுரத்தை நோக்கி மேலும் 46 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். 15 சிறுவர்கள், 13 சிறுமிகள், 11 ஆண்கள் மற்றும் 10 சிறுமிகள் இவர்களில் அடங்குவர். புலியன்பொக்கரை பிரதேசத்தை நோக்கி மேலும் 87 சிவிலியன்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். 20 சிறுவர்கள், 15 சிறுமிகள், 24 ஆண்கள் மற்றும் 19 பெண்களும் இவர்களில் அடங்குவர்.

புலிகளால் தமக்கு நாளுக்கு நாள் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகவும் இதனை அடுத்தே தாங்கள் வரத் தொடங்கியதாகவும் இந்த மக்கள் தெரிவித்ததாக குறிப்பிட்ட பிரிகேடியர், எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான சிவிலியன்கள் வருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரணைமடு குளமும் அண்மித்த பகுதியும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்- 6 வது விமான ஓடுபாதையும் நேற்று கண்டுபிடிப்பு:

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை ந‌ம்பலா‌ம் : கருணாநிதி

karunanithi.jpgஇல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நலமான முடிவுக்கு ம‌த்‌திய அரசை நாம் நம்பியிருக்கலாம் என்று முத‌ல்வர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைப் பிரச்சனையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டு விடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் – நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.  

மேனன் – போகொல்லாகம நேற்று சந்தித்துப் பேச்சு. இன்று ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

sivashankar.jpg
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசியது.

இச்சந்திப்பு நேற்று முற்பகல் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றதுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் உள்ளிட்ட இந்திய உயர்மட்டக் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த சார்க் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இவ்விரு தரப்பு பேச்சுவார்த்தை இலங்கை- இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பொலிஸ் சார்ஜன்ட் கைது

handcuff.jpg10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பொலிஸ் நிலையத்தின் திடீர் சோதனைப் பிரிவில் பணியாற்றும் இவர் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவரைப் பிடித்ததாகவும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்காதிருக்க 10 ஆயிரம் ரூபாவை தனக்கு இலஞ்சமாகத் தருமாறும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நபர் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி அவர் தெல்கந்த நகரில் வைத்து குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்டிடம் 10 ஆயிரம் ரூபாவை செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளார். அதன்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்  புதன்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார

மதுபான ஒழுங்கு விதிகளை மீறியோரிடமிருந்து கடந்த வருடத்தில் ரூபா 186 மில். அபராதமாக வசூல்

mathupanam.jpgஒழுங்கு விதிகளை மீறிய மதுபான விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளரிடமிருந்து கடந்த வருடத்தில் அபராதமாக 186 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக மேற்கொண்ட 56,510 சுற்றிவளைப்புக்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபானங்களை அருந்திய குற்றத்திற்காக 2962 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 23,977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் சுப்ரிண்டன்ட் உப்புல் செனிவிரட்ன தெரிவித்தார்.

கள் விற்பனையில் ஈடுபட்ட 9280 பேர் கடந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரச அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை அனுமதியின்றி விற்பனை செய்த குற்றத்திற்காக 12,016 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செனிவிரட்ண தெரிவித்தார்.

