எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் சேகரிப்பு

Wanni_War_Boat_Refugeesவவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், அவற்றை மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாகப் பெற்றுக்கொடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பரோபகாரிகளும், நிறுவனங்களும் அமைப்புகளும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக புத்தாடைகள், உலருணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல், பிஸ்கட், பால் மா, தேயிலை, பற்பசை பற் தூரிகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் சேகரித்து வருகின்றமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவற்றை அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் லொறிகள் மூலம் இலவசமாக வவுனியாவுக்குக் கொண்டு சென்று வவுனியா அரச அதிபரிடம் ஒப்படைக்க முடியுமெனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை 0112431590 மற்றும் 0112431579 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளரையோ அல் லது 0112395513 என்ற இலக்கத்துடன் அமைச்சின் செயலாளர் யூ. எல். எம். ஹலால்தீனையோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணத்திற்காக படையினர் இழப்பை வெளியிட முடியாது -ஐ.தே.க. எம்.பி.யின் கேள்விக்கு அரசு பதில்

dinesh_gunawardena.jpgயுத்த நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை விபரங்களை பாதுகாப்புக் காரணமாக வெளியிட முடியாதென அரசாங்கம் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிஹார மற்றும் ரேணுகா ஹேரத் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுந் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த மறுப்பை வெளியிட்டார்.

2007 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2008 ஆண்டு ஜனவரி மாதங்களில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களுக்கிணங்க வடக்கு, கிழக்கு யுத்த நடவடிக்கைகளின் போது அந்தந்தக் கால எல்லைகளுக்குள் ஒவ்வொரு திகதியிலும் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை சபைக்கு அறிவிக்குமாறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதில் ரஞ்சித் அலுவிஹார எம்.பி.யின் கேள்விகளுக்கு முதலில் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன , உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரினது பெயர், விலாசம் விபரங்களை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென கூறினார்.

இதேநேரம், எண்ணிக்கையை மட்டுமாவது கூறமுடியாதாவென ரஞ்சித் அலுவிஹார கேள்வி எழுப்பியபோது; எண்ணிக்கையையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது. விசேடமாக ஏதேனும் விபரங்கள் தேவையாயின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். இப்போது பகிரங்கமாக எதனையும் கூற முடியாது என்று தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.

அத்துடன் ரேணுகா ஹேரத்தின் கேள்விக்கும் இம்மாதிரியான பதிலே இருப்பதாக அமைச்சர் குணவர்தன தெரிவிக்கவே ரேணுகா ஹேரத் மேலதிக கேள்வி எதுவும் கேட்க முற்படவில்லை.

தமிழ் மக்களுக்காக சிறை செல்லவும் நான் தயார் – விமல் வீரவன்சவிற்கு மனோ கணேசன் பதில்

mano.jpgதமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் இனத்திற்கான எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறிய கருத்துத் தொடர்பில் கொழும்பு நிப்போன் ஹொட்டலில் நடத்திய அவசர பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:

நான் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டதாகவும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்பை நான் மீறியுள்ளதாகவும் விமல் வீரவன்ச நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கூற்றை நான் அடியோடு மறுக்கின்றேன்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். எனது அரசியல் அன்றும், இன்றும், என்றும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதாகும். எங்களது நிகழ்ச்சி நிரலில் வன்முறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை. ஆனால், நாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களின் உள்ளக அரசியல் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை ஆதரிக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் தோழமை சக்திகளுடன் இணைந்து எமது இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றோம்.

இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது. தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமைகளை எப்போதும் நிராகரிக்கும் பேரினவாதியான விமல் வீரவன்சவிற்கு எங்களது ஜனநாயக செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அரசியல் அமைப்பு பற்றியும், மாவீரர் நிகழ்வுகளை பற்றியும், ஆயுத வன்முறை கலாசாரத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு இந்த விமல் வீரவன்சவிற்கு என்ன தகுதி இருக்கின்றது? நான் எனது அரசியலை அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு கைக்குண்டு எறிந்துவிட்டு ஆரம்பிக்கவில்லை.

புலிகள் இயக்கத்திற்கு முன்னரே 1989ஆம் வருடத்திலேயே கண்டி புனித தலதா மாளிகையை தாக்கி கொள்ளையடிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க கட்சிக் குழுக்கூட்டத்திற்கு கைக்குண்டை கொண்டு சென்று வீசி பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி அபயவிக்கிரமவை கொலை செய்துவிட்டு, நாட்டின் அன்றைய தினத்தின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை படுகொலை செய்ய முயற்சிக்கவில்லை. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கவில்லை. 

நிறை குறைவான பாண் உற்பத்தி; பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு

காலி மாவட்டத்தில் நிறைகுறைவான பாண் உற்பத்தி செய்து விற்பனை செய்த 26 பாண் பேக்கரி உரிமை யாளர்களை காலி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

காலி மாவட்டச் செயலாளர் அசோகா ஜயசேகரவின் பணிப்புரையின் பேரில் மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இவர்களைக் கைது செய்துள்ளனர். இவர்களுக்கெதிராக காலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து 12,000 உணவுப் பொதிகள் விமானத்தில் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தோகையான மக்களுக்கு விநியோகிக்கவென நேற்றைய தினமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப் படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக வும் அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்ததிலிருந்து விமானப் படையினர் எந்த நேரத்திலும் உதவும் வகையில் முழுமையான தயாரில் இருந்தனர்.

