எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி பார்வையற்ற இளைஞர்கள் பாதயாத்திரை

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் பதாதைகளுடன் நான்கு பார்வையற்ற இளைஞர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.  சென்னையைச் சேர்ந்த கே.வீரப்பன் (வயது 34), என்.மாரிசாமி (வயது 36), எஸ்.ஆறுமுகம் (வயது 40) மற்றும் எம்.சக்திவேல் (வயது 34) ஆகிய நால்வருமே சுடும் வெயிலில் அதிவேக வாகன போக்குவரத்துடைய சாலைகளினூடாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள மரீனா கடற்கரையிலிருந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் பாதயாத்திரை திட்டமிட்டவாறு மார்ச் 28 ஆம் திகதியான கன்னியாகுமரியில் நிறைவடையும் என்ற நம்பிக்கை காணப்படவில்லை. இருப்பினும், மாரிசாமி தலைமையில் அந்நான்கு இளைஞர்களும் மெதுவாகவும், அதேசமயம் திடமாகவும் தமது இலக்கை நோக்கிச் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் நோக்குகின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் பாரிய படுகொலைகளுக்கு எதிராக பெரும்பான்மையான தமிழர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களுடன் நாமும் கரம் கோர்க்கும் நோக்குடன் இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியே சென்னை முதல் கன்னியாகுமரி வரையான இப்பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளோம் என வீரப்பன் தெரிவித்தார்.

தினமும் சராசரியாக 30 கிலோ மீற்றர் தூரத்தை, இவர்கள் கடந்து செல்கின்றனர். எமது சமூகத்திற்கு சிறந்த ஆக்கபூர்வமான விளைவுகளைப் பெற்றுத் தரும் இலக்கை நாம் முன்னெடுக்கின்றோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக நாம் சந்தித்த சிலரும் வேறு விதமான போராட்டங்களை மேற்கொள்வார்கள் என நம்புகின்றோம். அத்துடன் எமது போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மகிழ்வை அளிக்கின்றது என வீரப்பன் மேலும் தெரிவித்தார்.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 17 நிபந்தனைகள் – விரட்டியோர் இன்று மண்டியிடுவதாகக் கூறுகிறது ஐ.தே.க.

spdesanayaka.jpgசர்வதேச நாணய நிதியத்தை விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் மண்டியிட்டுவருவதாக தெரிவித்த மத்திய மாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, 17 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே கடனு தவியைப்பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழல், மோசடிகள், வீண்விரயங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தவறினால் கடனுதவி கிடைப்பது சந்தேகத்துக் கிடமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எமது நாட்டைப்பாதிக்காது என்று அரசு கூறிவந்தது இன்று பொய்யாகிவிட்டது. நாட்டின் நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஒரே சமயத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது. 2002 இல் ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக வளர்ச்சிகண்டு படிப்படியாக 2007 ஆம் ஆண்டாகும் போது 4.9 சதவீதம் வரை உயர்ச்சியடைந்தது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் இன்று முற்றிலும் எதிர்மறையான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. 0.5 சதவீத படுமோசமான வீழ்ச்சிநிலையை அடைந்துள்ளது. உலகின் எந்தவொரு நாடும் காணாத பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனமான சி.ரி.ஸ்மித் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின் பிரகாரம் பங்குச்சந்தை 81 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இலங்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற 16 இலட்சம் பேரில் மூன்று இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே அரசு கட்டுப்படுத்தவில்லை. புதிதாக நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதைத் தவிர்த்து வருவதால் டொலரின் பெறுமதி கட்டுப்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாக பண வீக்கத்தை ஒரே நிலையில் வைத்திருக்க முடிகிறது.அரசாங்கத்தின் கடன் பளு படுமோசமாக அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது. இந்தநிலை மேலும் தொடருமானால் 1970-77 காலப்பகுதிக்கு நாடு மீண்டும் தள்ளப்படலாம். கியூவும் உருவாக்கக்கூடிய அபாயம் தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியிடம் கைநீட்டப் போவதில்லை எனவும் அதில் அடிக்கப்பட்ட ப்ளக் கழற்றப்படுமெனவும் வீராவேசம் பேசிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியிடம் மண்டியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியின் உறுப்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று அதில் நிதிஉதவி கோருவது தவறென்று நான் கூறப்போவதில்லை அதிலிருந்து உதவி பெறும் உரிமை இலங்கைக்கு இருக்கின்றது.

