எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மடகஸ்கார் நீதிமன்றம் ரஜோலினாவின் ஜனாதிபதி நியமனத்துக்கு அங்கீகாரம்

madak.jpgமடகஸ் கார் உச்ச நீதிமன்றமானது அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் அன்றி ராஜோலினாவிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி மார்க் ரவலோமனானா பதவியை விட்டு விலகிய பின், அந்நாட்டு இராணுவம் 34 வயது அன்ட்றி ரஜோலினாவிடம் அதிகாரத்தை கையளித்திருந்தது. மடகஸ்கார் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் ஆகக் குறைந்தது 40 வயதை அடைந்திருப்பது கட்டாயமாகும்.

இந்த வயது நிபந்தனையின் பிரகாரம் 6 வயது இளமையான அன்றி ரஜோலினா ஜனாதிபதியாக பதவியேற்பது சட்ட சிக்கல் மிக்க ஒரு விடயமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரது ஜனாதிபதி நியமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து ஆபிரிக்க நாடான சாம்பியாவானது, உடனடியாக மடகஸ்காரை ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்தும் தென் ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்திலிருந்தும் நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மடகஸ்காரில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைக்கப்படும் அரசாங்கத்தை சாம்பியா நிராகரிக்கிறது” என சாம்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் கபிங்கா பண்டே தெரிவித்தார்.

மடகஸ்காரில் புதிய தேர்தலை 24 மாதங்களில் நடத்துவதாக அன்றி ரஜோலினா வாக்களித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அது மிக நீண்டகாலமாகும்” என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது.

மடகஸ்கார் உலகின் நான்காவது பெரிய தீவாகும். அந்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனாகும். நாட்டு மக்களின் 70 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திலான் சமரவீர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

samaraweera.jpgஇலங்கை அணி வீரர்களில் திலான் சமரவீர நவலோக்க தனியார் மருத்துவ மனையிலிருந்து சிகிச்சைப்பெற்று வெளியேறி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அணியின் பயுற்றுவிப்பாளர் உட்பட 6 வீரர்கள் காயமடைந்தனர்.

திலான் சமரவீர தொடர்ந்தும் நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது காலில் காணப்பட்ட துப்பாக்கி ரவை சிறிய சத்திர சிகைச்சை மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள திலான் சமரவீர ஏப்ரல் மாதமளவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார் என அவரது முகாமையாளர் ஒஸெஇன் சாளி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 

எண்ணெய் இறக்குமதி உரிமை நிதியமைச்சு வசமே இருக்கின்றது – அமைச்சர் பௌஸி

parliament.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் இறக்குமதி உரிமையானது இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது என்று பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.

அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கையில், ஜே.வி.யின் பின்வரிசை எம்.பி.யான ரணவீரபத்திரன பௌசி பாவம் என்றார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

எரிபொருள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ரத்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில் பெற்றோல் விலைகுறைப்பு தொடர்பான உத்தரவு மட்டும் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. எனினும் ஏனைய உத்தரவுகளின் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

எனினும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகள் பின்னர் அந்த நீதிமன்றத்தாலேயே ரத்து செய்யப்பட்டன. இதன் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் நடைபெற்று விட்டதா என அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பௌசி, இல்லை இல்லை அது (எண்ணெய் இறக்குமதி உரிமை) இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது. நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது என்றார்.

ஆனால், ஆயுதங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொள்வனவை விட பாரிய வியாபாரமான எண்ணெய் இறக்குமதியை நிதி அமைச்சு உங்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதன்போது பௌசி பாவம் என்று ரணவீர பத்திரன தெரிவித்தார்.

கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை என்கிறார் கரு ஜெயசூரிய

unp-members.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மேலதிகமாக சிரேஸ்ட தலைமைப் பதவியொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் அதேவேளை, கட்சியின் சிரேஸ்ட தலைவராக பிறிதொருவர் நியமிக்கப்படவுள்ளார்.  குறித்த இரண்டு பதவிகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து கட்சியின் எட்டு சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளனர்.

