ஒழுங்கு விதிகளை மீறிய மதுபான விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளரிடமிருந்து கடந்த வருடத்தில் அபராதமாக 186 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக மேற்கொண்ட 56,510 சுற்றிவளைப்புக்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபானங்களை அருந்திய குற்றத்திற்காக 2962 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 23,977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் சுப்ரிண்டன்ட் உப்புல் செனிவிரட்ன தெரிவித்தார்.
கள் விற்பனையில் ஈடுபட்ட 9280 பேர் கடந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரச அங்கீகாரம் பெற்ற மதுபானங்களை அனுமதியின்றி விற்பனை செய்த குற்றத்திற்காக 12,016 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செனிவிரட்ண தெரிவித்தார்.
அத்துடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3358 பேரும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 1512 பேரும் கைதுசெய்யப்பட்டதுடன், கஞ்சாவை பயிரிட்ட குற்றச்சாட்டின் பேரில், 343 பேர் கைதானதாகவும், அத்துடன் சட்டவிரோத, வரி செலுத்தப்படாத, சிகரெட்டுகளை விற்பனை செய்த 2642 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுபான அனுமதிப் பத்திரத்தை கொண்டிருப்பதற்கான சட்டவிதிகளை மீறிய 5198 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 67 மில்லியன் ரூபா அபராதமாகப் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கலால் திணைக்கள ஆணையாளர், வசந்த ஹப்பு ஆராச்சியின் உத்தரவின் பேரில் இச் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.