எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பின்லேடன், முல்லாஒமர் ஆப்கானில் 20 ச.கி.மீ.பரப்புக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்கப்படை என்ன செய்யும்?

dalas_alahapperuma.jpgஆப் கானிஸ்தானில் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் போன்றோர் சுமார் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்குண்டிருப்பது உறுதியானால் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாட்டு படைகளின் நடவடிக்கை எப்படியானதாக இருக்குமென சர்வதேச சமூகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை அரசாங்கம் ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்று பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் சிக்குண்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.

கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“பாதுகாப்புப் படையினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் சர்வதேச சமூகத்திடம் கேட்க எமக்கு கேள்வியொன்று இருக்கிறது. அதாவது விடுதலைப் புலிகள் இன்று சுமார் 20 கிலோமீற்றர் பரப்பிற்குள் சிக்குண்டிருக்கின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் போன்ற புலிகள் முக்கிய தலைவர்களும் இந்தப் பரப்பிற்குள் தான் இருக்கின்றனர்.

500,700 மீற்றர் தூரத்தில் அவர்களின் (புலிகளின்) நடமாட்டங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே, அல்ஹைடாவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு பின்லேடன் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் சிக்குண்டிருப்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் அந்த படையினர் எப்படி செயற்படுவார்கள்?

அதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க நேசநாட்டுப் படையினர் கந்தகாரில் ஒளிந்திருக்கும் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா ஒமர் உள்ளிட்ட அவ்வியக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் தலைவர் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் படையினர் எப்படிச் செயற்படுவார்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

இது முக்கிய பிரச்சினை. இலங்கைப் படையினர் பொதுமக்களுக்குப் பிரச்சினையின்றி பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவே முயற்சித்து வருகின்றனர். இது கஷ்டமான வேலை. புலிகளால் பொதுமக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்மக்களை பாதிப்பின்றி மீட்பதானது முட்களில் விழுந்த சேலையை எடுப்பது போன்ற கஷ்டமான பணியாகும்.  எவ்வாறாயினும் இலங்கைப் படையினர் ஒழுக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு வருவதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு நிவாரண உதவி

160309.jpgமோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதரும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கவென கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் “வடக்கு உறவு பயணம் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் சேகரிக்கப்பட்ட ஒருதொகை உணவு மற்றும் உடுதுணிகளை மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் வைத்து கையளித்தது.

இந்த பொதிகளில் பால்மா, உடுதுணிகள், உலர் உணவு, மருந்துவகைகள் மற்றும் பாட சாலை உபகரணங்கள் என்பன உள்ளடங்குகின்றன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக உப வேந்தர் என்.எல்.ஏ.கருணாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு கருத்துரைத்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன்;

உடைந்து சிதறிப் போயிருந்த இலங்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியினால் முழு இலங்கையாக உருவாக்கமுடிந்துள்ளது. இதற்கு முன்னுதாரணமாக தற்போது அமைச்சுப் பதவியினை ஏற்றிருக்கும் அமைச்சர் கருணா அம்மான், கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் பிரவாகத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த 20 வருட காலமாக கவனிப்பாரற்றிருந்த நிலங்கள் இன்று விவசாயம் செய்யும் நிலங்களாக மாறியுள்ளன. அதேபோல், வடக்கிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. கல்விச் சமூகம் பாதிக்கப்படுகின்ற சமூகங்களுக்கு உதவி செய்ய முன்வருகின்ற போது அது இந்த இலங்கை வாழ் மக்களின் உயர் குணத்தை பறைசாற்றும் ஒன்றாகும் ‘ என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஹால்தீன், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் சரத் பெரேரா, பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.அபயசேகர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமரின் பிரதம செயலாளர் இன்று இலங்கை விஜயம்

nayar.jpgஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதம செயலாளர் டீ.கே.ஏ. நாயர் இன்று இலங்கை வரவுள்ளதாக இணைய தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பை ஏற்றே அவர் இங்கு வரவுள்ளார் எனவும் இலங்கை- இந்தியாவுக்கிடையிலான அபிவிருத்தி, பொருளாதாரம் தொடர்பாகவே இவரது விஜயத்தின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விமானப்படையினரின் ஹெலிகொப்டர்கள் இரண்டின் மீது புலிகள் தாக்குதல்

bell80.jpgபுதுக் குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரண்டு பெல் 212 ரக  ஹெலிகொப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு  ஹெலிகொப்டர்கள்  விமானிகளினதும் பொறியிலாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறக்கப் பட்டதாகவும் இதன்போது ஹெலிகொப்டர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் இவ்விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