சிரேஸ்ட உறுப்பினர்களின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சியின் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் கட்சிப் பதவிகளுக்காக போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல கட்சிகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளதாகவும், பதவி மோகம் எதுவும் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் காணப்படும் முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி சோளத்துக்கு 35 வீதம் செஸ் வரி

இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் சோளத்திற்கும் 35 சதவீதப்படி செஸ்வரி விதிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.உள்ளூர் சோளச் செய்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த இந்த செஸ் வரி யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த செஸ் வரி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நெல்லுக்கு அடுத்த படியான உணவுத் தானியமாக சோளம் அரசாங்கத்தினால் கடந்த வருடம் விரிவான அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டது. இதன் பயனாக 2008 ஆம் ஆண்டில் 52 ஆயிரத்து 353 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டது. இவற்றின் மூலம் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 243 மெற்றிக் தொன் சோளம் அறுவடை செய்யப்பட்டது.

கடந்த வருடம் சோளச் செய்கை அதிகரித்ததுடன் அறுவடையும் அதிகரித்தது. இதனால் சோள இறக்குமதி பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. 2005 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 846 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட சோளம் 2008 ஆம் ஆண்டில் 82 ஆயிரத்து 490 மெற்றிக் தொன்னாக வீழ்ச்சி அடைந்தது. இதன் பலனாக அந்நிய செலாவணியும் மீதமாகியுள்ளது.

2008/2009 பெரும் போகத்தில் 65 ஆயிரத்து 850 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் இப்போதைக்கு 60 ஆயிரத்து 582 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து இருநூறு மெற்றிக் தொன் சோளம் அறுவடையாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் உலக சந்தையில் சோளத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சோள இறக்குமதிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகி ன்றன. இதனால் உள்ளூர் சோளச் செய்கையா ளர்கள் பாதிக்கப்பட இடமளிக்கக் கூடாது என் பதற்காகவே இந்த செஸ் வரி அறிமுகப்படுத் தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வர தீர் மானிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும்:- கயந்த கருணாதிலக்க

gayantha.jpgமேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

Exodus_1947Exodus 1947 :

1947 யூலை 11 அன்று ஒரு கப்பல் பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் பயணித்தவர்கள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பிய யூத மக்கள். வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4515 பேர் தங்களுக்கான தாயகத்தை உருவாக்கப் போகிறோம் என்ற கனவுடன் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

1928ல் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல் “President Warfield” மக்கள் போக்குவரத்திலும் படையெடுப்பிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக மாகா யுத்தத்தின் பின் இக்கப்பல் Potomac Shipwrecking Co என்ற நிறுவனத்திற்கு பழைய இருப்புக்கு பேரிச்சம் பழம் என்பது போல் விற்கப்பட்டது. ஆனால் இந்தக் கப்பலை வாங்கிய Potomac Shipwrecking Co இடம்இருந்து அதனுடன் தொடர்புடைய Hagana என்ற யூத அரசியல் அமைப்பினூடாக இறுதியில் பலஸ்தீனத்தில் தலைமறைவாக செயற்படும் இரகசிய இயக்கமான Hamossad Le’aliyah Bet இன் கைகளில் சென்றடைந்தது.

Hagana அமைப்பு இந்தக் கப்பலை தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தியது. அன்று பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கு என்று ஒரு தாயகத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்க இக்கப்பல் தயாரானது. பைபில் காலத்தில் குறிப்பிடப்படும் எகிப்தில் இருந்து கன்னான் க்கு இடம்பெற்ற இடம்பெயர்வைக் குறிக்கும் வகையில் Exodus 1947 இக்கப்பலுக்கு எனப் பெயரிடப்பட்டது.