21ம் திகதி 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளை அவசரமாக விமானம் மூலம் படையினர் எடுத்துச் சென்றனர். அதேபோன்று, 22ம் திகதி விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 17 ரக விமானத்தின் மூலம் ஆறாயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் விமானப் படைத் தலைமையகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. நேற்றைய தினம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான சமைத்த உணவுப் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

இரத்மலானை விமான நிலையத்திலிரு ந்து வவுனியா விமானப் படைத் தலைமையகத்தின் ஊடாக கிளிநொச்சிக்கு இந்த உணவுப் பொதிகள் கொண்டு செல்லப்பட்டன என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஹெல உறுமய இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த முயல்வதுடன் வாக்கும் கேட்கின்றனர்

sri-lanka-election.jpgஹெல உறுமய போன்ற கட்சிகள் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயலுகின்றன. மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான யோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பில் நடைபெற்ற ஐ.தே.க.பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது கேள்வி எழுப்பினார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் நாட்டில் ஒரு முக்கிய தேர்தல் மக்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகரித்துவருகிறது என்றார்.

சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தமது உரையில் (உண்மையான சம்பவங்களை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பல ஊடக வியலாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மேல் மாகாண சபைத்தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்: மாகாண சபையின் மூலம் நீர்கொழும்பில் ஆளும் கட்சியினர் என்ன செய்தனர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பில் எத்தனைபேர் சித்திபெற்றனர். ஐ.தே.க.ஆட்சியின் போது தனியார் கத்தோலிக்க பாடசாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசு அடிப்படைவாதத்துடன் செயற்படுகிறது.

மேல்மாகாண சபைத்தேர்தலில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். ஊழல் மோசடியற்ற ஒரு அரசை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் நீர்கொழும்பு தொகுதியில் இருந்து முவரும் வெற்றிபெறுவார்கள் என்றார்.

அதிமேற்றாணியாரின் பெயரில் போலியான துண்டுப் பிரசுரம்

கொழும்பு அதிமேற்றாணியார் பேரருட்திரு ஒஸ்வல்ட் கோமிஸின் பெயரைப் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்துக்காக போலியான துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் சமாதானம் மலர்ந்து வரும் இந்தக் காலத்தில் மதங்களுக்கிடையே குரோதங்களை வளர்க்கும் வகையில் பாரதூரமான சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதற்குச் சில குழுக்கள் முயற்சிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக கத்தோலிக்கர்கள் ஒன்றுதிரள வேண்டுமென்று குறித்த போலி துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான துண்டுப் பிரசுரமொன்றைத் தாம் வெளியிடவில்லையென்றும் இவற்றை விநியோகிக்குமாறு சில தேவாலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இடமளிக்க வேண்டாமென்றும் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் கண்ணீரைத் துடைக்கவே தேர்தலில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது – அஸ்லம் தாலிப்

election.jpgமுஸ்லிம் சமுதாயத்தின் கண்ணீரைத் துடைக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்தேன். என் போன்ற இளைஞர்கள் நம் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள இன்னல்களை இனம் கண்டு சேவை செய்ய முன்வர வேண்டுமென கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அஸ்லம் தாலிப் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அஸ்லம் தாலிப் மேலும் தெரிவிக்கையில்; பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்ற மூத்த அரசியல் வாதிகள், முஸ்லிம் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் பிதற்றிப் பேசி வருகின்றனர்.

கொழும்பில் சீரான நீர் வடிகாலமைப்பு இல்லை. சேரிப் புறங்களில் சிறு வீதிகள் சிதைந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒழுகிக் கரைகின்றன. இவற்றில் கவனமெடுத்து சமுதாய ஏழை எளிய மக்களின் துயரங்கள் துடைக்கப்படவே நான் இத் தேர்தலில் களமிறங்கினேன். இதேபோல கொழும்பு முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஏன் இந்த அவல நிலை. வேறு மாவட்டங்களில் எமது முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வெற்றிக் கம்பங்களை எட்ட முடியுமானால் ஏன் எம்மால் முடியாமலுள்ளது. யார் சிந்திக்கின்றார்… நான் கூறிய உண்மைகளை என்னால் கூட நம்ப முடியவில்லை தான். ஆயினும் நாம் எல்லோரும் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும் என்றார்.

இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும். எரிக்சொல்ஹேம்.

eric-solheim.jpgஇலங்கை நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நோர்வே நாட்டின் அமைச்சர் எரிக்சொல்ஹேம் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுகின்ற இருதரப்பினரும் யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காணமுடியும் என நம்பினர். ஆனால் இருதரப்பினரும் ஒத்துழைத்திருந்தால் இன்று இடம்பெற்றுள்ள இழப்புக்களைத் தவிர்த்திருக்க முடியும்.

மேலும் புலிகள், தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறுகின்றனர், அவ்வாறாயின் யுத்த சூனியப் பிதேசத்தில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்வதை தவிர்த்து அவர்களது விருப்பிற்கேற்ப வெளியேற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 20 மில்லியன் நோர்வேஜியன் குரோண்களை இலங்கை அரசிற்கு ஒதுக்கியுள்ளாதாகவும் இருதரப்பினரும் சமாதான மேசைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றிற்கான வழியைத் திறந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனோவுக்கு அல்லது விக்ரமபாகுவுக்கே மேல் மாகாணத் தேர்தலில் வாக்களியுங்கள்- கூட்டமைப்பு கோரிக்கை

election.jpgஜனநாயக மக்கள் முன்னணி அல்லது இடதுசாரி ஐக்கிய முன்னணி சார்பான வேட்பாளர்களே மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான என். ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளிட்டிருக்கும் ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்திருப்பதாவது; எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் முன்பாக இருக்கும் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

எனவே, ஒன்றில் மனோ கணேசன் எம்.பி.யினால் (ஜனநாயக மக்கள் முன்னணி) நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த 2 அணிகளில் எதனை தெரிவு செய்வதென்பது அவரவரைப் பொறுத்தது. இந்த 2 அணிகளுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோடு இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.