ஆனால், அதன் உதவி தேவையில்லை என்று அதன் அனுபவத்திலேயே மூடச்செய்து விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் வீழ்ந்துள்ளனர். சர்வதேச நாணயநிதி கேட்டவுடன் அள்ளிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும் . இந்தத் தடவை 17 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை, அடிப்படை மனித உரிமைகளுக்குட்பட்ட பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் பேணப்படுதல், ஆட்கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி, ஊழல், மோசடி, வீண் விரயங்களைத் தவிர்த்தல் போன்றவை முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இந்த 17 நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கியே ஆகவேண்டும்.

அரசாங்கம் நிதியை வீண்விரயம் செய்யவில்லை என்று கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 108 அமைச்சர்களைக் கொண்ட அரசு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ள முடியும். அமைச்சர்களுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள், வீதியில் அவர்கள் போகும்போது பொதுமக்களுக்கு எவ்வாறு நெருக்கடி என்பதையெல்லாம் காணும்போது வீண்விரயம் செய்யவில்லை என்பதை நம்ப முடியுமா? அரசு நிவாரணத்துக்காக ஒதுக்கும் நிதியை விட இரண்டுமடங்கு நிதி அமைச்சர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

60 வருடங்களில் முன்னெப்போதும் காணப்படாத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர் கொண்டுள்ளது. இதிலிருந்து விடுபட சரியான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால் நாடு பிச்சைக்கார நாடாக மாறும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்தார்.

உயர்கல்விக்கான விரிவுபடுத்தல் நாட்டில் பாரியதொரு சவால் மாற்றுவழி அவசியம் -விஷ்வ வர்ணபால

உயர் கல்வி கற்று ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக தகுதியைப் பெற்றுக்கொள்கின்றபோதும் மிகக் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. இதற்கான மாற்று வழிகள் அவசியமென உயர் கல்வியமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார்.

சார்க் நாடுகளின் உயர் கல்வியமைச்சர்கள் மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றபோது மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பூகோளமயமாக்கலின் கீழ் புதிய உயர் கல்வி வாய்ப்புகள் சாத்தியமற்றதாகிவரும் நிலையில் சார்க் நாடுகள் தமது சொந்த வளங்களையும் மூலோபாயங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி இத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மேற்படி மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வர்ணபால, உயர் கல்விக்கான வசதிகளை விரிவுபடுத்துவது ஒரு சவாலான விடயமாகவே எம்முன் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் iல் காந்த் சர்மா, உயர் கல்வித்துறையில் அபிவிருத்தியின் தேவை இன்றியமையாதது என்பதுடன், சார்க் பிராந்திய நாடுகள் ஒரேவிதமான உயர் கல்விக் கொள்கையைப் பற்றி ஆராய்வதும் சிறந்தது எனத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் உயர் கல்வித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ஆர். பி. அகர்வால், பாகிஸ்தானின் சார்பில் உயர் கல்வி ஆணைக்குழு உறுக்பினர் பேராசிரியர் ரியாஸ் அல்ஹக் தாரிக், ஆப்கானிஸ்தானின் சார்பில் உயர் கல்வியமைச்சர் கலாநிதி மொகமட் அஸாம் டட்பார், பங்களாதேஷ் சார்பில் கல்வியமைச்சர் நூருல் இஸ்லாம் நஹீட், பூட்டான் சார்பில் கல்வியமைச்சர் லியோன்போ தாஹீர் எஸ். யெளடியல், மாலைதீவின் சார்பில் கல்வியமைச்சர் அஹமட் அலி மனிக்கு, நேபாளம் சார்பில் கல்வியமைச்சர் ரேணுகுமாரி யாதவ், இலங்கையின் சார்பில் பிரதிக் கல்வியமைச்சர் மயோன் முஸ்தபா உட்பட அமைச்சின் அதிகாரிகள், முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுத்தளம் ஒன்றினை உருவாக்க முடியுமா? TIC முயற்சி. : த சோதிலிங்கம்.

tic_logoஎத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் நழுவவிட்ட தமிழர் போராட்ட வரலாறு இன்று ஆரம்பிக்கப்பட்ட புள்ளிக்கே மீண்டும் வந்து நிற்கிறது. வன்னியில் மக்கள் மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தமிழ்பேசுவோரும் இதனை உணர்ந்து செயற்ப்பட வேண்டிய காலம் இது.