1947 யூலை 11 அன்று பிரான்ஸ் Port of Sète துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட Exodus 1947 ஒரு வாரத்தில் யூலை 18 அன்று பாலஸ்தீனக் கடற்பரப்பை அடைவதற்கு முன்னரேயே பிரித்தானிய கடற்படை போர்க்கப்பல்கள் Exodus 1947யை சுற்றி வளைத்தன. இதில் நடந்த கலகத்தில் Exodus 1947 இன் செலுத்திகளில் ஒருவரும் யூதப் பயணிகள் இருவரும் கொல்லப்பட்டனர் பலருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டது. அதன் பின் பிரித்தானிய கடற்படையினர் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இந்த கப்பல் பயணிகளின் பயணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களின் நாடு தேடும் பயணம் என்ற வகையில் அதற்கு அதீத முக்கியத்துவம் இருந்தது. இருந்தாலும் சட்ட விரோதமானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் திருப்பி வந்த இடத்திற்கே அனுப்புவது என்று பிரித்தானிய காலனியாளர்களால் முடிவெடுக்கப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த Exodus 1947 யை பாலஸ்தீனத்தின் ஹய்பா துறைமுகத்திற்கு கொண்டு சென்று பயணிகளை வேறு மூன்று திருப்பி அனுப்புவதற்கு தயாரான Runnymede Park, Ocean Vigour, Empire Rival கப்பல்களில் ஏற்றி வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். கப்பல்களில் பிரித்தானிய கடற்படையினரும் பயணம் செய்தனர்.

திருப்பி அனுப்பப்ட்ட கப்பல்கள் பிரான்ஸின் Port-de-Bouc துறைமுகத்தை அடைந்தது. ஆனால் தாயகம் அமைக்கும் கனவுடன் சென்ற பயணிகள் பிரான்ஸில் தரையிறங்க மறுத்தனர். அவர்களைப் பலவந்தமாக தரையிறக்குவதற்கு ஒத்துழைக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதனால் பிரித்தானிய அரசு தனது கட்டுப்பாட்டு பகுதிக்கு கப்பலைக் கொண்டு வந்து பயணிகளைத் தரையிறக்க முற்பட்டது. அதற்கு ஜேர்மனியே அவர்களுக்கு அருகில் அமைந்திருந்தது.

ஏற்கனவே சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த இந்த கப்பல் பயணம், ஹிட்லரின் வதைமுகாம்களில் கொடுமைப்படுத்தப்பட்ட அதே மக்களை ஜேர்மனியிலேயே கொண்டு சென்று தரையிறக்க முற்படுவது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் அற்றது. அவர்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தி முட்கம்பி முகாம்களில் அடைக்கவும் பிரித்தானிய அரசு முடிவு எடுத்தது. ஜேர்மனியின் ஹம்பேக் துறைமுகத்தில் பயணிகள் தரையிறக்கப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் நீண்ட அலைச்சலில் சோர்வடைந்து போராட வலுவற்று தரையிறங்கினர். ஆண்கள் போராடினாலும் இறுதியில் பலவந்தமாகத் தரையிறக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் பிரித்தானிய படைகள் மோசமாக நடந்துகொண்டதாக விபரிக்கப்பட்டது. ஒரு உதைபந்தாட்ட மைதானத்தில் விளையாடுவது போல் பிரித்தானிய படைகள் நடந்துகொண்டதாக உலக யூத கொங்கிரஸ் செயலாளர் Dr Noah Barou பதிவு செய்கிறார். கப்பலில் கொண்டு வரப்பட்டவர்கள் நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்கள் என்ற கரிசனை கூட இன்றி தாக்கப்பட்டதாக அப்பதிவு தெரிவிக்கிறது. கப்பலில் இருந்த யூத மக்கள் பிரித்தானிய படையினரை ‘Hitler commandos’, ‘gentleman fascists’, ‘sadists’ என்றெல்லாம் வர்ணித்து உள்ளனர்.

இந்த Exodus 1947 கப்பல் அகதிகள் பிரித்தானியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது. குறிப்பாக நாசி வதைமுகாம்களில் இருந்து தப்பியவர்களை ஜேர்மனியிலேயே தரையிறக்கி தடுத்து வைத்தது பிரித்தானிய அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அபகீர்த்தியானது. அந்த வகையில் Exodus 1947 ன் தாயகத்தை அமைக்கும் கனவு உடனடியாக நிறைவேறாது போனாலும் சர்வதேச கவனத்தை யூத மக்களின் மீது திருப்பியதுடன் சர்வதேசத்தின் ஆதரவை தமக்காகத் திருப்பியதிலும் வெற்றிகண்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள யூத மக்களின் போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யூத மக்கள் மீது அனுதாபம்கொள்ள ஆரம்பித்தது.

