மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதரும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கவென கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் “வடக்கு உறவு பயணம் செல்வோம்’ என்னும் தொனிப்பொருளில் சேகரிக்கப்பட்ட ஒருதொகை உணவு மற்றும் உடுதுணிகளை மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் வைத்து கையளித்தது.
இந்த பொதிகளில் பால்மா, உடுதுணிகள், உலர் உணவு, மருந்துவகைகள் மற்றும் பாட சாலை உபகரணங்கள் என்பன உள்ளடங்குகின்றன. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக உப வேந்தர் என்.எல்.ஏ.கருணாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இங்கு கருத்துரைத்த மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன்;
உடைந்து சிதறிப் போயிருந்த இலங்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியினால் முழு இலங்கையாக உருவாக்கமுடிந்துள்ளது. இதற்கு முன்னுதாரணமாக தற்போது அமைச்சுப் பதவியினை ஏற்றிருக்கும் அமைச்சர் கருணா அம்மான், கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் பிரவாகத்துக்குள் வந்துள்ளனர்.
கடந்த 20 வருட காலமாக கவனிப்பாரற்றிருந்த நிலங்கள் இன்று விவசாயம் செய்யும் நிலங்களாக மாறியுள்ளன. அதேபோல், வடக்கிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வெகு விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. கல்விச் சமூகம் பாதிக்கப்படுகின்ற சமூகங்களுக்கு உதவி செய்ய முன்வருகின்ற போது அது இந்த இலங்கை வாழ் மக்களின் உயர் குணத்தை பறைசாற்றும் ஒன்றாகும் ‘ என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஹால்தீன், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் சரத் பெரேரா, பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.அபயசேகர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.