கடந்த தமிழ்பேசும் மக்களின் போராட்டப் பாதையில் பல ஒற்றுமைப்படுத்தும் ஒன்றிணைக்கும் கூட்டுமுன்னணி அமைக்கும் செயற்ப்பாடுகள் நடைபெற்றபோதும் அவை முன்னேற்றம் காணாமைக்கான காரணங்களை மீளப்பார்த்து விமர்சித்து தவறுகள் மீளவும் நடைபெறாது செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதும், தொடரச்சியாக முன்னேறிச் செல்லும் வழிமுறைகளை உருவாக்கிக்கொண்டும் திட்டமிட்டு செயற்ப்படுவது அவசியமானது. அதேவேளை விடுதலைப் புலிகள் உட்பட அத்தனை அமைப்புக்களையும் உள்ளடக்கிய முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளதையும், முரண்பட்ட அரசியல் நோக்கம் கொண்டவர்களும் இணைந்து செயற்ப்படும் தளம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

மார்ச் 22 அன்று தமிழர் தகவல் நடுவம் TIC ஒழுங்கு செய்த கூட்டம் தமிழர் தகவல் நிலையத்தின் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாணவர் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்ட அரசியல்ப் பின்னணிகளை கொண்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர், தமிழ் மாணவர் பேரவையினரின் உரைகளுடன் கூட்டம் ஆரம்பமானது.

தமது போராட்டம் கல்வி தரப்படுத்தலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது என்றும் திட்டமிட்ட அரசியல் நோக்கு இதற்கு இருக்கவில்லை என்றும் அன்று அப்போதுள்ள பிரச்சினைகளுக்காகவே அது செயற்ப்பட்டது என்றும் மாணவர் பேரவை சார்பாக ஒருவர் கருத்து முன்வைத்தார்.

தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால கர்த்தாக்கள் பற்றியும் பேசப்பட்டது. இவை போன்ற பல அமைப்புக்கள் ஆரம்பகாலத்தில் உருவாகி அவை தொடர்ந்து செயற்ப்படாமல் போயிருந்தன என்றும் இந்த ஆரம்பகால நடவடிக்கைகளுக்கு இங்கு முன்னுரிமை கொடுக்காமல் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தற்போதய ஈழத்து நிலைமைகள் பற்றியும் பேசவேண்டும் என்ற கருத்துக்கள் கூட்டத்தில் எழுந்தன.

கூட்டத்தை ஓழுங்கு செய்தவர்கள் இக் கூட்டமானது எது சரி? எது பிழை? என விவாதிக்க முடியாது, இங்கு யாரும் அதற்கு பதில் வைத்திருக்கவில்லை, இக் கூட்டத்தின் நோக்கம் ஒரு சமூகமாக Political Initiationஜ உருவாக்க தனிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்ச்சியே இது என்றனர்.

கூட்டத்தில் இங்கு தமிழர்க்கு positive ஆன கருத்துக்களையே முன்வைக்கும்படி ஒரு கருத்து எழுந்த போது: தமிழர்களுக்கு சார்பான (positive) விடயங்களை முன்வைப்பதே நல்லது என்றாலும் விமர்சனம் மிக மிக முக்கியம் என்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள்இ எது? என்ன? எப்படி உருவானது? சரி பிழைகள் போன்றன விமர்சனம் மூலமே தீர்க்க முடியும் என்றும் அதிலிருந்தே முன்னேற முடியும் என்றும் அங்கே கருத்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் இயக்கங்கள் reactive ஆகவே நடந்துள்ளார்கள் என்றும் proactive ஆக செயற்ப்படவில்லை என்றும் இது ஈழத்திலும் போராட்ட நடவடிக்கைகளிலும் கூட இந்த நிலையே உள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது.

மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கவும் அதனூடாக தமிழர்க்கான எதிர்காலத்தை உருவாக்கும் (நிலைமைகளை) கூட்டணிகளை,

ஆதரவாளர்கள் அமைப்புக்களை, உருவாக்க வேண்டும் என்றும் கருத்து பரவலாக பரிமாறப்பட்டது. வித்தியாசமான கருத்துக் கொண்டவர்களையும் முரண்பாடான கருத்துக் கொண்டவர்களையும் இணைத்துச் செயற்ப்படக் கூடிய நிலைமைகளை உருவாக்கவே TIC விரும்புவதாக அங்கு கூறப்பட்டது. அது இக் கூட்டத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. இதற்கு உதாரணமாக இந்திய அமைச்சர் ப சிதம்பரம் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்ப்படாது இருப்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து செயற்ப்பட்டதாலேயே எமது போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மாணவர் பேரவையின் விடயங்கள் ஒரு பொருட்டாக என்றுமே இருந்ததில்லை என்றும் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தை விட வித்தியாசானமான சூழ்நிலையில் இருப்பதாயும், கிழக்கு மாகாணத்தவர்களின் அரசியல் நிலைப்பாடு வடக்கு மாகாணத்தவர்கள் போன்று அல்ல என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது. இதைவிட முஸ்லீம்கள் மலையக மக்கள் பற்றிய அவர்களது நிலைப்பாடுகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஈழப் போராட்டம் தோல்வியுற்று விட்டது, இப்போராட்ட நடவடிக்கைகள் காரணமாகவே 60சத வீதமான மக்கள் வட கிழக்கு பிரதேசங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறி வாழும் நிலை உருவானது, ஆகவே சிறுபான்மையினர் இலங்கையின் எந்தப் பிரதேசங்களில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்கும் வகையிலும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய வகையிலுமான தமிழ் பேசும் மக்களின் அரசியல்த்தீர்வு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இங்கு குறிப்பிட்ட ஈழப்போராட்டத் தோல்வி என்பது தமிழர்களிடையேயும், இலங்கையிலும், இந்திய உறவிலும, சர்வதேச உறவிலும் தோல்விகளை ஏற்ப்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.

புனர்வாழ்வு, அரசியல்ப் புனர்த்தானம் செய்தல் போன்ற வேலைகளினுடாக தமிழர்க்கான அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இபபடியான அரசியல்த் தலைமைகள் மேலெழ முடியாமல் கடந்த காலங்களில் அடக்கப்பட்டுள்ளது என்றும் அங்குகூறப்பட்டது.

நீண்டகாலமாக நடைபெற்ற இப்போராட்டத்தை தொடர்ச்சியான அரசியல்ப் போராட்டமாக, தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வரை தொடர நாம் முனைய வேண்டும் என்றும் இந்நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புக்களும் பொதுவான அரசியல்த் தலைமையின் கீழ் உடன்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் அடுத்த கட்டமாக ரவி சுந்தரலிங்கத்தினால் சுருக்கமாகவும் நான்கு பிரிவாகவும் வரையப்பட்ட பிரதிகள் கையளிக்கப்பட்டது. Navigating our peoples struggle through uncharted territories Please read Ravi’s Document here.

இது பற்றி ரவி சுந்தரலிங்கம் தனது கருத்தை முன்வைக்கும் போது தமிழீழம் என்ற பதத்தை கைவிடவேண்டும் இது இன்று சரியான பாதையை தெரிவுசெய்வதற்கு தடையாக இருப்பதையும், அதிகாரப் பரவலாக்கல், எமது பிரதேசத்தை நாமே முன்னேற்றும் உரிமைகள், பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எமது பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜக்கியத்திற்கான முன்னெடுப்புக்கள் பற்றியும் அதில் ஏற்ப்பட்ட தடங்கல்கள் பற்றியும் அதில் தோழர் டக்ளஸ்சின் ஆதரவுகள் பற்றியும் கூறினார். அதேவேளை ENC (Eelam National Council) ஜ மீள புனரமைப்பு செய்யக்கூடாதா என்றும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் ரவி சுந்தரலிங்கத்தின் எழுத்து சமர்ப்பித்தலும் அவரின் விளக்கமும் முக்கியமாக இடம் பெறவிருந்ததும் பின்னர் வேறு விடயங்கள் இழுத்துச்செல்லும் வழியில் சென்றதாலும் நேரம் போதாமையாகியது.