இறுதியில் 1948ல் பிரித்தானிய அரசு இஸ்ரேல் அரசை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கப்பட்டதற்கு அப்போது இருந்த புவியியல் அரசியல் காரணங்களின் தாக்கம் மிக முக்கியமானது. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் முடிவைத் தொடர்ந்து உருவான பனிப்போர் மத்திய கிழக்கில் மையங் கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

1948 ஏப்ரலில் ஜேர்மனியில் இருந்த இரு முகாம்களிலும் Exodus 1947 கப்பலில் பயணித்த 1800 அகதிகள் மட்டுமே இருந்தனர். ஏனையோர் பாலஸ்தீனத்துக்கு செல்ல முயல்கையில் கைதாகி காலவரையறையின்றி பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்த சைப்பிரஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டனர். இஸ்ரேலிய அரசு அங்கிகரிக்கபட்ட பின்னர் இவர்கள் தங்கள் தாயகபூமியாகக் கருதும் இஸ்ரேலைச் சென்றடைந்தனர்.

இவர்கள் பயணம் செய்த கப்பல் Exodus 1947, 1952ல் கடல் மட்டத்திற்கு எரிக்கப்பட்டு ஹய்பா கடற்கரையில் நிறுத்தப்பட்டது. 1963ல் இத்தாலிய நிறுவனத்தினால் பிரித்து மேயப்பட்டது.

Vanni_Mission வணங்கா மண் 2009 :

._._._._._.

“வணங்கா மண்”:  உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.

பிரித்தானிய வாழ் புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துக்களுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொள்கிறது.

தற்போதைய யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது. இந்நிலையில் எம் உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை இன்று முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம் பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை என்று வேண்டிநிற்கிறது.

“வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு.

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.

நன்றி-பாரிஸ்தமிழ்.கொம்

._._._._._. 

Operation Vananga-Man  Vanni Mission என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொருட்களை சேகரிப்பதில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பொருட்களாக இல்லாமல் பணமாக அன்பளிப்புச் செய்யுமாறு கேட்கப்படுவதாக தகவல்கள் எட்டுகிறது. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid,  Tamils Health Organisation,  The Tamils Support Foundation,  Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் நிதி மற்றும் உதவிகளை வழங்குவதாகக் கூறப்பட்டு உள்ளது.

இந்த வணங்கா மண் நடவடிக்கையை எவ்வாறு அனைவருக்கும் அறியப்படுத்த முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் மார்ச் 17ல் ஊடகவியலாளர் மேரி கொல்வினுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கேட்ட போது சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ளது’ என்று செய்திகள் கசியவிடப்பட்ட போதும் ‘வணங்கா மண்’ முல்லைத்தீவுத் தரையை தட்டும் என்பது ஒரு பகற்கனவாகவே உள்ளது.  நாம் அறிந்திராத நாடுகளின் கொடிகளுடன் எல்லாம் புலிகளின் கப்பல்கள் ஓடுகின்றன. அதனால் ஒரு கப்பலை அமர்த்தி பொருட்களை ஏற்றி பிரித்தானியத் துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலை ‘வணங்கா மண்’ என்று பெயரிட்டு அனுப்புவது ஒன்றும் புலத்து புலி ஆதரவு அமைப்புகளுக்கு ஒரு விடயமே அல்ல. கப்பலில் இலங்கைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நிறுவனங்கள் இதனையே செய்கின்றன.

‘வணங்கா மண்’ இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி. இலங்கை அரசும் பிரித்தானிய தூதரகமும் அவ்வாறான ஒரு கப்பலின் வரவு பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மனிதாபிமான நோக்கத்துடன் அவ்வாறான ஒரு கப்பல் வருமாக இருந்தால் அது இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கப்படுமா எனக் கேட்டபோது, இலங்கையின் கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

‘வணங்கா மண்’ ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அமைய உள்ளது. ‘வணங்கா மண்’ ஏற்பாட்டாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கும் இலங்கை அரசின் அனுமதி அவசியம் என்பது தெரியும்.

