புலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.