இந்த அரசியல் முன்னெடுப்புக்களுக்கு முன்னதாக தமிழர்கள் சாரி சாரியாக கொல்லப்படுவது அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே அரசியல்த்தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் இதுவே எமக்கு முன் உள்ள முக்கிய விடயம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.

அதேபோல TYO, BTF போன்ற அமைப்புகள் போராட்டம் பற்றிய தவறான கருத்துகளுடன் செயற்பபடுகின்றது, புலி ஆதரவு மட்டுமேதான் போராட்டம் என்று கருதுகிறார்கள் எனவும் சுட்டிக் காட்டி அவர்கள் புலிகளின் கொடிகளுடனும் பிரபாகரனின் படத்துடனும் செய்யும் போராட்டங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை BTFன் சமீபத்திய போராட்டங்களில் புலிகளை ஆதரிக்காதவர்களும் பெருவாரியாக பங்குபற்றியுள்ளனர் என்ற கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசியல் தலைமை வகிப்பில் புலிகள் தவறிவிட்டார்கள், இதன் காரணமாகவே போர் நிலைமைகள் மோசமடைந்தன, அதனாலேயே மக்கள் பாதிப்படைகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்றும் அதேவேளை யுத்த நிறுத்தம் கொண்டுவர நாம் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் தமிழ் மக்களின் மீதான கொலை சாதாரணமானது அல்ல, இது Genicide என்றும் அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும், அதேவேளை அரசியல்த்தீர்வும் நிரந்தர தீர்வாக கொண்டுவரப்பட வேண்டும், என்றும் கருத்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள மருத்துவமனை இடமாற்றம் செய்யப்ட்டது மனித உரிமை மீறல் எனவும் அதைவிட பாதுகாப்பு வலயத்தினுள் குண்டுகள் போடுவதும் அடிப்படை உணவுகள் வழங்கப்படாது இருப்பதும் மனித உரிமை மீறல்களே என்றும் இவை பற்றிப் பேச எம்மிடம் பொதுவான அமைப்பு இல்லை அப்படியான ஒரு பொது அமைப்பு எமக்கு இப்போதுள்ள தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஒரு பொதுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பட்டனர். இதற்கான முன்முயற்ச்சியில் ஈடுபடுவது என்றும் அதில் ஒரு கட்டமாக BTF உடன் கதைப்பதற்கு ஒரு குழு தெரிவாகி உள்ளது. ஜக்கிய இலங்கைக்குள்ளேயே உள்ள சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் பற்றிய கூட்டங்களில் இதர சிங்கள முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் வகை செய்ய வேண்டும் என்ற கருத்தை எழுப்பிய போது இதற்கு பதிலளித்த வரதகுமார் இதற்கான நடவடிக்கைகளில் தாம் அக்கறையுடன் செயற்ப்படுவதாக கூறினார்.

திம்பு பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்டையிலிருந்தே தமிழர்களின் அரசியல்த் தீர்விற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதன் அடிப்டையிலேயே நாம் ஒரு பொது நிலைப்பாட்டை தமிழர்களிடையேயும் தமிழ் அரசியல் அமைப்புக்களிடையேயும் உருவாக்கி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் கூட்டம் முடிவு பெற்றது.

ஜி 20 மாநாடு தொடர்பாக லண்டனில் ஆர்ப்பாட்டம்

protest_london.jpgஉலக பொருளாதார நெருக்கடி பற்றி அடுத்த வாரம் லண்டனில் நடக்கவிருக்கும் 20 முக்கிய நாடுகளின் மேனிலை மாநாட்டுக்கு முன்னொடியாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று லண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்துச் சென்றார்கள்.