1947ல் பிரான்ஸில் இருந்து பாலஸ்தீனத்திற்கு Exodus 1947 புறப்பட்டது போல் ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த மண் – வன்னி மண் – வணங்கா மண் முல்லைத்தீவு நோக்கிப் பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்படலாம். இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் அதனை இலங்கை கடற்படை வழிமறிக்கலாம். மனிதாபிமானக் கப்பல் வழிமறித்ததைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கொதித்தெழலாம். தீக்குளிக்கலாம். சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மேல் சர்வதேச அனுதாபத்தை அதனால் ஏற்படுத்த முடியுமா?

அன்றிருந்த சர்வதேச அரசியல் நிலவரம் பனிப்போர் இன்றில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான அரசியல் ஆதிக்கம் பெற்றுள்ள காலம். மார்ச் 1ல் Tamils Against Genocide என்ற அமைப்பு அமெரிக்க சட்டவாதி புரூஸ் பெயின் என்பவரை அழைத்து லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் மரதன் ஓட்டத்தில் கருத்தரங்குகளை நடாத்தியது. அதில் ஒன்றில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ‘அமெரிக்காவில் உள்ள செனட்டர்களிடம் தமிழ் என்று சொன்னாலே அவர்கள் தமிழ் புலிகளையும் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளையும் தான் நினைக்கிறார்கள். அதனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையை அவர்களுக்கு புரிய வைப்பது கடினமானதாக இருக்கின்றது’ எனத் தெரிவித்தார். தமிழ் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை முதலில் நிறுவ வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதுவே இன்றைய யதார்த்தம். அமெரிக்காவில் உள்ள சட்டத்தரணி தனது வாதத்தை வெல்வதற்கு தமிழ் மக்களும் தமிழ் புலிகளும் ஒன்றல்ல என்கிறார். இலங்கை அரசு புலிகளை அழிக்கிறது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டு உள்ளது என்று சரியாகவே தனது வாதத்தை ஆங்கிலத்தில் வைக்கின்றார்.

ஆனால் இந்த அமைப்புகள் புலம்பெயர் மக்களுக்கு தமிழில் பேசும் போது தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க முடியாது புலிகள் தான் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தான் புலிகள் என்று சொல்லி முல்லைத்தீவு மக்களை மரணப்பொறிக்குள் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல வாயும் வயிறும் கட்டப்பட்டு உள்ள மக்களுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொண்டு பூர்வீக மண்ணைவிட்டு – அந்த மரணப் பொறியைவிட்டு அவர்கள் வெளியெற மாட்டார்கள் என்று இவர்கள் குரல் எழுப்புகிறார்கள். ரொறன்ரோ லண்டன் சிட்னி என்று வீடும் வளவும் வாங்கி விட்டுவிட்டு முல்லைத்தீவை பூர்விக மண் என்று அந்த மக்களின் தலையில் கட்டிவிட்டு கதையளக்கிறார்கள் புலத் தமிழர்கள்.

‘வன்னி மாடுகளை (மக்களை) ஒரு கட்டு வைக்கோலுடன் சமாளிப்பேன்’ என்றவர் ‘அடங்காத் தமிழன் வன்னியசிங்கம்.’ இங்கு புலத் தமிழன் ‘வணங்கா மண்’ கப்பல் அனுப்புகிறான் வன்னி மக்களுக்கு. வன்னி மக்கள் எல்லாத்துக்கும் தலையைத் தலையை ஆட்டுவார்கள் என்ற நினைப்பில் ‘வணங்கா மண்’ என்று றீல் விடுகிறார்கள்.

இலங்கை அரசு பேரினவாத அரசு என்பதை மட்டும் சரியாகவே இனம்காட்டி தமது தலைமைகளைத் தக்க வைத்துக் கொள்வதைத் தவிர தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அதற்கு தந்தை செல்வா முதல் அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட தம்பி பிரபாகரன் வரை யாரும் விதிவிலக்கல்ல. முன்னையவர்கள் இருவரும் மிதவாத அரசியல் தலைவர்கள். அவர்களின் பார்வை தமிழ் வாக்கு வங்கியின் மீதே இருந்தது. அதனால் அவர்களுக்கு ஓரளவு தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருந்தது. பின்னையவருக்கு அந்தக் கவலையும் இல்லை. ஏகபிரதிநிதி. தனிக்காட்டு ராஜா.
 