அத்துடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3358 பேரும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 1512 பேரும் கைதுசெய்யப்பட்டதுடன், கஞ்சாவை பயிரிட்ட குற்றச்சாட்டின் பேரில், 343 பேர் கைதானதாகவும், அத்துடன் சட்டவிரோத, வரி செலுத்தப்படாத, சிகரெட்டுகளை விற்பனை செய்த 2642 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுபான அனுமதிப் பத்திரத்தை கொண்டிருப்பதற்கான சட்டவிதிகளை மீறிய 5198 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 67 மில்லியன் ரூபா அபராதமாகப் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கலால் திணைக்கள ஆணையாளர், வசந்த ஹப்பு ஆராச்சியின் உத்தரவின் பேரில் இச் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளிவிடாது முஸ்லிம் இளைஞர்களை பாதுகாத்தது மு.கா.தான்- ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgவடக்கில் புலிகளின் பயங்கரவாதத்திற்கும், தெற்கில் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்திற்கும் மத்தியில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போரட்டத்திற்குள் தள்ளாது ஜனநாயக ரீதியான போரட்டத்திற்குள் உள்வாங்கியது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி ரெஹான்ஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஒருவித பீதி மனப்பான்மை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இச்சமூகத்தை வெளிக்கொணர வேண்டும். இந்த அரசு மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால், சகல இன மக்களையும் இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது கட்சியின் எதிர்காலப் போராட்டத்திற்கும் பேரம் பேசலுக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். 1988 மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 12 பிரதிநிதிகளை வட கிழக்குக்கு வெளியில் வென்றெடுத்தது. அதன் பிறகு 2004 மாகாணசபைத்  தேர்தலில் நாம் இந்த 12 ஆசனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அமைச்சரவையில் 27 சதவீதமானோர் முஸ்லிம்கள் . ஆனால் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்தான் என்ன? இவர்களின் கையாலாகாத நிலை அவர்களுக்கே தெரியும். இதுபோன்று இக்கட்சியின் தலைமைத்துவமும் இருக்க விரும்பவில்லை. எனவேதான், வெளியே வந்தோம். முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடத்தக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது எதிர்கால தேர்தல்களில் நிரூபிக்கப்படும் என்றார்.

ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு திருமணம் ஜே.வி.பி., விக்கிரமபாகு கள்ளத் தொடர்பு – விமல் வீரவன்ச கிண்டல்

vimalveera.jpgஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஐ.தே.க.வுடன் ஜே.வி.பி.யும் விக்கிரமபாகு கருணாரட்ணவும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“எமது இராணுவத்தினர் மிக விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முற்றாகத் தோற்கடித்துவிடுவர். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கோருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஜே.வி.பி. மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளனர். புலிகளை தோற்கடித்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யிடம் கோருகின்றோம்’.

பறவை மோதி ஆற்றில் விழுந்த விமானம்

air.jpgஅமெ ரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்திகள் உள்பட 155 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது.

இதையடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து மன்ஹாட்டன் அருகே ஹட்சன் ஆற்றில் விழுந்தது.
.
ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். அப் பகுதியில் மைனஸ் 6-டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பலரும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணியாளர்களும், கப்பலும் சென்றதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இலங்கையில் போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர்

cordan-bran.jpgஇலங் கையில் யுத்தநிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இந்த விடயம் தொடர்பாக பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி, ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்சல் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டு வீச்சால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் முற்றுகைக்குள்ளாக்கப் பட்டிருப்பதாகவும் முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்த கிழக்கு லெய்செஸ்ரர் எம்.பி. கீத் வாஸ், ஒரு தலைப்பட்சமாகவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தினூடாகவோ மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையை நிறுத்துவதற்காக யுத்தநிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்க பிரதமர் தனது நல்லெண்ணத்தை பயன்படுத்துவாரா? என்றும் இதன் மூலம் அழகிய தீவில் சமாதானத்தை திரும்ப ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கையில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் குறித்து தான் அறிந்துள்ளதாகவும் கௌரவ உறுப்பினரின் (கீத்வாஸ்) உரிமையை தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் அதேசமயம், இலங்கையில் அவசரமாக யுத்தநிறுத்தம் தேவையென்ற கோரிக்கையையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தனது மனதிலுள்ள விடயங்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுண், அடுத்த ஓரிரு தினங்களில் பிரெஞ்சு ஜனாதிபதியும் ஜேர்மன் அதிபரும் விஜயம் செய்யும் போது இந்த விடயத்தை அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வாரெனவும் தெரிவித்துள்ளார். சமாதானத்திற்காகவும் தீர்வுக்காகவும் தன்னால் உதவியளிக்க முடியுமென பல சந்தர்ப்பங்களில் கிழக்கு லெய் செஸ்ரர் எம்.பி. கீத்வாஸ் கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதன் மூலமே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் கூறியிருந்ததுடன், தனது நிலைப்பாட்டை பல தடவைகள் கூறியிருந்தார்.