அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஊடகச் செயலாளர் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஓட்டமாவடியில் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு 10.15 மணியளவில் ஓட்டமாவடியில் தனது தாயாரின் வீட்டோடு இணைந்துள்ள தனது கடையிலிருந்த போதே அங்கு வந்த வாழைச்சேனை பொலிஸார் இவரைக் கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான அமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.எஸ்.ஏ.எம்.அஜ்வத் அலி கூறுகையில்;
நாங்கள் கடையிலிருந்த போது அங்கு வந்த பொலிஸார் அடையாள அட்டைகளை காட்டுமாறு கேட்டனர். எனது பெயரைக் கேட்டனர். அவர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். அமைதியாக இருக்குமாறு கூறவே பொலிஸாரில் ஒருவர் என்னைத் தாக்கினார். மற்றொரு கான்ஸ்டபிளும் தாக்க முற்பட்டார்.
எனது தேசிய அடையாள அட்டையையும் அமைச்சின் அடையாள அட்டையை காண்பித்து என்னை அறிமுகப்படுத்தினேன். அதனைப் பொருட்படுத்தாத அவர்கள் என்னை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினேன். முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். பொலிஸாரின் தாக்குதலால் காயமடைந்ததால் பின்னர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.