எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம்

upfa-website.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பீ யில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

(www.sandanaya.lk) எனும் பெயரிலான இந்த இணையத்தளத்தை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திறிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டத்திற்கு முரணானதல்ல -கனடியப் பொலிஸார் தெரிவிப்பு

ltte_flag.jpg
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா தடைசெய்திருக்கின்ற நிலையில் இந்த வாரம் ரொரொன்ரோவில் தமிழ் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பொது புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டரீதியானதென கனடியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ரொரொன்ரோவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் . இலங்கை யுத்தம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவ்வாறு கொடிகளை வைத்திருந்தமை கனடாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணானதா என்பது குறித்து கனடாவின் சட்டத்திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நகரப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். ஆனால், அது சட்டவிரோதமானதல்ல என்ற கருத்தை பொலிஸ் படை வழக்கறிஞர்கள் கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மார்க்புகாஷ் கூறியுள்ளார்.

“எந்தவொரு சட்டத்திற்கும் முரணானதாக இது இல்லை’ என்ற கருத்தை எமது வழக்கறிஞர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டதையடுத்து புலிகள் அமைப்பிற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

பிரிட்டிஷ் பிரபல நடிகை பனிச்சறுக்கில் விழுந்து மரணம்

natasha-richardson.jpgபிரிட்டிஷின் பிரபல நடிகை நடாசா ரிச்சர்ட்சன் கனடாவில் பனிச்சுறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை திடீரெனச் சறுக்கி விழுந்ததால் உயிரிழந்தார். 45 வயதான நடாசா கனடாவிலுள்ள பிரபல பூங்காவில் நேற்று முன்தினம் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிழே விழுந்ததால் தலையில் கடும் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாங்க முடியாத வலியால் துடித்த அவரை கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அமெரி க்காவில் உள்ள நியூயார்க் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் நேற்றுக் காலை அவர் மரணம் அடைந்தார். நடாஷாவின் கணவர் நீசலும் நடிகராவார். அவர் நடாஷாவுடன் இருந்து அவரைக் கவனித்து வந்தார். நடாஷாவின் தந்தை டோனி சினிமா டைரக்டர் ஆவார். அவர் 1991ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.

ஐ.தே.கவின் ஒப்பந்த காலத்தில் 50க்கும் மேற்பட்ட உளவுப்படை தலைவர்கள் புலிகளால் கொலை

anura-piriyadarshana-yappa.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் தான் உளவுப்படைத் தலைவர்கள் உட்பட ஐம்பது அதிகாரிகளும் சுமார் ஆயிரம் உளவு முகவர்களும் புலிகள் இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் இயக்கத்தினர் ஆயுத சேகரிப்பிலும், உளவுப் படைத் தலைவர்களையும், அதிகாரிகளையும், உளவு முகவர்களையும் படுகொலை செய்வதிலும் ஆள ஊடுருவும் படையைப் பலவீனப் படுத்துவதிலும் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் தினைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், “புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒருபோதும் வெளியார் குடியமர்த்தப்படமாட்டார்கள். அதற்கான எண்ணமும் அரசாங்கத்திடம் கிடையாது. இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டதும் அப்பகுதிகளில் வசித்த மக்களே மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரே மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தான் புலிகள் எமது உளவுப் படைத் தலைவர்களையும், அதிகாரிகளையும், உளவு முகவர்களையும் படுகொலை செய்யத் தொடங்கினார்கள்.

இக்காலப்பகுதியில்தான் புலிகள் தங்களது படைகளுக்கு சிறுவர்களை பெருமளவில் சேர்த்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் 4700 சிறுவர்களைப் புலிகள் இயக்கத்தினர் தங்களது படையில் சேர்த்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையொன்றில் 2003ம் ஆண்டு 709 சிறுவர்கள் புலிகளால் கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிந்தது. தமிழர் புனர்வாழ்வு கழக அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்ட பின்பே சிறுவர்கள் அதிகளவில் கடத்தப்பட்டனர். ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை புலிகள் இயக்கத்தினர் பலமடைவதற்கே உதவியது. இக்காலப் பகுதியை ஆயுத சேகரிப்புக்கும் ஆள்திரட்டலுக்கும் அவர்கள் பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர் என்றார்.

உதவி

200309.jpgமோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்கென கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் உட்பட்ட பொருட்களை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பிரிவு மாணவன் ஆர். எம். சமித்தஜீவன் கையளிப்பதைப் படத்தில் காணலாம். உபவேந்தர் பேராசிரியர் திருமதி சானிகா ஹிரும்துரேகம, சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி பிரேமகுமார மற்றும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

ஃபிரிட்சலுக்கு ஆயுள் தண்டனை

austria_incest.jpg
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பலமுறை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.

இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.

பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.

விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார். தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க படையினரின் இறுதித்தாக்குதல் ஆரம்பம்

wanni-war.jpg சிவிலியன்களை மீட்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக இராணுவத் தாக்குதல் படையணிகள் சுற்றிவளைத்துள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

களநிலையில் மிக உக்கிரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் நேற்று (மார்:19) புலிகளின் தடைநிலைகள் மீது கடும் தாக்குல் நடத்தி அவர்களுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  இப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 9வது கெமுனுப் படையணியினர் 11 எல்ரிரிஈயினரின் உடல்கள் 17 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 26 கைக்குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர்.

இதேவேளை இரணப்பாலைப் பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 7வது சிங்கப் படையினர் 3 உயர் நவீன தொடர்புசானங்கள் இரு பிரதான நிலைய தொடர்பு சாதனங்கள் மற்றும் இரு கொண்டு செல்லக்கூடிய தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இப்பகுதியில் நிலைகொன்டுள்ள 58 வது டிவிசன் படைப்பிரிவின் ஸ்ணைபர் படையினர் 13 புலிகளை கொன்றுள்ளனர். மேலும் படையினர் புதுக்குடியிருப்புக்கு கிழக்காக புலிகளால் கைவிடப்பட்ட கடற்புலிகளின் முகாமைக் கைபற்றியுள்ளதுடன் இம்முகாமிலிருந்த உயர் நவீன தொடர்புசாதனங்கள், செய்மதி அன்ரனாக்கள், வடிவமைக்கப்பட்ட படகுகள், சிறிய நீர்மூள்கி இயந்திரம், கொம்பியூட்டர்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1983 சிவிலியன்கள் பாதுகாப்புத் தேடி 58வது டிவிசன் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

4 கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு 3 மாதகால விடுமுறை

parliament.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 3 மாதகால விடுமுறைக்கு சபை நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கான விடுமுறைப் பிரேரணைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அக் கட்சியின் சக உறுப்பினர்களான ரி.கனகசபை, கே.பத்மநாதன், கே.துரைரட்ணசிங்கம், சொலமன், எஸ்.சிரில் ஆகியோர் முறையே மேற்குறித்த உறுப்பினர்களுக்கான விடுமுறையை பிரேரணைகளைச் சமர்ப்பித்து நேற்றைய தினம் (19.03.2009) தொடக்கம் 3 மாத காலத்துக்கு விடுமுறைகளுக்கான அனுமதியைக் கோரினர். இதனையடுத்து சபையினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

தடுப்பூசி ஒவ்வாமையால் சிறுமியொருவர் மரணம்

vaccina.jpgமாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவியருள் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவியர் பலர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுள் 26 மாணவியர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் விவாதிக்க சீனா எதிர்ப்பு

china-flag.jpgஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வாதிப்பதற்ற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும் சீனா ‘இது இலங்கையின் உள்விவகரம்’ எனவும் ‘இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை’ எனவும் தெரிவித்து பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் கலந்துரையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.