தமிழ் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக இழக்கப்பட தியாகிகளும் துரோகிகளும் என்று கொல்லப்பட்டவர்களின் பட்டியல் எகிறிக்கொண்டே சென்றது. துரோகிகளின் வரைவிலக்கணங்கள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டு இன்று தங்கள் உயிரைக்காக்க மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிக்க ஓடுபவர்களும் துரோகியாகி விட்டார்கள். ரொறன்ரோவிலும் லண்டனிலும் பாரிஸிலும் இருந்து கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக பூமி பற்றி விசேட கருத்தரங்குகள். மரணத்தின் விளிம்பில் நின்றாலும் பரவாயில்லை பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்காக இறுதிவரை போராட வேண்டுமாம். அதற்காக தாங்கள் ஐரோப்பாவில் இருந்து உணவும் மருந்தும் வணங்கா மண்ணில் முல்லைத் தீவுத் துறைமுகத்திற்கு வந்து சேருமாம்.

இலங்கை அரசுகளுடைய பேரினவாதப் போக்கும் தமிழ் தலைமைகளின் குறுந்தேசியவாதப் போக்கும் அரசியல் வறுமையும் தமிழ் மக்களை இன்று மிக மோசமான போர்ச் சூழலில் நிறுத்தி உள்ளது. மீளவும் தங்கள் தலைமையை நிறுவ புலிகள் தங்களிடம் உள்ள அனைத்து துருப்புச் சீட்டக்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று வன்னி மக்களின் உயிரிழப்புகளால் ஏற்படக் கூடிய மனித அவலம் என்பதும் வெளிப்படையாகி விட்டது. ஒரு பக்கம் இனவாத அரசு. மறுபக்கம் அதற்கு பலிகொடுக்கத் தயாராக நிற்கும் புலிகள். இரண்டுக்குமிடையே வன்னி மக்கள்.
 
‘நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.’

கலாநிதி குமார் ரூபசிங்க

இன்று எல்லோர் முன்னும் உள்ள மிகப்பெரிய பொறுப்பு ஏற்படப் போகின்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தவது. தாகத்திற்கு தண்ணி தாருங்கள் என்று மக்கள் உயிருக்கு தவிக்கிறார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருந்துகொண்டு ‘வணங்கா மண்’ணில் தண்ணி அனுப்புவம் என்று றீல் விடுவதை விட்டுவிட்டு அங்குள்ள அவலத்தை தடுக்க யதார்த்த்தமான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேல் மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் பதிவு ! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

ranjeth-gunasekara.jpgகடந்த ஐந்து வருடத்துக்குள் மேல் மாகாணத்தில் வந்து குடியேறியுள்ளவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சனி,ஞாயிறு (21,22,)  ஆகிய தினங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்  ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  மேலும் கூறியதாவது,

வடக்கில் தோல்வியின் விளிம்பில் உள்ள புலிகள் தெற்கில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என புலனாய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மீலாத் விழாவின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் பாணியில் மேலும் பல தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்குத் தேவை. எனவே பொது மக்கள் எப்போதும் விழ்ப்புடன் இருக்கவேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் குடியேறியவர்களும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தம்மைப் பதிவு செய்து கௌள வேண்டும். மேல் மாகாணத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் வேறு பொது நிலையங்களிலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேறn;காண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரவித்தார். 

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு- படைத்தரப்பு

army-s-l.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

55, 58 மற்றும் 8ஆவது விஷேட படையணியினரே இந்த தீவிர முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு மற்றும் சாலை தெற்குப் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.  இதில் இருதரப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கினறது

கச்சைதீவில் சமய வழிபாட்டுத்தலம்

kachchativu.gifகச்சைதீவு இலங்கைக்கே சொந்தமானதெனவும் அதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் நகர அபிவிருத்தி மற்றும் புனித பிரதேச அபிவிருத்தியமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கச்சைதீவில் இப்போது சமய வழிபாட்டுத்தலமொன்று அமைக்கப்பட்டுள்ளது.மீனவர்களும் பொது மக்களும் அங்கு தினமும் வந்து வழிபாடுகளை நடத்துகின்றனர். அவர்களையும் அப்பிரதேசத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.