அமைச்சர் அமீர் அலியின் ஊடக செயலாளர் மீது தாக்குதல்

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஊடகச் செயலாளர் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஓட்டமாவடியில் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு 10.15 மணியளவில் ஓட்டமாவடியில் தனது தாயாரின் வீட்டோடு இணைந்துள்ள தனது கடையிலிருந்த போதே அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸார் இவரைக் கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான அமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.எஸ்.ஏ.எம்.அஜ்வத் அலி கூறுகையில்;

நாங்கள் கடையிலிருந்த போது அங்கு வந்த பொலிஸார் அடையாள அட்டைகளை காட்டுமாறு கேட்டனர். எனது பெயரைக் கேட்டனர். அவர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். அமைதியாக இருக்குமாறு கூறவே பொலிஸாரில் ஒருவர் என்னைத் தாக்கினார். மற்றொரு கான்ஸ்டபிளும் தாக்க முற்பட்டார்.

எனது தேசிய அடையாள அட்டையையும் அமைச்சின் அடையாள அட்டையை காண்பித்து என்னை அறிமுகப்படுத்தினேன். அதனைப் பொருட்படுத்தாத அவர்கள் என்னை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினேன். முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். பொலிஸாரின் தாக்குதலால் காயமடைந்ததால் பின்னர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

உதயன் அலுவலகம் மீது கைக்குண்டு தாக்குதல்.

uthayan_logo.gif
யாழ்ப்பாணத்திலுள்ள “உதயன்” அலுவலகம் மீது நேற்றுநள்ளிரவு இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 11.10 மணியளவில் இக்கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைக்குண்டுத் தாக்குதலால் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமாவாசைக்கு காத்திருக்கும் ஜெயலலிதா: ‘யுத்தம் என்றால் மக்கள் சாவது இயற்கை’ என்ற சிங்களத்துக் காளிகாதேவி ‘ஜெ’க்கு, இப்போது மட்டும் இலங்கை தமிழர் மீது ஏன் திடீர் அக்கறை? -கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவித்தால் மத்திய அரசு மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு பாடல் வரி உண்டு. அதற்கு இன்று ஒட்டுமொத்த சான்றாக தமிழகத்திலே விளங்கி வருபவர் ஜெயலலிதா தான். அறிக்கைகள் என்ற பெயரால் தன்னால் முடிந்த அளவிற்கு மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ- எதையாவது எழுதி மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அன்றாடம் முயன்று வருகிறார்.

22.3.2009 தேதியிட்ட அறிக்கையில் ஜெயா `கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர் தான் தற்போது தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார்’ என்ற பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

கச்சத்தீவை இந்தியர் தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாக சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொன்னால், எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?

15.8.1991 அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடியபோது ஆற்றிய உரைக்கு அனைத்து பத்திரிகைகளும் கொடுத்த தலைப்பே, `கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா சபதம்’ என்பதுதான்.

ஆனால், 1991 முதல் 1996 வரையிலும், பிறகு 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலும் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை அவர் ஏன் மீட்கவில்லை?. 91ம் ஆண்டு சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் என்ன? அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன கிழித்தார்?.