வறுமை, வேலைவாய்ப்புகள், பருவநிலை மாற்றங்கள் ஆகியவை குறித்து அவசர நடவடிக்கை வேண்டும் என்று குரல் எழுப்பிய இந்த அணிவகுப்பாளர் கூட்டணியில் பல தொழிற்சங்கங்கள் பல அறநிலையங்கள், மதசார்புக் குழுக்கள், சுற்றாடல் பாதுகாப்பு பிரச்சாரகர்கள், இப்படிப் பலர் இணைந்திருந்தார்கள். தாம் சொல்ல விரும்புவது சமாதானமான முறையில் போய் சேரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனாலும்,  அடுத்த சில தினங்களில் நடத்தப்படவுள்ள மற்றைய ஆர்ப்பாட்டங்கள் தெருக்கலவரங்களை உருவாக்கக்கூடும் என்று கருதும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல பொருளாதார நெருக்கடி பற்றிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஜெர்மனியிலும் நடத்தப்படுகின்றன.

முன்னாள் நீதிவானுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

மோசடி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நீதிவான் ஒருவருக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக்கண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ரவிந்திர பிரேமரட்ன 1,500 ரூபா அபராதம் விதித்தார்.
அத்துடன் மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அனுப்ப 6 இலட்சம் ரூபாவை கட்டணமாக அறவிட்ட இவர் பின்னர் அவரை அனுப்ப முடியாமல் பணத்தை காசோலையாகக் கொடுத்துள்ளார்.

6 இலட்சம் ரூபாவையும் இவர் மூன்று தடவைகள் பகுதி பகுதியாக காசோலைகளைக் கொடுத்துள்ளார். அந்த இளைஞரின் தாயார் அக்காசோலைகளை வங்கியில் பணமாக மாற்றக்கொடுத்தபோது அக்காசோலை கணக்கிற்கு பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பெண் அவருக்கு எதிராக வழங்குத் தொடர்ந்திருந்தார்.

வருண்காந்திக்கு 2 நாள் நீதிமன்ற காவல்

india-varun.jpgஉத்தர பிரதேசம் மாநிலம் பீலிபட் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் வருண்காந்தி மீது தேர்தல் பிரசாரத்தின் போது மததுவேசத்தை வெளிப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு உள்ளது.

பீலிபட் நீதிமன்றத்தில் ஊர்வலமாக சென்று ஆஜரானார். அவரை திங்கட்கிழமை வரை காவலில வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே அவருக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அதையும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஊர்வலத்தில் பா.ஜ.க தொண்டர்களுக்கும், போலீஸ்சாருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பீலிபட் தொகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் உயர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.  மேற்படி கடத்தல் சம்பவமானது யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்பதாகும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் கடத்தப்பட்டமையால் மாணவர்களின் கல்வி நலனும் பல்கலைக்கழகத்தின் இயல்பு நிலையும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்விச் சமூகம் மீது இவ்வாறான கொடுமையான நடைமுறைகளையும் அணுகுமுறைகளையும் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி வேண்டுகின்றோம். அவரை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.செ.கஜேந்திரனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூடாக தேநீர் அருந்தினால் ஆபத்து

cap-of-tea.jpgஅதிக சூட்டுடன் ஆவி பறக்க தேநீர் அருந்துவதால் தொண்டையில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுடச்சுட தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தான் இது. உங்களின் இந்தப் பழக்கத்தால் தேவையில்லாமல் ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்கள்.

சூடாக தேநீர் அருந்துவதால் தொண்டயில் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெஹ்ரானைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ரெஸா மலெக்சாதே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், லண்டனில் மேற்கொண்ட இந்த ஆய்வில், தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 பேரின் தேநீர் அருந்தும் பழக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் புற்று நோய் பாதிப்பில்லாத 570 பேரின் தேநீர் அருந்தும் பழக்கமும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இதில், கோப்பையில் தேநீர் ஊற்றிய 4 நிமிடங்கள் கழித்து அதைப் பருகுவோரைக் காட்டிலும், 2 நிமிடங்களுக்குள் தேநீரைப் பருகி முடிப்போருக்கு தொண்டைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் தேநீர் குடிப்பதற்கும் புற்று நோயுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

karunanithi.jpgமுதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவ்வறிக்கையில், “அரசுக்கு  ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள்  நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய  மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது  என்பதற்காக  காங்கிரசோடு  கூட்டணி என்று கடைசி வரை   ஏமாற்றி வந்தது  யார்  என்பதை  தமிழ்நாடு அறியும்.
 
இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள்  நாங்கள் என்பதையும் –  நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா  செய்தோம் என்பதையும்  தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்