இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசியது.
இச்சந்திப்பு நேற்று முற்பகல் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றதுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்ன இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் உள்ளிட்ட இந்திய உயர்மட்டக் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த சார்க் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இவ்விரு தரப்பு பேச்சுவார்த்தை இலங்கை- இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.