`கச்சத்தீவு’ என்றால் கச்சேரிக்கு எடுத்து செல்லும் வீணை என்று நினைத்துக் கொண்டு அதை `மீட்டுவேன்’ என்று சபதம் செய்திருப்பார். பாவம். அவர் கோட்டை கொத்தளத்தில் சபதம் செய்து ஆட்சியிலே இருந்தபோது எதை மீட்டிக் கொண்டிருந்தார்? ஆனால் நேற்று எழுதியுள்ள அறிக்கையிலே தனது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று பொய்யாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழகம் ஏன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யக்கூடாது என்று வக்கணையாக அறிக்கைவிடும் ஜெயலலிதா அப்போது பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது கச்சத் தீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சி ராஜினாமா செய்யும் என்று அறிவித்தது உண்டா? ராஜினாமா செய்ததுதான் உண்டா?.

விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்துகொண்டு வாய் சவடாலாக முழங்கிவிட்டு, அந்த பேச்சு பத்திரிகைகளில் எல்லாம் கொட்டை எழுத்துகளில் வெளிவந்ததே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதிவிட்டு, ஒருமுறை பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி.

ஆனால் நான் ஏதோ ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக அறிக்கையிலே வாய்நீளம் காட்டியிருக்கிறார்.

மத்திய அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?

1974ம் ஆண்டிலேயே ஆகஸ்டு 21ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு பற்றி நான் முன்மொழிந்த தீர்மானம் இதோ. `இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.’

எனவே, திமுக அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை.

மேலும் அந்த தீர்மானத்தில் நான் பேசும்போது, `கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்து சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து திமுக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.’

கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதில் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்கு பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்த கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதற்கு எந்த வகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

தமிழக அரசை இதுபோன்ற பெரிய பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை. ஆக்கபூர்வமான முறையில் பிரதமர், முதல்வர் இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட-எத்தனை முறை இதுபற்றி பிரதமரிடத்திலே தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்சத்தீவுப் பிரச்சினையில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை- கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில், `1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று கச்சத்தீவை இலங்கையிடம் தரும் அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இதுபற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27ம்ந் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்த காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்’.

17.8.1991 அன்றே `தினமணி’ பத்திரிகை எழுதிய தலையங்கத்தில், 1974ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, பண்டார நாயாகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், `1976ல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்தே, திமுக ஆட்சியிலே இருந்த காலத்தில் மீன்பிடிக்கும் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டதாக கூறுவது அசல் மோசடியும், பித்தலாட்டமும் ஆகும்.

ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் இலங்கை அமைச்சர் ஒருவர் கச்சத்தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் என்றும், அதற்கு மத்திய-மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், இதன்மூலம் இலங்கை அரசின் அறிவிப்புக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் ஜெயலலிதா எழுதியுள்ளார்.

இந்த பொருள் பற்றிய அறிக்கையை 22ம் தேதி காலையில் வைகோ விடுத்திருந்தார். அதே பொருள் பற்றி 22ம் தேதி மாலையில் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா அறிக்கை விட்டபிறகு, அதே பொருள் பற்றி அடுத்த நாள் வைகோ அறிக்கை விடுவார். இது இலங்கை பிரச்சினை என்பதால், வைகோ அறிக்கை விடுத்து, அதனை ஜெயலலிதா பின்பற்றியிருக்கிறார் போலும்.

`கச்சத்தீவை முழுவதுமாக தனித்த புனித இடமாக இலங்கை அரசு அறிவிக்கப் போகிறதாம்’ என்று தான் இவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி விசாரித்த அளவில்- இலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவிக்க இருப்பதாக எந்த நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா மொழியிலே சொல்வதென்றால் ‘வாய் தவறி’ சொல்லியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது.

எது எப்படியிருந்தபோதிலும், அது உண்மையாக இருந்து அப்படி அறிவித்துச் செயல்படத் தொடங்கினால் திமுக அரசு அதற்கான விளக்கம் கேட்டு பெற்று; அதை வன்மையாக கண்டிக்கவும்- மத்திய அரசுக்கு அறிவித்து-உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தயங்கப் போவதில்லை.

இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்- திடீரென்று ஜெயலலிதாவுக்கு இலங்கை மீது இவ்வளவு இன உணர்வு மிக்க அக்கறை எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பதுதான்.

சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைத்தான் வேட்டையாடுகிறார்கள்; அப்பாவித் தமிழர்களை அல்ல என்றும், யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது இயற்கை தான் என்றும் சிங்களத்துக் காளிகாதேவியாக நின்று முழங்கிய ஜெயலலிதாவுக்கு இப்போது திடீரென்று இலங்கை தமிழர் மீதும்- கச்சத்தீவு மீதும் இவ்வளவு அக்கறை வருவானேன்? எல்லாம் தேர்தல் தேதி நெருங்குகிறது என்பதால் தானே?.

ஆமாம்; `பிரபாகரனை இலங்கையில் கைது செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருக’ என்று ஜெயலலிதா; முதல்-அமைச்சராக இருந்தபோது 16.4.2002 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாரே; அந்த ஜெயலலிதா தானா இந்த ஜெயலலிதா?.

அய்யோ பாவம்; அவர் தான் இவர் என்று தெளிவடைய அவர் முகமூடியைத் திறந்து பாருங்கள் என்று தான் கூறவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அமாவாசைக்கு காத்திருக்கும் ஜெயலலிதா

தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வரும் 26ம் தேதி அறிவிக்கவுள்ளன. காரணம், அன்றைய தினம் நிறைந்த அமாவாசையாகும்.

வரும் வியாழக்கிழமை நிறைந்த அமாவாசை தினம் வருகிறது. வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும், அதுவும் அன்றைய தினம் சித்த யோகத்துடன் கூடிய நிறைந்த அமாவாசையும் கூடி வருகிறது.

அதன் பிறகு வளர்பிறை ஆரம்பிப்பதால், அன்றைய தினம் தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெல்லும் என்பது நம்பிக்கை.

இதில் பெரும் நம்பிக்கை கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்றைய தினம் தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

பாஜகவும் அன்றைய தினமே வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்றுதான் கன்னியாகுமரியில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டமும் அன்றுதான் கூடுகிறது. கூட்டணி பற்றிய முக்கிய முடிவை அன்று தான் அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் எடுக்கிறார்.

949 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம் – உதய நாணயக்கார

navy_rescue_civil.jpgபுலிகளின் பிடியிலிருந்து வந்த 949 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவர்களில் 810 பொது மக்கள் இராணுவத்தினரிடமும், 139 பொது மக்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 810 பொது மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை டிங்கிப் படகுகள் மூலம் இரு தடவைகளாக 129 பொது மக்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். முதலாவது குழுவில் 126 பொது மக்களும் இரண்டாவது குழுவில் 13 பொது மக்களும் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர். இவர்களில் 43 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவர்.

இவர்களில் காயமடைந்தவர்களுக்கு கடற்படையினர் உடனடி முதலுதவிகளை வழங்கியுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

இவ்வருட ஐ.பி.எல். தென்னாப்பிரிக்காவில்

_ipl_graphic_.jpgபாது காப்புக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, தென்னாபிரிக்காவில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாக சபை உறுதி செய்துள்ளது.

முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரகாலம் தாமதமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதலாவது ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், அது ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே இந்தச் சுற்றுப் போட்டியும் நடக்கவிருந்ததால், அதற்கான பாதுகாப்பு அங்கீகாரத்தை பெற போட்டிகளை நடத்துபவர்கள் தவறிவிட்டதால், இதனை இங்கிலாந்தில் நடத்தலாமா என்றும் முதலில் ஆராயப்பட்டது.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்- நவநீதம் பிள்ளை

nawaneetappilli.jpgஇலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த ஐ.நா. மன்றத் தலைவர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதை மீண்டும் வலியுறுத்தப் போகிறேன் என்று தெரிவித்தார் நவநீதம் பிள்ளை. இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.மன்றத்தின் கருத்து என்று தெரிவித்த நவநீதம் பிள்ளை, சிவிலியன்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் மனித உரிமை நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து்ம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கவலைகள் குறித்தும் இந்திய அமைச்சர்களிடம் விவாதித்தாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.